/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பொறுமையாக இருங்கள்; உங்களை அழைக்கிறேன்: சிவகுமாருக்கு ராகுல் 'மெசேஜ்' அனுப்பியதாக பரபரப்பு
/
பொறுமையாக இருங்கள்; உங்களை அழைக்கிறேன்: சிவகுமாருக்கு ராகுல் 'மெசேஜ்' அனுப்பியதாக பரபரப்பு
பொறுமையாக இருங்கள்; உங்களை அழைக்கிறேன்: சிவகுமாருக்கு ராகுல் 'மெசேஜ்' அனுப்பியதாக பரபரப்பு
பொறுமையாக இருங்கள்; உங்களை அழைக்கிறேன்: சிவகுமாருக்கு ராகுல் 'மெசேஜ்' அனுப்பியதாக பரபரப்பு
ADDED : நவ 27, 2025 07:13 AM

பெங்களூரு: 'முதல்வர் பதவி விவகாரத்தில் பொறுமையாக இருங்கள்; உங்களை அழைக்கிறேன்' என, சிவகுமாருக்கு, ராகுல், 'மெசேஜ்' அனுப்பி உறுதி அளித்ததாக தகவல் வெளியாகி இருப்பது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்தராமையா ஆதரவு அமைச்சரான சதீஷ் ஜார்கிஹோளியுடன் இரவில் ரகசிய சந்திப்பு நடத்திய சிவகுமார், அவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வாங்கி தருவதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
மூத்த வக்கீல் கபில் சிபல் எழுதிய புத்தக வெளியீடு நிகழ்ச்சி என்ற சாக்கில், கடந்த 15ம் தேதி டில்லி சென்ற முதல்வர் சித்தராமையா, கட்சியின் அதிகார மையமான ராகுலை சந்தித்து பேசினார். துணை முதல்வர் சிவகுமாரும் டில்லி சென்று, ராகுலை சந்திக்க முயன்றார். மூன்று நாட்கள் காத்திருந்தும் சந்திக்க அனுமதி கிடைக்காததால், வெறும் கையுடன் திரும்பி வந்தார்.
இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைந்து, கடந்த 20ம் தேதியுடன் இரண்டரை ஆண்டுகள் முடிந்தது. முதல்வர் பதவியை பெற காய் நகர்த்த ஆரம்பித்த, துணை முதல்வர் சிவகுமார் 20ம் தேதி இரவே, தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சிலரை, மேலிட தலைவர்களை சந்திக்க டில்லிக்கு அனுப்பி வைத்தார்.
தள்ளிவிட முடிவு உஷாரான சித்தராமையா, பெங்களூரு வந்த கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் காலை டில்லி சென்ற கார்கேயை, அவரது இல்லத்தில் இருந்து விமான நிலையம் வரை, காரில் சென்று சிவகுமார் வழியனுப்பி வைத்தார். காரில் செல்லும்போது முதல்வர் பதவி குறித்து கார்கேயுடன், சிவகுமார் விவாதித்து உள்ளார்.
சித்தராமையா, சிவ குமார் இருவருமே முதல்வர் பதவிக்கு முரண்டு பிடிப்பதால், பிரச்னையை ராகுலிடம் தள்ளிவிட கார்கே முடிவு செய்தார். ராகுலுடன் மொபைல் போனில் நேற்று 20 நிமிடம் கார்கே பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, 'பொறுமையாக இருங்கள்; உங்களை அழைக்கிறேன்' என்று ராகுலிடம் இருந்து சிவகுமாருக்கு மொபைல் போனில், 'மெசேஜ்' வந்ததாக தகவல் வெளியானது. இதனால், நான்கு நாட்களாக முகம் வாடிய நிலையில் காணப்பட்ட சிவகுமார் நேற்று மிகவும் உற்சாகமாக காணப்பட்டார்.
'ஈகோ' வேண்டாம் கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தொண்டர்களை அரவணைத்து செல்வது இல்லை என்றும், சித்தராமையாவுக்கு மாற்றாக சிவகுமாரால் மக்கள் தலைவராக உருவெடுக்க முடியாது என்றும், அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு உள்ளது.
இதனால், தனது ஈகோவை கைவிட்டு அனைவரையும் அரவணைத்து செல்லும் மனநிலைக்கு, சிவகுமார் வந்துள்ளார். சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர்களை ஒருவர் பின் ஒருவராக சந்தித்து, அவர்களிடம் மனம் விட்டு பேச ஆரம்பித்து உள்ளார். மின் துறை அமைச்சர் ஜார்ஜ், வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கானிடம் பேசினார்.
மனம் விட்டு பேச்சு இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியை, நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் ஒரு ஹோட்டலில் சிவகுமார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது சதீஷிடம் மனம் விட்டு பேசிய சிவகுமார், 'எனது தலைமையின் கீழ் நீங்கள் செயல் தலைவராக பணியாற்றி உள்ளீர்கள். பெலகாவி அரசியல் விவகாரத்தில் நமக்குள் உரசல் ஏற்பட்டு இருக்கலாம். அதை எல்லாம் மறந்து விடுவோம்.
'நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, 2028ல் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவோம். நான் முதல்வராக எனக்கு ஆதரவு கொடுங்கள்; முதல்வர் பதவி எனக்கு கிடைத்தால், மாநில தலைவர் பதவியை உங்களுக்கு வாங்கி கொடுக்கிறேன். தேவைப்பட்டால் உங்களை துணை முதல்வராகவும் நியமிக்கிறேன்' என, 'டீலிங்' பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நான் தான் கடைசி இந்த சந்திப்பு குறித்து, சதீஷ் ஜார்கிஹோளி நேற்று அளித்த பேட்டி:
முதல்வர் பதவி விவகாரத்தில் நிலவும் குழப்பத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்கும்படி காங்கிரஸ் மேலிடத்திற்கு, சித்தராமையா கோரிக்கை வைத்து உள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கேயை சந்திக்க நான் நேரம் கேட்டு உள்ளேன். நேரம் கிடைத்தால் டில்லி சென்று அவரை சந்தித்து, எனது கருத்தை தெரிவிப்பேன்.
சிவகுமாருக்கு முதல்வராக வேண்டும் என்ற லட்சியம் முன்பு இருந்தே உள்ளது. அரசு அமைந்த முதல் நாளில் இருந்தே தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார். தலைமை மாற்றம் குறித்து தற்போதைக்கு எந்த விவாதமும் இல்லை. விவாதம் வந்தால் பார்த்து கொள்ளலாம். எனக்கு முன்பே மூத்த அமைச்சர்களை சிவகுமார் சந்தித்து பேசி உள்ளார்.
நான் தான் கடைசி என்று நினைக்கிறேன். முதல்வராக ஆசைப்படுவதாக, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுவதில் தவறு இல்லை. அவரும் எட்டு ஆண்டுகள் கட்சி தலைவராக இருந்து உள்ளார். தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், சித்தராமையாவின் தலைமை, வழிகாட்டுதல் எங்களுக்கு தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.

