/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாலூரில் இன்று மறு ஓட்டு எண்ணிக்கை காங்கிரசின் தலைதப்புமா?
/
மாலூரில் இன்று மறு ஓட்டு எண்ணிக்கை காங்கிரசின் தலைதப்புமா?
மாலூரில் இன்று மறு ஓட்டு எண்ணிக்கை காங்கிரசின் தலைதப்புமா?
மாலூரில் இன்று மறு ஓட்டு எண்ணிக்கை காங்கிரசின் தலைதப்புமா?
ADDED : நவ 11, 2025 04:32 AM
கோலார்: உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி, மாலுார் சட்டசபை தொகுதியில் இன்று மறு ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளது. முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில், கோலார் மாவட்டம், மாலுார் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நஞ்சேகவுடாவும், பா.ஜ., வேட்பாளராக மஞ்சுநாத் கவுடாவும் போட்டியிட்டனர். மே 13ல் நடந்த ஓட்டு எண்ணிக்கையின்போது இருவரும் மாறி மாறி முன்னிலையில் இருந்தனர். முடிவில் 248 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரசின் நஞ்சேகவுடா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஓட்டு வித்தியாசம், மிகவும் குறைவாக இருப்பதால் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என, பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத் கவுடா வலியுறுத்தினார்.
'நியாயமான முறையில் ஓட்டு எண்ணிக்கை நடக்கவில்லை; முறைகேடு நடந்துள்ளது; மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும். நஞ்சேகவுடாவின் வெற்றியை ரத்து செய்ய வேண்டும்' என, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. ஆனால் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளன்று பதிவு செய்யப்பட்ட வீடியோ உட்பட சில ஆவணங்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே நஞ்சேகவுடாவின் எம்.எல்.ஏ., பதவியை ரத்து செய்து, மறு ஓட்டு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து நஞ்சேகவுடா, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றமும், மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதன்படி நவம்பர் 11ல் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தும்படி, கோலார் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகமும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
கோலாரின் டமக்கா அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை பல்கலைக்கழகத்தில் இன்று மறு ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளது. மொத்தம் 18 சுற்று ஓட்டு எண்ணிக்கைக்காக, ஒரே அறையில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடத்தை, கோலார் மாவட்ட கலெக்டர் ரவி உட்பட, உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஓட்டு எண்ணிக்கை நடக்கும் பல்கலைக்கழகம் சுற்றுப்பகுதிகளில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ரூமில் இருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மாலுார் சட்டசபை தொகுதி மறு ஓட்டு எண்ணிக்கை, கர்நாடகா மட்டுமன்றி, நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.

