ADDED : மே 09, 2026 11:41 PM

இன்றைய காலத்தில் குழந்தைகள் பல விஷயங்களில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்துகின்றனர். இவர்களில் ஒருவராக பெங்களூரின் ஜஸ்வந்த் உள்ளார். இவருக்கு, 9 வயது தான் ஆகிறது. இதற்குள் கர்நாடகா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளார்.
மஹாதேவபுராவில் உள்ள கீதாஞ்சலி வித்யாலயா பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஜஸ்வந்த், நமது நாட்டின் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைநகரங்கள், நாடுகளின் தலைநகரங்கள் பெயர்களை, 2.9 நிமிடங்களில் சொல்லி விடுகிறார்.
இவரது திறமையை அங்கீகரிக்கும் வகையில், ஜஸ்வந்த் திறமையை அவரது பெற்றோர் வீடியோ எடுத்து, கர்நாடகா சாதனை புத்தக அமைப்புக்கு அனுப்பினர். அவர்களும் வீடியோவை பார்த்த பின், நேரில் சென்று ஜஸ்வந்த் திறமையை பரிசோதித்தனர்.
தனது திறமை பரிசோதித்தவர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு, ஜஸ்வந்த் செயல்பட்டதால், அவரது பெயரை கர்நாடகா சாதனை புத்தகத்தில் சேர்த்து உள்ளனர்.
இதுகுறித்து ஜஸ்வந்த் கூறுகையில், ''கர்நாடகா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயதில் இருந்தே மாநிலங்கள், நாடுகளின் தலைநகரங்களை என் பெற்றோர் எனக்கு சொல்லி கொடுத்தனர். எனக்கு பெருமை கிடைக்க அவர்களே காரணம். பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்களும் என்னை ஊக்குவித்தனர்,'' என்றார்.
- நமது நிருபர் -
