பெங்., 7வது உலக திருக்குறள் மாநாடு முதல் தகவல் அறிக்கை வெளியீடு
பெங்., 7வது உலக திருக்குறள் மாநாடு முதல் தகவல் அறிக்கை வெளியீடு
ADDED : ஏப் 19, 2026 03:00 AM

சிவாஜி நகர்: பெங்களூரு புனித ஜோசப் பல்கலை கழகத்துடன், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், பெங்களூரு தாய்மொழி கூட்டமைப்பு இணைந்து, ஜூலை, 5ம் தேதி நடத்தவுள்ள 'உலக திருக்குறள் மாநாடு' தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டது.
சிவாஜிநகர் இப்ராஹிம் ஷாப் தெருவிலுள்ள தமிழ் கூட்டமைப்பு அலுவலகத்தில், நேற்று தமிழ் அமைப்பினருடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், பெங்களூரு திருவள்ளுவர் சங்க தலைவரும், கர்நாடக தாய்மொழி கூட்டமைப்பு தலைவருமான எஸ்.டி.குமார் கூறியதாவது:.
பெங்களூரு புனித ஜோசப் பல்கலை கழகத்துடன் பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், பெங்களூரு தாய்மொழி கூட்டமைப்பு இணைந்து, உலக திருக்குறள் மாநாட்டை பெங்களூரு புனித ஜோசப் பல்கலை கழகத்தில் ஜூலை, 5ம் தேதி நடத்த உள்ளன.
இது தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்பது தொடர்பான, 'திருக்குறள் உணர்த்தும் உலக அமைதியும் மாந்தநேயம் மாண்புகளும்' என்ற பொது தலைப்பும், அதற்குரிய துணை தலைப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
உலகில் உள்ள பல்வேறு அறிஞர்கள், பேராசிரியர்கள், தமிழ் சான்றோர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டு மலர் வெளியிடுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற மாநாடு கர்நாடக மாநிலத்தில் இதற்கு முன் நடந்ததில்லை. முதல் முறையாக ஒரு திருக்குறள் மாநாட்டை கர்நாடக தமிழர்கள் நடத்துகின்றனர். கர்நாடக தமிழர்கள் உறுதுணையாக இருந்து இணைந்து பணியாற்ற வேண்டுகிறோம். இந்த மாநாட்டுக்கான பல்வேறு குழுக்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
