
உணர்ச்சிகரமான கதை
பல்வேறு குறும்படங்களை இயக்கிய சக்தி பிரசாத், முதன் முறையாக கன்னட திரையுலகுக்கு வந்து, எல்.எஸ்.டி., என்ற திரைப்படத்தை இயக்குகிறார். எல்.எஸ்.டி., என்றால், லைலாஸ் சுவீட் ட்ரீம்ஸ் என்பதன் சுருக்கமாகும். இதில், சைத்ரா ஆச்சார் நாயகியாக நடிக்கிறார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கதை பற்றி சைத்ராவிடம் கேட்ட போது, ''தாய் மற்றும் மகள் இடையேயான பாசப்பிணைப்பை மையமாக கொண்டதாகும். மிகவும் உணர்ச்சிகரமான கதை. இயக்குநர் கதை சொன்ன போது, மறுக்காமல் நடிக்க சம்மதித்ததேன். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஜனவரி, 15 முதல், அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கும்,'' என்றார்.
துஷ்டர்கள் சம்ஹாரம்
நடிகர் ராஜ் ஷெட்டி, நாயகனாக நடிக்கும் ரக்கசபுரதோள் திரைப்படத்தில், அவர் ஆக்ஷன் ஹீரோவாக தோன்றுகிறார். ஸ்டண்ட் மாஸ்டர் ரவிவர்மா படத்தை தயாரிக்கிறார். இது குறித்து ரவிவர்மா கூறுகையில், ''கொள்ளேகாலில் நடக்கும் கிரைம், திரில்லர் கதை. ஒவ்வொரு நபருக்கும் இரண்டு முகங்கள் இருக்கும். ஒன்று நல்லது; மற்றொன்று கெட்டது. கெட்டதை நல்லது தோற்கடிக்கிறது என்பதே, கதையின் சாராம்சம். கருட கமனா, டோபி திரைப்படத்துக்கு பின், ராஜ் ஷெட்டி அதிரடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். துஷ்டர்களை சம்ஹாரம் செய்யும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 2026 பிப்ரவரி 6ல், படம் திரைக்கு வருகிறது,'' என்றார்.
மகனுக்காக தாய்
நடிகை துளசி, மூன்று மாத குழந்தையாக இருந்த போதே, சாவித்திரியின் பார்யா என்ற திரைப்பட பாடலில் தென்பட்டார். அதன்பின், குழந்தை நட்சத்திரமாகி, ஹீரோயினாக வளர்ந்தவர். தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர். கன்னட இயக்குநர் சிவமணியை திருமணம் செய்து கொண்டார். தற்போது தாய் கதாபாத்திரங்களில் நடித்தார். படவாய்ப்புகள் குறையாத நிலையில், அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டுள்ளார். இதுகுறித்து, துளசி கூறுகையில், ''நடிப்பில் இருந்து டிசம்பர், 31 முதல், மகிழ்ச்சியோடு நான் ஓய்வு பெறுகிறேன். சினி பயணத்தில் பல விஷயங்களை கற்க வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. என் உணர்வுகளை விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. என் மகன் சாய்க்கு வழி காட்டுங்கள்,'' என்றார்.
முதல் பாடல் ரிலீஸ்
இயக்குநர் விஜய், குருதேவ ஹொய்சளா திரைப்படத்தை தொடர்ந்து, ஆல்பா என்ற படத்தை இயக்குகிறார். இதுகுறித்து, அவர் கூறுகையில், ''ஆனந்த்குமார் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் ஹேமந்த்குமார் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அயானா, கோபிகா சுரேஷ் நடிக்கின்றனர்.
''படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. 'பிக்பாஸ்' கார்த்திக் மகேஷ், முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். படத்தின் கதையை இப்போதே கூற முடியாது. திரையில் பாருங்கள். ரசிகர்களுக்கு பிடித்தமான அனைத்தும் படத்தில் இருக்கும். படத்தில் அவினாஷ், அச்யுத்குமார், ரமேஷ், இந்திரா உட்பட பலர் நடித்துள்ளனர்,'' என்றார்.
யு டியூபில் வெப் சிரீஸ்
கன்னடத்தில் பல திரைப்படங்களை இயக்கிய சேகர், இப்போது வெப் சிரீஸ் உலகில் கால் பதித்துள்ளார். அவர் தயாரித்து, இயக்கிய, 'ஜஸ்ட் அஸ்' எட்டு எபிசோடுகளில் யு டியூபில் நேற்று வெளியானது. இது தொடர்பாக, அவர் கூறுகையில், ''பொறியாளர் ஆவதற்கு பி.இ., படிக்க வேண்டும். டாக்டர் ஆவதற்கு எம்.பி.பி.எஸ்., படிக்க வேண்டும். கார் ஓட்ட வேண்டுமானால், பயிற்சி பெற வேண்டும். அதே போன்று, மனநல வல்லுநர்கள், மேரேஜ் கவுன்சிலர்களிடம் தகவல் சேகரித்து, இந்த வெப் சிரீஸ் தயாரித்துள்ளேன். திருமணம் சம்பந்தப்பட்ட நகைச்சுவையான கதை. சினிமா போன்றே கதையை நகர்த்தி கொண்டு சென்றுள்ளோம். இதில், விவேக், மேகா ஜாதவ் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த வெப் சிரீசை என்னுடைய யு டியூபில் வெளியிடுகிறேன்,'' என்றார்.
துர்கா பரமேஸ்வரி அருள்
நடிகர் புவன் பொன்னண்ணாவுக்கு, கடவுள் பக்தி அதிகம். தன் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும், கட்டீலு துர்கா பரமேஸ்வரி கோவிலுக்கு செல்வது வழக்கம். டிசம்பர், 30ல் அவரது பிறந்த நாளன்று தன் மனைவி, மகளுடன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். இதுபற்றி புவன் பொன்னண்ணா கூறுகையில், ''துர்கா பரமேஸ்வரியின் அருளால், என் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தன. என் மனைவி கர்ப்பமாக இருந்த போது, பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டினேன். அதன்படியே எனக்கு பெண் குழந்தை பிறந்தது. மனைவி, மகளுடன் துர்கா பரமேஸ்வரியை தரிசனம் செய்தேன். தொடர் பட வாய்ப்புகள் வருகின்றன,'' என்றார்.

