/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கனமழைக்கு 5 மாதங்களில் 111 பேர் பலி: மாநில அரசு வழங்கிய இழப்பீடு ரூ.5.55 கோடி
/
கனமழைக்கு 5 மாதங்களில் 111 பேர் பலி: மாநில அரசு வழங்கிய இழப்பீடு ரூ.5.55 கோடி
கனமழைக்கு 5 மாதங்களில் 111 பேர் பலி: மாநில அரசு வழங்கிய இழப்பீடு ரூ.5.55 கோடி
கனமழைக்கு 5 மாதங்களில் 111 பேர் பலி: மாநில அரசு வழங்கிய இழப்பீடு ரூ.5.55 கோடி
ADDED : செப் 09, 2025 05:06 AM

பெங்களூரு: ''கர்நாடகாவில் கடந்த ஐந்து மாதங்களில் பெய்த கன மழைக்கு 111 பேர் உயிரிழந்துள்ளனர்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகாவில் மழை சேதம் குறித்து கலெக்டர்களுடன், முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூரில் இருந்தபடி காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
ஜூன் 1ம் தேதி முதல் செப்., முதல் வாரம் வரையிலான பருவமழைக் காலத்தில், மாநிலத்தில் வழக்கத்தை விட, 4 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. இக்காலகட்டத்தில், சராசரியாக 7.21 செ.மீ., மழை பெய்யும். ஆனால், இம்முறை 7.53 செ.மீ., மழை பெய்துள்ளது. இம்மாதம் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மழையால் சேதமடைந்த பயிர்கள், வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பருவமழை காலத்தில் 98 சதவீத விதைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. 10 நாட்களுக்குள் முடித்து, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சேதம் குறித்து முதற்கட்ட கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. 11.86 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும்; 99 ஆயிரத்து 847 ஏக்கர் தோட்டக்கலை பயிர்களும் என, மொத்தம் 12.86 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
651 வீடுகள் நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஐந்து மாதங்களில் பெய்த மழைக்கு, 111 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக, மொத்தம் 5.55 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 651 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இவற்றில் 649 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
அதுபோன்று, 9,087 வீடுகள் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்துள்ளன. இவற்றில் 8,608 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் 766 கால்நடைகள் இறந்துள்ளன. இதற்காக 1.52 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக, 683 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகள், 1,383 மாவட்ட முக்கிய நெடுஞ்சாலைகள், 5,558 கிராமப்புற சாலைகள், 656 பாலங்கள் / சிறுபாலங்கள், 1,877 பள்ளி கட்டடங்கள், 160 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1,018 அங்கன்வாடிகள், 25,279 மின் கம்பங்கள், 819 மின் மாற்றிகள், 31 சிறிய நீர்ப்பாசன தொட்டிகள் சேதமடைந்துள்ளன. முதற்கட்டமாக, மழையால் 550 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் முக்கிய அணைகளில், கடந்தாண்டை விட, தற்போது நீர்மட்டம் சற்று குறைவாக உள்ளது. முக்கிய அணைகளில் அதிகபட்ச கொள்ளளவு, 895.62 டி.எம்.சி.,யாகும். தற்போது 840.52 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 856.17 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது.
திறப்பு இல்லை துங்கபத்ரா அணையில் மட்டும் குறைவான நீர் சேமிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்குள்ள நீர்தேக்க மதகுகளில் சேதம் ஏற்படும் என்ற எச்சரிக்கையால், 80 டி.எம்.சி., தண்ணீரை நிறுத்தி வைத்துள்ளோம். இதன் கொள்ளளவு, 105 டி.எம்.சி.,
துங்கபத்ரா அணையின் 32 மதகுகளை மாற்றுவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. எட்டு மதகுகள் தயாராக உள்ளன. முதல் போகத்துக்கு தண்ணீரை திறப்பதற்கு முன்பு, தேவையான பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாவது போகத்துக்கு தண்ணீர் திறக்க சாத்தியமில்லை. அனைத்து மாவட்ட கலெக்டர்களின் கணக்குகளில், 1,352 கோடி ரூபாய் உள்ளது. பணப்பற்றாக்குறை எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மழை சேதம் குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொளி காட்சி மூலம் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.