/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ராஜண்ணாவை அபெக்ஸ் வங்கி தலைவராக்கியது நான் தான்'; முதல்வர் அணியில் இருப்பவருக்கு துாண்டில் வீசும் சிவகுமார்
/
'ராஜண்ணாவை அபெக்ஸ் வங்கி தலைவராக்கியது நான் தான்'; முதல்வர் அணியில் இருப்பவருக்கு துாண்டில் வீசும் சிவகுமார்
'ராஜண்ணாவை அபெக்ஸ் வங்கி தலைவராக்கியது நான் தான்'; முதல்வர் அணியில் இருப்பவருக்கு துாண்டில் வீசும் சிவகுமார்
'ராஜண்ணாவை அபெக்ஸ் வங்கி தலைவராக்கியது நான் தான்'; முதல்வர் அணியில் இருப்பவருக்கு துாண்டில் வீசும் சிவகுமார்
ADDED : டிச 22, 2025 06:34 AM

பெங்களூரு: ''முன்னாள் அமைச்சர் ராஜண்ணாவை, அபெக்ஸ் வங்கியின் தலைவராக்கியது நான் தான்,'' என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ''முதல்வர் பதவி விவகாரத்தில், எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை,'' என்று, ராஜண்ணா கூறி உள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ராஜண்ணா. துமகூரின் மதுகிரி எம்.எல்.ஏ.,வாகவும், முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர் அணியிலும் உள்ளார். சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கூடாது என்று குரல் கொடுப்பதுடன், சிவகுமாரிடம் இருந்து மாநில தலைவர் பதவியை பறிக்க வேண்டும் என்றும் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.
உறவு இல்லை இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெங்களூரு வீட்டில் ராஜண்ணாவை, சிவகுமார் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து நேற்று சிவகுமார் அளித்த பேட்டி:
ராஜண்ணா எங்கள் கட்சி எம்.எல்.ஏ., அமைச்சராக இருந்தவர். அவரை நான் சந்தித்து பேசியதில் என்ன தவறு உள்ளது. முதல்வருக்கு மட்டும் இல்லை, எனக்கும் ராஜண்ணா மிகவும் நெருக்கமானவர். எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்த போது, ராஜண்ணாவை அபெக்ஸ் வங்கியின் தலைவராக்கியது நான் தான். வேண்டும் என்றால் அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
சித்தராமையாவுக்கும், அவருக்கும் நெருங்கிய உறவு இல்லை. அந்த நேரத்தில் முதல்வர், ம.ஜ.த.,வில் இருந்தார். எனக்கு யாருடனும் கருத்து வேறுபாடு இல்லை. இதெல்லாம் ஊடகங்களின் உருவாக்கம். நான் யாருடனுடன் சண்டை போடும் நபர் இல்லை. யாருக்கு எதிராகவும் பேசியதும் இல்லை. சொந்த கட்சியினருக்கு எதிராக ஒரு போதும் பேசியது இல்லை.
சகோதரர்கள் முதல்வரும், நானும் சகோதரர்கள் போன்று உள்ளோம். ஒன்றாக வேலை செய்கிறோம். ம.ஜ.த.,வில் இருந்து விலகி காங்கிரசில் சித்தராமையா இணைந்ததில் இருந்து, அவருக்கும், எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பா.ஜ., தலைவர்கள் தேவையின்றி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். மேலிட தலைவர்களிடம் அடிக்கடி பேசுகிறேன்; இதில் எந்த தவறும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நிலைப்பாடு இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராஜண்ணா கூறியதாவது:
சிவகுமார் என்ன சொன்னாலும் சரி, எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன். நான் எப்போதும் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருக்கிறேன். சிவகுமார் கட்சியின் தலைவர். அவர் யாரிடம் வேண்டும் என்றாலும் பேசலாம்.
என்னை சந்தித்த போது கட்சியை ஒழுங்கமைக்க உங்கள் உதவி தேவை என்று கேட்டார். நான் சரி என்று கூறினேன். அதை தவிர வேறு எதுவும் அவர் என்னிடம் பேசவில்லை. பெலகாவி கூட்டத்தொடரின் போது அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி வீட்டிற்கு இரவு விருந்துக்கு சென்றோம். அது அரசியல்ரீதியானது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

