2 தொகுதி இடைத்தேர்தல் முக்கிய தலைவர்களுக்கு அக்னி பரீட்சை
2 தொகுதி இடைத்தேர்தல் முக்கிய தலைவர்களுக்கு அக்னி பரீட்சை
ADDED : ஏப் 08, 2026 04:30 AM

கர்நாடகாவில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு நடக்கவுள்ள இடைத்தேர்தல், முதல்வர் சித்தராமையா உட்பட முக்கிய தலைவர்களுக்கு, பெரும் அக்னி பரீட்சையாக அமைந்துள்ளது. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளனர்.
பாகல்கோட் தொகுதியின் காங்கிரஸ் எம் .எல்.ஏ.,வாக இருந்த மேட்டி, தாவணகெரே தெற்கு தொகுதியின் காங்., எம்.எல்.ஏ.,வாக இருந்த சாமனுார் சிவசங்கரப்பா ஆகியோர் மறைவினால், இந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இரண்டு தொகுதிகளுமே ஆளுங்கட்சியான காங்கிரஸ் வசம் இருந்ததால், அவற்றை தக்க வைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தலைவர்கள் உள்ளனர்.
ஏற்கனவே முதல்வர் பதவி ஆட்டம் காணும் நிலையில், சித்தராமையா பரிதவிக்கிறார். இடைத்தேர்தல் அவரை பொறுத்தவரை, இமேஜ் பிரச்னையாக உள்ளது. தன் அரசின் செல்வாக்கை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த இடைத்தேர்தல் சித்தராமையாவுக்கு மட்டுமின்றி, துணை முதல்வர் சிவகுமாருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அனுதாப அலையில் வெற்றி பெறலாம் என, தலைவர்கள் நம்புகின்றனர். அதற்காக அலட்சியம் காட்டவில்லை. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், ஜமீர் அகமது கான், மல்லிகார்ஜுன் உட்பட பல அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் தாவணகெரே மற்றும் பாகல்கோட்டில் முகாமிட்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சீட் வழங்கியதில் தலைவர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி, கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என, முதல்வர் அஞ்சுகிறார்.
சமாதானம் இதே காரணத்தால், அமைச்சர்களை அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி, சூழ்நிலையை கண்காணிக்கிறார். ஓட்டுப்பதிவு நடப்பதற்குள் தலைவர்களை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்.
இரண்டு தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், முதல்வரின் பலம் அதிகரிக்கும். முதல்வர் மாற்றம் சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பது, முதல்வரின் எண்ணமாகும்.
மற்றொ ரு பக்கம் முதல்வர் பதவியை எதிர்பார்க்கும் சிவகுமாரும், இந்த இடைத்தேர்தல் மீது கண் வைத்துள்ளார். மாநில தலைவராகவும் இருப்பதால், இரண்டு தொகுதிகளிலும் வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதில், அதிக அக்கறை காட்டுகிறார். தன் சக்தியை காட்ட இடைத்தேர்தலை ப யன்படுத்துகிறார்.
பல எதிர்ப்புகளை கடந்து, அமைச்சர் மல்லிகார்ஜுன் தன் மகனுக்கு சீட் பெற்றார். எனவே, மகனை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. இது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது. கட்சியில் அவரது செல்வாக்கு அதிகரிக்கும்.
பா.ஜ., தலைவர்கள் ஆளுங்கட்சிக்கு மட்டுமின்றி, எதிர்க்கட்சியான பா.ஜ.,வுக்கும் கூட, பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளின் இடைத்தேர்தல் இமேஜ் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் அசோக், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு இந்த இடைத்தேர்தல் முக்கியமானதாகும். தங்களின் சக்தியை காட்டி, கட்சியில் வலுவாக வேரூன்ற இருவருக்கும் கிடைத்த பொன்னான வாய்ப்பு இது.
இதை மனதில் கொண்டு, இரண்டு தலைவர்களும் இடைத்தேர்தல் நடக்கும் இரண்டு தொகுதிகளிலும், பம்பரமாக சுழன்று வந்து பிரசாரம் செய்தனர். ஒரு தொகுதியிலாவது பா.ஜ., வெற்றி பெற்றால், கட்சியில் தங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என, நம்புகின்றனர்.
- நமது நிருபர் -
