/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அதிக வருவாய்க்கு இளஞ்சிவப்பு நிற வெண்டை
/
அதிக வருவாய்க்கு இளஞ்சிவப்பு நிற வெண்டை
PUBLISHED ON : செப் 17, 2025

இளஞ்சிவப்பு நிற வெண்டைக்காய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை வி வசாயி சு.ரமேஷ் கூறியதாவது:
மணல் கலந்த களிமண் நிலத்தில், கீரை, வேர்க் கடலை, காய்கறி, பழங்கள் போன்றவற்றை சாகுபடி செய்துள்ளேன்.
அனைத்து விளைப்பொருட்களுக்கும், ரசாயன உரங்கள் இடுவதை அறவே தவிர்த்துள்ளேன். இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைபொருட்களை சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், ஆற்றங்கரையையொட்டி சவுடு மண் நிலத்தில், நாட்டு ரகத்தைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிற வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளேன். இந்த இளஞ்சிவப்பு நிற வெண்டை செடி ஆளுயரத்திற்கு வளர்கிறது. குறைந்த மகசூல் கிடைக்கும்.
பச்சை நிற வெண்டைச்செடி 3 அடி உயரத்திற்கு மட்டுமே வளரும் தன்மை உடையது.
இளஞ்சிவப்பு நிற வெண்டக் காயை காட்டிலும், பச்சை நிற வெண்டைக்காய் சாகுபடியில் அதிக மகசூல் ஈட்ட முடியும்.
இருப்பினும், இளஞ் சிவப்பு நிற வெண்டைக்காயில் மருத்துவ குணம் நிறைந்திருப்பதால், சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.
குறிப்பாக, பச்சை நிற வெண்டைக்காய், ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்தால், இந்த இளஞ்சிவப்பு நிற வெண்டைக்காய் 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யும் போது அதிக வருவாய்க்கு வழி வகுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: சு.ரமேஷ்,
81109 44475.