/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் மது தயாரிப்பு?
/
பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் மது தயாரிப்பு?
ADDED : நவ 27, 2025 07:34 AM
பரப்பன அக்ரஹாரா: பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் கைதிகள் மது தயாரிப்பதாக, தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பயங்கரவாதி ஷகீல் மன்னா, பலாத்கார வழக்கு குற்றவாளி உமேஷ் ஷெட்டி உள்ளிட்ட கைதிகள் மொபைல் போன் பயன்படுத்திய வீடியோ, கடந்த 7ம் தேதியும்; சிறைக்குள் மது அருந்திவிட்டு கைதிகள் ஆட்டம் போடும் வீடியோ, 8ம் தேதியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதுகுறித்து சி.சி.பி., - பரப்பன அக்ரஹாரா போலீசார் விசாரிக்கின்றனர். மாநிலத்தில் உள்ள சிறைகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திரா தலைமையிலான குழு ஆய்வு செய்கிறது.
சிறைக்குள் மது எப்படி சென்றது என்பது குறித்து இந்த குழுவினர் விசாரித்தனர். சிறைக்குள் சென்று கைதிகளின் அறைகளில் ஆய்வு செய்தனர். அப்போது சிறையிலேயே கைதிகள் மது தயாரித்ததை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
மது தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை சிறை ஊழியர்கள் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். சில பொருட்கள் சிறைக்குள் இருக்கும் பேக்கரியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
சிறைக் கைதிகளில் யாருக்காவது பிறந்தநாள் என்றால், மது விருந்து வைத்து கொண்டாடுவதையும் இந்த குழுவினர் கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கொண்டாட்டத்தை, வீடியோ எடுத்து, தங்கள் குடும்பத்தினருக்கு கைதிகள் அனுப்பி, சிறையில் தாங்கள் சந்தோஷமாக இருப்பதாக கூறியதுடன், வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி, அதிகாரிகளை தொடர்ந்து தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முந்தைய உடந்தை சம்பவங்கள் அம்பலமாகி விடும் என்பதால், சிறைக்குள் மது தயாரிப்பது பற்றி அறிந்திருந்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

