சபாரி செல்லும் போது மொபைல் போன் பயன்படுத்த தடை வனத்துறை உத்தரவு
சபாரி செல்லும் போது மொபைல் போன் பயன்படுத்த தடை வனத்துறை உத்தரவு
ADDED : ஏப் 28, 2026 04:25 AM
பெங்களூரு: வன விலங்குகள் பாதுகாப்பு, சுற்றுலா பயணியரின் பாதுகாப்பை மனதில் கொண்டு, வனப்பகுதியில் சபாரி செய்யும் போது, மொபைல் போன் பயன்படுத்த வனத்துறை தடை விதித்துள்ளது.
இது குறித்து, வனத்துறை பிறப்பித்த உத்தரவு:
வனப்பகுதிகளில் சபாரி செல்லும் சுற்றுலா பயணியர், விலங்குகளை கண்டால் தங்களின் மொபைல் போனில், போட்டோ, வீடியோ எடுக்கின்றனர். இதனால் விலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. விலங்குகள் கோபமடைந்து சுற்றுலா பயணியருக்கு அபாயத்தை ஏற்படுத்தும்.
விலங்குகள், சுற்றுலா பயணியரின் பாதுகாப்பை மனதில் கொண்டு, சபாரி செல்லும் போது சுற்றுலா பயணியர், மொபைல் போன் பயன்படுத்த, வனத்துறை தடை விதித்துள்ளது.
சபாரிக்கு செல்லும் முன், அனைவரும் தங்களின் மொபைல் போன்களை, 'ஏரோபிளேன் மோடில்' வைக்க வேண்டும்.
மொபைல் போனில் செல்பி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வன விலங்குகளின் நடமாட்டத்துக்கு, இடையூறு ஏற்படுவதை தவிர்க்கவும், சுற்றுலா பயணியர் இடையே தேவையின்றி குழப்பம் ஏற்படுவதை தடுக்கவும், இந்த விதிமுறையை வனத்துறை கொண்டு வந்துள்ளது.
கர்நாடகாவில் சபாரி சிறப்பான முறையில் நடக்கிறது. மற்ற மாநிலங்களை போன்று, முழுமையாக மொபைல் போனுக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் விலங்குகள் உள்ள இடங்களின் தகவலை பகிர்ந்து கொள்வது, லைவ் வீடியோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வி லங்குகளின் இருப்பிடம் பற்றிய தகவல் வெளியே தெரிந்தால், ஒரே இடத்தில் அதிகமான வாகனங்கள் சேரக்கூடும் .
வாகனங்களால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். இது தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவை நடப்பாண்டு மே 17 க்குள், செயல்படுத்த வேண்டும். மொபைல் போன் தடை உத்தரவு, சபாரி வாகன ஓட்டுநர்கள், வழிகாட்டிகளுக்கும் பொருந்தும்.
புலிகள் தென்படும் இடங்களில், சபாரி வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சேராமல், பார்த்து கொள்ள வேண்டும். புலிகள் சரணாலயங்களை, நிசப்த மண்டலமாக அறிவிக்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
