தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/உசிலம்பட்டி நெல்லிக்காய்

உசிலம்பட்டி நெல்லிக்காய்

உசிலம்பட்டி நெல்லிக்காய்


PUBLISHED ON : செப் 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடும் வறட்சியிலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உத்தப்பநாயக்கனுார் அருகே பாறைப்பட்டி கிராமத்தில் வறட்சியை தாங்கும் பெரிய நெல்லி பயிரிட்டு லாபம் ஈட்டுகிறார் ஓய்வு பெற்ற வனக்காப்பாளர் பாண்டியராஜன்.

உசிலம்பட்டி பகுதியில் இரண்டாண்டுகளாக மழை குறைந்ததால் கிணறு, போர்வெல்களில் தண்ணீர் வற்றியது. கரும்பு, தென்னை, மா, மல்லிகைப்பயிர்கள் வெயிலில் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் பாண்டியராஜன் நட்டு வைத்த நெல்லிப்பயிர்கள் வறட்சியிலும் கைகொடுக்கின்றன.

நெல்லி ஒட்டு ரகம் குறித்து பாண்டியராஜன் கூறியதாவது:

வனத்துறை பணியில் இருக்கும் போது விவசாயிகளுக்கும், வனப்பகுதியில் பயிரிடுவதற்குமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்து வழங்கினேன். 2021 ல் ஓய்வு பெற்றதும் நான் கற்றுக் கொண்ட மர விவசாயத்தை பின்பற்றி பாறைப்பட்டியில் தரிசாக கிடைந்த ஐந்து ஏக்கர் நிலத்தில் நெல்லி பயிரிட நினைத்தேன். குடும்பத்தினரும் விவசாயம் செய்ய விரும்பினர். ஏற்கனவே இருந்த கிணறு, போர்வெல் தண்ணீர் இருந்தது. திண்டுக்கல்லில் இருந்து தனியார் பண்ணையில் 1200 பெரிய நெல்லி மரக்கன்றுகளை வாங்கி தோட்டக்கலைத்துறையினர் பரிந்துரைத்தபடி 6 க்கு 6 அடி இடைவெளியில் குழிகள் எடுத்து உரமிட்டு நடவு செய்தேன்.இது ஒட்டுரகம் என்பதால் குறுகிய காலத்தில் பலன் தர ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் காட்டுப்பன்றிகள், முயல்கள், கரடி தொல்லை அதிகமாக இருந்தது. அவ்வப்போது கிடைக்கும் மழை, 58 கிராம கால்வாய் தண்ணீர், போர்வெல் தண்ணீர் மூலம் நெல்லிக்கன்றுகள் நன்றாக வளர்ந்தன. முறையான கவாத்து செய்து வந்தேன். 3 வது ஆண்டிலிருந்து பூக்க ஆரம்பித்தது. நான்காம் ஆண்டில் ஓரளவு காய்ப்பு துவங்கியது.

பூப்பது முதல் காய்ப்பது வரை 3 மாத காலத்திற்கு உரம், தண்ணீர், மருந்து கொடுத்தால் காய்கள் திரட்சியாக உற்பத்தியாகும். ஒவ்வொரு நெல்லிக்காயும் குறைந்தது 100 கிராம் எடையிருக்கும். பத்தாண்டுகள் பார்த்து பார்த்து வளர்த்தும் மழை இல்லாவிட்டால் வறட்சியில் தென்னை ஒடிந்து விடும். அந்த நஷ்டத்தை தாங்க முடியாது. நெல்லி அப்படியில்லை. பாசனத்திற்கேற்ப வருமானம் தரும். இதற்கென தனியாக சீசன் கிடையாது. 1200 மரங்களில் 700 மரங்கள் காய்த்தாலும் மீதி மரங்கள் இடைவெளியில் காய்க்கத் தொடங்கும் என்பதால் ஆண்டுதோறும் சீசன் இன்றி காய்களை அறுவடை செய்கிறேன்.

தோட்டத்தைச் சுற்றி வேலி போல எலுமிச்சை நட முடிவு செய்தேன். ஒன்றரை வயதுடைய 40 எலுமிச்சை ஒட்டுக்கன்றுகளை 6 மாதம் முன் நடவு செய்தேன். இக்கன்றுகள் காற்று தடுப்பானாகவும் செயல்படுவதோடு நட்ட 3மாதத்தில் பிஞ்சுகள் வர ஆரம்பித்துள்ளது. நெல்லி 200 ஆண்டுகள் கூட இருக்கும் என்கின்றனர்.

எங்களிடம் நெல்லிக்காய் வாங்கியவர்கள் இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். மற்ற விவசாயம் மாதிரி நெல்லி, எலுமிச்சையில் கைநஷ்டம் ஏற்படாது என்றார். இவரிடம் பேச: 98432 44482.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us