மண் சரிந்து இறந்த மூன்று தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
மண் சரிந்து இறந்த மூன்று தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
ADDED : ஏப் 11, 2026 04:16 AM
ஷிவமொக்கா: பணியின் போது, மண் சரிந்து உயிரிழந்த மூன்று தொழிலாளர்களுக்கு, மாநில அரசு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.
ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகர் தாலுகாவின் ஹுலிகல் காட்டில் சாலையை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. நேற்று முன்தினம் மதியம், தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்தது.
இப்பகுதியில் சில நாட்களுக்கு முன், கனமழை பெய்ததில், மண் தளர்ந்திருந்தது. இதே இடத்தின் கீழ்ப்பகுதியில் பணி நடந்த போது, மண் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது.
இதுகுறித்து, ஹொசநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், தீயணைப்பு படையினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ராகவேந்திரா, 37, ராஜு, 30, ஷபீர், 40, ஆகியோர் உயிரிழந்தனர். பரமேஷ், சுமந்த் உட்பட நால்வர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
இறந்த மூன்று தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, கர்நாடக அரசு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.
இது குறித்து, முதல்வர் சித்தராமையா 'எக்ஸ்' வலைதளத்தில் கூறியுள்ளதாவது:
ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகர் தாலுகாவின் ஹுலிகல்காட்டில், திருப்பத்தில் சாலை தடுப்புச்சுவர் கட்டும் பணி நடக்கும் போது, மண் சரிந்து மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த தகவலை கேட்டு மனம் வருந்தினேன்.
அவர்களின் ஆத்மாவுக்கு அமைதி கிடைக்கட்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு, இழப்பை தாங்கும் சக்தியை அளிக்கட்டும் என, இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். சம்பவம் தொடர்பாக, மாவட்ட பொறுப்பு அமைச்சர் மது பங்காரப்பாவுடன் பேசினேன்.
குடும்பத்துக்கு ஆதாரமாக இருந்த மூவர் இறந்தனர். மனிதநேய அடிப்படையில், இவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
