/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'போக்சோ' வழக்கில் எடியூரப்பா மீது ஐகோர்ட் அதிருப்தி! கண்டிக்கத்தக்க செயல் என கண்டனம்
/
'போக்சோ' வழக்கில் எடியூரப்பா மீது ஐகோர்ட் அதிருப்தி! கண்டிக்கத்தக்க செயல் என கண்டனம்
'போக்சோ' வழக்கில் எடியூரப்பா மீது ஐகோர்ட் அதிருப்தி! கண்டிக்கத்தக்க செயல் என கண்டனம்
'போக்சோ' வழக்கில் எடியூரப்பா மீது ஐகோர்ட் அதிருப்தி! கண்டிக்கத்தக்க செயல் என கண்டனம்
ADDED : ஏப் 07, 2025 10:30 PM

கடந்த 2024 மார்ச் 14ம் தேதியன்று, பெண் ஒருவர் பெங்களூரின் சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில், புகார் ஒன்றை அளித்தார். இதில், 'பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் வீட்டுக்கு, பிப்ரவரி 2ம் தேதி உதவி கேட்டு 17 வயது மகளுடன் சென்றிருந்தேன்.
அப்போது எடியூரப்பா, என் 17 வயது மகளை அறைக்குள் அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரியிருந்தார்.
இது அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பொய்யான புகார் என, பா.ஜ.,வினர் கருத்து தெரிவித்தனர். காங்கிரசார், 'இதை பற்றி விசாரிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர். பெண்ணின் புகாரின் படி, எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானது.
அதன்பின் இந்த வழக்கை கர்நாடக அரசு, சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றியது. அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.
எடியூரப்பா கைதாவதில் இருந்து தப்பிக்க, நீதிமன்றத்தை நாடி ஜாமின் பெற்று கொண்டார். நீதிமன்றமும், 'சம்பவம் நடந்ததாக கூறப்படும் எல்லையை தாண்ட கூடாது' என, நிபந்தனை விதித்திருந்தது.
அதன்பின் எடியூரப்பா இரண்டு முறை போலீசார் விசாரணைக்கு ஆஜராகி, விளக்கம் அளித்தார். தன் மீது பொய்யான குற்றச்சாட்டை பெண் சுமத்தியுள்ளார். அவர் உதவி கேட்டு வந்தது உண்மை.
அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து அனுப்பினேன். யாருடைய துாண்டுதலின்படியோ, என் மீது பொய் புகார் அளித்துள்ளார் என கூறினார்.
இதற்கிடையே எடியூரப்பாவுக்கு நெருக்கமான அருண், ருத்ரேஷ், மாரிசாமி ஆகியோர் வழக்கில் சாட்சிகளை அழிக்க முயற்சிக்கின்றனர், தன்னை மிரட்டுகின்றனர் என, புகார்தாரரான பெண் குற்றம்சாட்டினார்.
இது குறித்து எப்.ஐ.ஆர்., பதிவு செய்த சி.ஐ.டி., அதிகாரிகள், 2024 ஜூலையில் விரைவு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் விசாரணையை துவக்கிய நீதிமன்றம், மார்ச் 15ம் தேதி நேரில் ஆஜராகும்படி, எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை ரத்து செய்யும்படி, எடியூரப்பா உயர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றமும் சம்மனுக்கு தடை விதித்ததால், எடியூரப்பா நிம்மதி அடைந்தார்.
தன் மீது பதிவான எப்.ஐ.ஆர்., குற்றபத்திரிகையை ரத்து செய்யவும், ஜாமின் நிபந்தனையை தளர்த்த கோரியும், உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு, நீதிபதி பிரதீப் சிங் யெரூர் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, எடியூரப்பா சார்பில் ஆஜரான வக்கீல், 'என் கட்சிக்காரரை, சம்பவ எல்லையை விட்டு செல்ல கூடாது என, நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
'அவர் மூத்த அரசியல்வாதி என்பதால், டில்லிக்கு செல்ல வேண்டியுள்ளது. அவர் அரசியல் கட்சியின் பார்லிமென்ட் போர்டு குழு உறுப்பினர். எனவே நிபந்தனையை தளர்த்த வேண்டும்' என வாதிட்டார்.
அப்போது நீதிபதி பிரதீப் சிங் யெரூர், ''மூத்த அரசியல் தலைவராக இருந்து கொண்டு, கண்டிக்கத்தக்க செயலை செய்ய கூடாது. அவர்களின் நடவடிக்கை, மற்றவருக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். நம் ஒவ்வொரு செயலையும், மக்கள் கவனிக்கின்றனர் என்பதை மறக்க கூடாது,'' என அதிருப்தி தெரிவித்தார்.
எடியூரப்பா தரப்பு வக்கீல், 'மனுதாரர் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவிக்க, அரசு தரப்பு வக்கீல் கால அவகாசம் கேட்டதால், விசாரணையை வரும் 15ம் தேதிக்கு, நீதிபதி ஒத்திவைத்தார்.

