ADDED : ஏப் 24, 2026 04:21 AM

பீதர்: பீதரில் பசவேஸ்வரா ரத உத்சவத்தின் போது, கீழே விழுந்த பக்தர் மீது தேர் சக்கரம் ஏறியதில், இரு கால்களை இழந்தவர் உயிரிழந்தார்.
பீதர் மாவட்டம் பசவகல்யாண் நகரில் பசவேஸ்வர ரத உத்சவம் நடந்தது. இவ்விழாவுக்கு, அண்டை கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் வருகை தந்திருந்தனர்.நேற்று காலை 6:30 மணியளவில் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், கால் தவறி கீழே விழுந்த அதே பகுதியை சேர்ந்த தன்ராஜ், 45, என்பவரின் இரு கால்களிலும் தேரின் சக்கரங்கள் ஏறியதில், இரு கால்களும் துண்டானது.
ரத்தம் வெளியேறிய நிலையில், மயக்கம் அடைந்தார். அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு முதலுதவி அளித்து, கலபுரகி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினர்.
ஆனால் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஐ.சி.யூ.,வில் தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று மாலை உயிரிழந்தார். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள், பெற்றோர் உள்ளனர்.
போலீசார் விசாரிக்கின்றனர்.
