ADDED : ஏப் 06, 2026 04:47 AM
தங்கவயல்: கே.எஸ்.ஆர்., பெங்களூரு- - மாரிகுப்பம் மெமு ரயில் மீண்டும் ஒயிட்பீல்டு ரயில் நிலையத்தில் இருந்து இன்று முதல் இயக்கப்படுகிறது.
கே.எஸ்.ஆர்., பெங்களூரில் இருந்து பல ஆண்டுகளாக 66532 என்ற எண் கொண்ட மெமு ரயில் தினமும் பகல் 2:50 மணிக்கு புறப்பட்டு, மாரிகுப்பத்துக்கு மாலை 5:00 மணிக்கு வந்தடைந்தது. கொரோனா காலத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டபோது, இந்த மெமோ ரயிலும் நிறுத்தப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு பின்னர், அனைத்து ரயில்களும் வழக்கமாக இயங்கிய போது, கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்தில் இட நெருக்கடி காரணமாக, மாரிகுப்பம் மெமு ரயில், ஒயிட் பீல்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
இந்த ரயில் தினமும் இயக்கப்பட்டு வந்தது. இதனால், மாரிகுப்பம் பயணியருக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டதால், கே.எஸ்.ஆர்., பெங்களூரிலிருந்து இயக்க கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தென் மேற்கு ரயில்வே முன் அறிவிப்பு இல்லாமல், இந்த மெமு ரயில் ஏப்ரல் 2ம் தேதி முதல் கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து பகல் 2:50 மணிக்கு மாரிகுப்பத்துக்கு புறப்பட்டது. இவ்விஷயம் பலருக்கும் தெரியவில்லை. இந்த ரயிலில் பயணம் செய்தவர்கள் வாட்ஸாப் மூலம் பிறருக்கு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி பிரானேஷ் கூறுகையில், ''கோடைக்காலம் என்பதால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதை தவிர்க்க மெமு ரயில் கே.எஸ்.ஆர்., பெங்களூரு -- மாரி குப்பம் வரை இம்மாதம் 2ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இன்று முதல் மீண்டும் ஒயிட் பீல்டு ரயில் நிலையத்தில் வழக்கம் போல் இயங்கும்,'' என்றார்.
