எரிபொருள் பற்றாக்குறை மீன் பிடிப்பு பணி பாதிப்பு
எரிபொருள் பற்றாக்குறை மீன் பிடிப்பு பணி பாதிப்பு
ADDED : ஏப் 14, 2026 06:04 AM

மங்களூரு: கடலோர மாவட்டத்தில், மீன்பிடி கப்பல்கள் கடலுக்குள் செல்லாமல், கரையிலேயே நின்றுள்ளன. எரிபொருள் மற்றும் காஸ் பற்றாக்குறையால் மீன் பிடிக்க செல்ல முடியாமல், மீனவர்கள் அவதிப்படுகின்றனர்.
பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வோரின் எண்ணிக்கை, அதிகமாக இருக்கும். மீனவர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் நடப்பாண்டு அதற்கு எதிர் மறையான சூழ்நிலை நிலவுகிறது. ஈரான், அமெரிக்கா இடையே போர் சூழ்நிலை காரணமாக, எரிபொருள், காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மீன்பிடி கப்பல்களுக்கு தேவையான எரிபொருள், காஸ் கிடைக்கவில்லை. எனவே பல மீனவர்களால் மீன் பிடிக்க செல்ல முடியவில்லை. கப்பல்கள் கடலுக்கு செல்லாமல், கரையில் வரிசையாக நின்றுள்ளன.
அது மட்டுமின்றி, வெப்பத்தின் தாக்கம் காரணமாக, கடல் நீரில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக மீன்கள் கடலின் ஆழத்துக்கு சென்றுள்ளன. மீன் பிடிக்க சென்றாலும், மீன்கள் கிடைப்பது இல்லை. மீனவர்களும் வருவாய் இல்லாமல் பரிதவிக்கின்றனர். இதற்கிடையே மீன்களின் இன விருத்தியை மனதில் கொண்டு, ஜூன், ஜூலை என, இரண்டு மாதங்கள் மீன் பிடிக்க விதிக்கப்படும் தடையை, மேற்கு கடலோர பகுதிகளில், மூன்று மாதங்களாக விஸ்தரிக்க ஆலோசிக்கப்படுகிறது. இது நடைமுறைக்கு வந்தால், வரும் நாட்களில் மீன்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
