/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சபரிமலை - சித்ரதுர்கா 900 கி.மீ., பறந்த புறா
/
சபரிமலை - சித்ரதுர்கா 900 கி.மீ., பறந்த புறா
ADDED : ஜன 24, 2026 05:21 AM

சித்ரதுர்கா: சபரிமலையில் பறக்க விடப்பட்ட புறா, 900 கி.மீ., பறந்து தன் சொந்த இருப்பிடமான சித்ரதுர்காவை அடைந்தது.
கிராமங்களில் இப்போதும் புறாக்களை பறக்க விடும் போட்டி நடக்கிறது. ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு பறக்க விடப்படும். புறாக்களுக்கு நினைவு சக்தி அதிகம். எவ்வளவு துாரம் பறந்தாலும், தன் இருப்பிடத்துக்கு திரும்பும்.
சித்ரதுர்கா மாவட்டம், மொளகால்மூரு தாலுகாவின், தளவாரஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ராஜு. இவர் புறா வளர்க்கிறார். அந்த புறாவுக்கு, 'மதகிரி' என, பெயர் சூட்டியுள்ளார். தான் வளர்க்கும் புறாவின் நினைவு திறனை சோதிக்க முடிவு செய்தார். கிராமத்தில் இருந்து சிலர் அய்யப்ப மாலை அணிந்து, சபரிமலைக்கு புறப்பட்டனர். அவர்களிடம் ராஜு, தன் புறாவை கொடுத்து சபரிமலையில் இருந்து பறக்க விடும்படி கூறினார்.
அதேபோன்று, ஓபண்ணா என்பவரும் தன் புறாவை கொடுத்தார். இரண்டு புறாக்களையும் பாக்சில் போட்டு, அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு கொண்டு சென்றனர். டிசம்பர், 31ம் தேதி மதியம் ஒரே நேரத்தில், இரண்டு புறாக்களையும் சபரிமலையில் இருந்து பறக்கவிட்டனர்.
ராஜுவின் புறா, 900 கி.மீ., துாரம் கடந்து, ஜனவரி, 21ம் தேதி மதியம், 1:30 மணிக்கு, தன் இருப்பிடமான தளவாரஹள்ளியை அடைந்தது. இவ்வளவு துாரம் பறந்து, தன் இருப்பிடத்தை அடைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அனைவரும் புறாவை பார்க்க கூட்டம், கூட்டமாக வருகின்றனர். ஓபண்ணாவின் புறா இன்னும் திரும்பவில்லை.

