பாலியல் தொல்லை: ஏட்டு கைது
பெங்களூரின், ஆர்.டி.நகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு ஒருவரை, சில நாட்களுக்கு முன், சுதந்திர பூங்காவில் பாதுகாப்புக்கு நியமித்திருந்தனர். அப்போது பூங்காவுக்கு வந்த இரண்டாம் ஆண்டு பி.யு.சி., மாணவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து, உப்பார்பேட் போலீஸ் நிலையத்தில் அவர் அளித்தார். போலீஸ் ஏட்டு, நேற்று கைது செய்யப்பட்டார்.
ரயில் மோதி மாணவர் பலி
பெங்களூரு புறநகர், நெலமங்களாவின் முத்தலிங்கனஹள்ளியில் வசித்தவர் யோகேந்திரா, 16. இவர் முதலாம் ஆண்டு பி.யு.சி., படித்தார். இவர் ஆசையாக வளர்த்த நாய், இரண்டு நாட்களுக்கு முன், காணாமல் போனது. இதனால் மனம் வருந்தினார். நேற்று காலையில் தன் பெற்றோரிடம் கூறாமல், நாயை தேடி சென்றார். முத்தலிங்கனஹள்ளி கேட் அருகில், ரயில் வருவதை கவனிக்காமல், தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது, ரயில் மோதி அவர் உயிரிழந்தார்.
விபத்தில் டெலிவரி பாய் பலி
நேபாளத்தை சேர்ந்த சுரேந்தர் பஹதுார், 38, கடந்த மூன்று ஆண்டுகளாக பெங்களூரில் வசிக்கிறார். நிறுவனம் ஒன்றில் டெலிவரி பாயாக பணியாற்றினார். நேற்று அதிகாலையில் டெலிவரி பொருளை சேர்ப்பதற்காக, ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கார் மோதியதில், பலத்த காயமடைந்து சுரேந்தர் உயிரிழந்தார்.
பெண் மீது தாக்குதல்
சாம்ராஜ்நகர், ஹனுாரின் தொம்மனகத்தே கிராமத்தில் வசிப்பவர் கண்ணம்மா, 35. நேற்று காலையில் இவரது பசு, அதே பகுதியில் வசிக்கும் அங்கமுத்து என்பவரின் தோட்டத்தில் புகுந்து, பயிரை மேய்ந்தது. இதனால் கோபமடைந்த அங்கமுத்துவும், அவரது குடும்பத்தினரும் கண்ணம்மாவை பிடித்து, கம்பத்தில் கட்டி வைத்து, இரண்டு மணி நேரம் கண் மூடித்தனமாக அடித்து உதைத்தனர். காயமடைந்த அவர் சிகிச்சை பெறுகிறார். அங்கமுத்துவின் குடும்பத்தினர் மீது, ஹனுார் போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகியுள்ளது.
வீட்டில் தீ
சாம்ராஜ்நகர், ஹனுாரின் பன்டள்ளி கிராமத்தில் வசிப்பவர் ஜெயலட்சுமி. இவர் நேற்று காலையில், வழக்கம் போன்று டி.வி.,யை ஆன் செய்துவிட்டு, வீட்டு வேலையில் ஈடுபட்டார். அப்போது மின் கசிவு ஏற்பட்டதில், டி.வி., தீப்பிடித்தது. இதை பார்த்த குடும்பத்தினர் வெளியே ஓடி வந்ததால், உயிர் பிழைத்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.
தாய், மகன் பலி
பெங்களூரு ரூரல், நெலமங்களாவின், குன்டேனஹள்ளி கேட் அருகில், நேற்று மதியம் சென்ற பைக் மீது, டாடா ஏஸ் வாகனம் மோதியது. பைக்கில் பயணித்த பிரஜ்வல், 26, அவரது தாய் சைலஜா, 45, ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் 'டி மார்ட்' சென்று பொருட்களை வாங்கி கொண்டு, வீட்டுக்கு திரும்பும் போது, விபத்து நடந்துள்ளது.

