/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.யு.சி., தேர்வு முடிவுகள் 5 மாணவியர் தற்கொலை
/
பி.யு.சி., தேர்வு முடிவுகள் 5 மாணவியர் தற்கொலை
ADDED : ஏப் 10, 2025 05:02 AM
பெங்களூரு: கர்நாடகாவில் பி.யு.சி., 2ம் ஆண்டு தேர்வு முடிவுகள் எதிரொலியாக, ஐந்து மாணவியர் தற்கொலை செய்து கொண்டனர்.
தமிழகத்தின் பிளஸ் 2 தேர்வுக்கு இணையானது, கர்நாடகாவின் பி.யு.சி., 2ம் ஆண்டு தேர்வுகள். இம்மாநிலத்தில் நேற்று முன்தினம் பி.யு.சி., 2ம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியாகின. மொத்த தேர்ச்சி சதவீதம் 73.45.
குறைந்த மதிப்பெண், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மன உளைச்சல் அடைந்தனர். 'மாணவர்கள் யாரும் சோர்வு அடைய வேண்டாம். தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம்' என, மாநில பள்ளிக்கல்வி அமைச்சர் மது பங்காரப்பா ஊக்கம் அளித்தார். இருப்பினும், தேர்வு முடிவுகள் வெளியான 24 மணி நேரத்திற்குள், தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத, தோல்வி அடைந்தவர்கள் என, ஐந்து மாணவியர் தற்கொலை செய்து கொண்டனர்.
இதன்படி, மைசூரு - ஐஸ்வர்யா, பல்லாரி - விஜயலட்சுமி, தாவணகெரே - கிருபா, ஹாவேரி - காவ்யா பசப்பா லமானி ஆகிய நான்கு மாணவியர் தற்கொலை செய்து கொண்டனர்.
பெங்களூரு, சப்தரி லே - அவுட்டை சேர்ந்த மாணவி ஒருவர், தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னரே, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த ஐந்து பேர் இறந்தது குறித்து போலீஸ் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
முதல்வர் சித்தராமையாவின் 'எக்ஸ்' பதிவு:
தேர்வில் வெற்றி பெறாத மாணவ - மாணவியர் நம்பிக்கையை இழக்க வேண்டாம். பதற்றத்தில் எந்த ஒரு தவறான முடிவையும் எடுக்க வேண்டாம். வாழ்க்கை என்பது மிகப்பெரியது. தேர்வில் தோல்வி அடைந்த மாணவ - மாணவியர் அடுத்து வரும் தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

