/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவலிங்கத்தின் உருவம் தானாக மாறும் 2 கோவில்கள்
/
சிவலிங்கத்தின் உருவம் தானாக மாறும் 2 கோவில்கள்
ADDED : டிச 16, 2025 05:12 AM

சிவலிங்கத்தை தரிசனம் செய்வது பாவங்களை போக்கும். கல்வி, செல்வம், அறிவு கிடைக்கும். திருமண தடை நீங்கும்; வாழ்க்கையில் ஏற்படும் எதிர்மறையான எண்ணங்கள் குறையும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வில்வ இலைகளை படைத்து, சிவலிங்கத்தை வழிபடுவது அதிக பலன்கள் தருகிறது.
அதிலும், உருவம் தானாக மாறும் சிவலிங்கத்தை வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழகத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் ஒரு நாளைக்கு,5 முறை சிவலிங்கம் நிறம் மாறுகிறது. இதுபோல கர்நாடகாவில் உடுப்பியில் உள்ள ஸ்ரீகாந்தேஸ்வரா கோவிலிலும், கோலாரின் முல்பாகலில் உள்ள விருபாக் ஷி கோவிலிலும் சிவலிங்கத்தின் நிறம் மாறுகிறது.
உடுப்பியின் காந்தவாரா கிராமத்தில் உள்ளது ஸ்ரீ காந்தேஸ்வரா கோவில். இந்த கோவிலில் சிவலிங்கம் பகலில் வெள்ளி நிறத்திலும், மதியம் செம்பு நிறத்திலும், மாலை தங்க நிறத்திலும் காட்சி அளிக்கிறது. இதன் மர்மம் என்னவென்று இன்று வரை யாருக்குமே தெரியவில்லை.
சுமார் 900 ஆண்டுகள் பராம்பரியம் கொண்ட இந்த கோவிலுக்கும், அங்கு உள்ள சம்பகா மரத்திற்கும் ஒரே வயது தான். பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில் கட்டட கலைக்கு எடுத்து காட்டாகவும் உள்ளது. நிறம் மாறும் சிவலிங்கத்தின் தோற்றம் பக்தர்கள் மனதை வசீகரிக்கிறது. மஹா சிவராத்திரி, ஆண்டு திருவிழா இங்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
கோவிலின் நடை தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை திறந்து இருக்கும். பெங்களூரில் இருந்து 442 கி.மீ., துாரத்தில் காந்தேஸ்வரா கோவில் உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து உடுப்பிக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் செல்கின்றன. ரயிலில் வசதியும் உள்ளது.
இதுபோல கோலாரின் முல்பாகலில் உள்ள விருபாக் ஷி கோவிலின் சிவலிங்கமும் ஒரு நாளைக்கு மூன்று முறை மாறும் தன்மை கொண்டது. விஜயநகர் பேரரசர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலும் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இங்குள்ள சிவலிங்கம் அத்ரி மகரிஷி முனிவரால் நிறுவப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் ரத உற்சவம், சங்கராந்திக்கு அடுத்த நாள் நடக்கும் ரத சப்தமி இங்கு பிரசித்தி பெற்றது. கோடிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 20 கி.மீ., துாரத்திலும்; அவனி மலையில் இருந்து 7 கி.மீ., துாரத்திலும், குருடுமலை விநாயகர் கோவிலில் இருந்து 12 கி.மீ., துாரத்திலும் விருபாக் ஷி கோவில் அமைந்து உள்ளது.
கோவில் நடை தினமும் காலை 6:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்து இருக்கும்
-- நமது நிருபர்- - .

