'அரபு நாடுகளில் இருந்து வரும் பொருட்களை நிறுத்த முடியுமா?'
'அரபு நாடுகளில் இருந்து வரும் பொருட்களை நிறுத்த முடியுமா?'
ADDED : மார் 30, 2026 04:42 AM

பெங்களூரு: ''திப்பு சுல்தானை எதிர்ப்பவர்களால், அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பொருட்களை நிறுத்த முடியுமா,'' என்று அமைச்சர் பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
கர்நாடகாவின் கடலோர பகுதி சரித்திரத்தில் ஹைதர் அலி, திப்பு சுல்தான் என்ற பெயரில் புத்தகம் வெளியீடும் நிகழ்ச்சி, பெங்களூரில் நேற்று நடந்தது.
தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே பேசியதாவது:
வரலாறு என்பது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படும் கருவி மட்டுமில்லை. உண்மையை காட்டும் கண்ணாடி. ஆனால் இன்று சிலர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வரலாறுகளை திரிக்கின்றனர்.
ஒவ்வொரு மன்னரின் வரலாறுகளில் அவர்கள் ஹீரோவாகவும், வில்லனாகவும் இருக்கின்றனர். அவர்களின் உண்மையான நோக்கம் தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவதே ஆகும்.
குங்கும பூ ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வினருக்கு வரலாறு தெரியாது. அவர்கள் பெருமையாக பேசும் மன்னர்களின் தந்தையர் அல்லது தாய்கள் முஸ்லிமாக இருந்தனர். திப்பு சுல்தான் தான் ராக்கெட் அறிவியலை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் இன்று சிலர் 'மேக் இன் இந்தியா' என்கின்றனர்.
'மேக் இன் மைசூரு' திட்டத்தை, திப்பு சுல்தான் செயல்படுத்த நினைத்தார். ஆ ங்கிலேயேர்களை எதிர்த்து நான்கு போர்கள் செய்தார். ஆனால் திப்பு சுல்தான் சுதந்திர போராட்ட வீரரே இல்லை என்பது ஆர்.எஸ்.எஸ்., வாதமாக உள்ளது. இவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி னரா?
பெங்களூரின் பெருமைமிக்க லால்பாக் பூங்காவை உருவாக்கியவர் திப்பு சுல்தான். லால்பாக் அமைந்து உள்ள பெங்களூரு தெற்கின் பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, திப்புவுக்கு எதிரானவர். அப்படி என்றால் திப்பு சுல்தான் உருவாக்கிய, லால்பாக் பூங்காவுக்கு செல்லாமல், அவரால் இருக்க முடியுமா.
நாம் பயன்படுத்தும் குங்கும பூ உட்பட பல பொருட்கள் அரபு நாடுகளில் இருந்து வருகிறது. அந்த பொருட்கள் வருவதை நிறுத்துவது சாத்தியமா?
10 கோவில்கள் வரலாற்றை தோண்டி எடுக்க முயன்றால், அனைவரும் பிடிபடுவர். கோவில் இடிக்கப்பட்டால் அங்கு ஸ்துாபியை காணலாம். ஸ்துாபிகளை இடித்தால் வேறு எதையாவது காண முடியும். நமது உண்மையான வரலாறு சமஸ்கிருதத்தில் அல்ல. பாலி, பிராகிருத மொழிகளில் தான் உள்ளது என்பதற்கு அசோக பேரரசர் கல்வெட்டுகள் உதாரணம்.
அரசியல் காரணங்களுக்காக திப்பு சுல்தான் 10 கோவில்களை இடித்திருக்கலாம். ஆனால் அவர் 150 கோவில்களை புதுப்பித்தது பற்றி யாரும் பேசுவது இல்லை. வரலாற்றை முழுமையாக பார்க்கும் பழக்கத்தை, பா.ஜ., தலைவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
