/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பைக் டாக்சிகள் இயக்கம்: மாநில அரசு கைவிரிப்பு
/
பைக் டாக்சிகள் இயக்கம்: மாநில அரசு கைவிரிப்பு
ADDED : நவ 27, 2025 07:35 AM
பெங்களூரு: 'பைக் டாக்சிகள் இயக்குவது பாதுகாப்பற்றவை, சட்டவிரோதமானவை' என, மாநில அரசின் உயர் அதிகாரக்குழு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதனால், கர்நாடகாவில் பைக் டாக்சிகள் இயக்குவது கேள்விக்குறியாகி உள்ளது.
பெங்களூரில் பைக் டாக்சிகளில் செல்லும் பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் சம்பவங்கள் அரங்கேறின. பைக் டாக்சிகளை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்களும் குரல் கொடுத்து வந்தனர். இதுகுறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது.
முதலில் பைக் டாக்சிக்கு தடை விதிக்கப்பட்டது. பின், பைக் டாக்சிகள் இயக்க சில தளர்வுகள் வழங்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், பைக் டாக்சிகள் நன்மை, தீமை குறித்து ஆராய்வதற்கு மாநில அரசு உயர் அதிகார குழுவை அமைத்தது. இந்த குழுவில் போக்குவரத்து, சாலை பாதுகாப்பு, பி.எம்.டி.சி., போக்குவரத்து போலீஸ், மெட்ரோ, மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் என, பல துறைகளை சேர்ந்த 11 மூத்த அதிகாரிகள் சேர்க்கப்பட்டனர்.
இவர்கள், பைக் டாக்சி சேவைகள் உள்ள பிற மாநிலங்களுக்கு சென்று, அங்கு பின்பற்றப்படும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தயாரித்தனர். இந்த அறிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றம், மாநில அரசுக்கு சமர்ப்பித்தனர்.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இரு சக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது
பைக் டாக்சிகளை அனுமதிப்பது மோட்டார் வாகன சட்டத்தை மீறும் செயல்
பைக் டாக்சிகளால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன
நகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக காரணமாக உள்ளது. இதில் பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல
பைக் டாக்சிகள் பாதுகாப்பற்றவை, சட்டவிரோதமானவை
எனவே, பைக் டாக்சிகள் இயங்குவதற்கு மாநிலத்தில் அனுமதிக்க முடியாது
வேலையிழப்பவர்கள் உணவு டெலிவரி செய்து, தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ளலாம்
பைக் டாக்சியை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள், பி.எம்.டி.சி., மெட்ரோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கை, மாநிலத்தில் பைக் டாக்சிகள் இயங்குவதை கேள்விக்குறியாக்கி உள்ளது.அத்துடன் பைக் டாக்சியை நம்பியிருக்கும் இளைஞர்களின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.
அதே வேளையில், அறிக்கையை கர்நாடக மாநில தனியார் போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

