அணிவகுக்கும் தேர்தல்கள்:பா.ஜ., - காங்., - ம.ஜ.த.,வுக்கு சவால்
அணிவகுக்கும் தேர்தல்கள்:பா.ஜ., - காங்., - ம.ஜ.த.,வுக்கு சவால்
ADDED : ஏப் 15, 2026 03:22 AM

பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளுக்கு, சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து அடுத்தடுத்த தேர்தலுக்கு, அரசியல் கட்சிகள் தயாராக வேண்டியுள்ளது. இந்த தேர்தல்கள், அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக தயாராகின்றன.
பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளின் இடைத்தேர்தலை முடித்து கொண்டு, காங்கிரஸ், பா.ஜ., தலைவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு அமர்ந்துள்ளனர். ஆனால் அடுத்தடுத்த தேர்தல்கள் அணி வகுக்கின்றன. தேர்தல் சீசன் துவங்குகின்றன.
அதிகாரிகள் தர்பார்
கடந்த ஆறு ஆண்டுகளாக, அதிகாரிகளின் தர்பார் நடக்கும், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்துக்கு, ஜூன் இறுதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே தேர்தலுக்கு காங்கிரஸ், பா.ஜ., -- ம.ஜ.த., தயாராகின்றன; தொடர் கூட்டங்கள் நடத்துகின்றன. இந்த விஷயத்தில் பா.ஜ., மற்றும் ம.ஜ.த., ஒரு படி முன்னே உள்ளன. ஏற்கனவே தலைவர்களுடன் ஆலோசனை கூட்டத்தை துவக்கியுள்ளன; கருத்துகளை கேட்டு வருகின்றனர்.
ஜி.பி.ஏ., தேர்தலுக்கு, முன்னாள் தேசிய பொதுச்செயலர் ராம் மாதவை பொறுப்பாளராக, பா.ஜ., நியமித்துள்ளது. ராஜஸ்தான் முன்னாள் மாநில தலைவர் சதீஷ் புனியா, மஹாராஷ்டிரா எம்.எல்.ஏ., சஞ்சய் உபாத்யாயா ஆகியோர், துணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரின் ஐந்து மாநகராட்சிகளுக்கும் தலா ஒரு குழுக்கள், சட்டசபை தொகுதிகள் வாரியாக குழுக்களை அமைத்துள்ளது.
ஜி.பி.ஏ., தேர்தல் முடிந்த பின், பெங்களூரில் உள்ள 6,000 கிராம பஞ்சாயத்துகள், 239 தாலுகா, 31 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது.
மைசூரு, தாவணகெரே, மங்களூரு, ஷிவமொக்கா, துமகூரு மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதிக வெற்றி
இந்த தேர்தல்கள் முடிந்து, மூச்சு விடுவதற்குள் 2028 சட்டசபை தேர்தல் வந்துவிடும். அதற்கு தயாராக வேண்டியுள்ளது. ஜி.பி.ஏ., உட்பட மற்ற உள்ளாட்சிகள், மாநகராட்சிகளுக்கு நடக்கும் தேர்தல்களில், வெற்றி அதிகமானால், சட்டசபை தேர்தலுக்கு உதவியாக இருக்கும்.
இதை மனதில் கொண்டே, காங்கிரஸ், பா.ஜ., தலைவர்கள், உள்ளாட்சி தேர்தலை தீவிரமாக கருதுகின்றன.
இதில் வெற்றி பெற இப்போதிருந்தே தயாராகின்றனர்.
ஆளுங்கட்சியில் ஏற்பட்டுள்ள முதல்வர் மாற்ற குழப்பங்கள், ஊழல் குற்றச் சாட்டுகள், சில அமைச்சர்கள் மீதான விவாதங்களை பா.ஜ., அஸ்திரமாக பயன் படுத்துகிறது.
வாக்குறுதி
திட்டங்களால், மக்களுக்கு கிடைத்துள்ள லாபங்கள், தனக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் என, காங்கிரஸ் நம்புகிறது.
- நமது நிருபர் -
