தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/மண்ணில் மின் கடத்துத்திறன் பரிசோதனை

மண்ணில் மின் கடத்துத்திறன் பரிசோதனை

மண்ணில் மின் கடத்துத்திறன் பரிசோதனை


PUBLISHED ON : ஜூலை 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மண்ணில் மின் கடத்துத் திறன் பரிசோதனை மூலம் பயிர்களின் ஆரோக்கியத்தையும் மகசூலையும் மேம்படுத்த முடியும்.

மின் கடத்துத்திறன் (இ.சி.,) என்பது மண்ணில் கரைந்துள்ள உப்புகள், ஊட்டச்சத்துகளை காட்டும் அளவீடு. இது மண்ணின் வளம், உப்புத்தன்மை, பயிர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை மதிப்பிட உதவுகிறது.

பயிருக்குத் தேவையான நைட்ரஜன், பொட்டாசியம், கால்சியம் போன்ற தாதுக்கள் போதுமான அளவில் உள்ளனவா என்பதை சரியான இ.சி., அளவு தெரிவிக்கும். மண்ணின் இ.சி. அளவு அதிகரித்தால் அது அதிகப்படியான உப்புகளைக் குறிக்கிறது. இது பயிர்கள் தண்ணீரை உறிஞ்சுவதைத் தடுத்து, வளர்ச்சி மற்றும் மகசூலைக் குறைக்கும்.

பொதுவாக தாவர வளர்ச்சிக்கு ஏற்ற இ.சி. மதிப்பு 0.8 முதல் 1.8 டிஎஸ்/எம் ஆகும். இது 2.5 ஐத் தாண்டினால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். இதைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் அதிகப்படியான உப்புத்தன்மை குறைபாட்டை கண்டறிந்து பயிர்களைச் சேதப்படுத்துவதற்கு முன்பே பாசனம், உர மேலாண்மையைச் சரிசெய்து பயிர்களைப் பாதுகாக்கலாம்.

அதிக இ.சி. இருந்தால் உப்புத்தன்மை அதிகரித்து வேரின் நீரை உறிஞ்சும் திறன் குறைந்து ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு தாவர வளர்ச்சியை பாதிப்பதோடு மண் நுண்ணுயிர்களின் செயல்பாட்டையும் பாதிக்கிறது.

நிர்வகிக்கும் முறை

மண்ணில் இ.சி., அளவு அதிகமாக இருந்தால் அதிகப்படியான உப்புகளை அடிமண்ணிற்கு கழுவ, சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்தி பாசனம் செய்ய வேண்டும். பாசன நீர் அதிக உப்புத்தன்மையுடன் இருந்தால் அதைத் தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக உரம் இடுவதால் இ.சி. அதிகரிக்கும்.

எனவே இ.சி., பரிசோதனை அடிப்படையில் துல்லியமாக உரமிட வேண்டும். நிலத்தில் தண்ணீர் தேங்கும் போது உப்புகள் ஆவியாகி மேல்மட்டத்தில் படியும் என்பதால் வடிகால் வசதியை உறுதி செய்ய வேண்டும்.

மட்கிய இயற்கை உரங்களைச் சேர்ப்பதன் மூலம் மண்ணின் கட்டமைப்பு மேம்பட்டு, அதிக உப்புத்தன்மையால் ஏற்படும் பாதிப்பு குறையும்.

உப்புத்தன்மை அதிகமாக உள்ள நீரை மழைநீருடன் கலந்து பண்ணைகுட்டை அமைத்து தேக்கி வைத்து பயன்படுத்தலாம்.

பாசன நீருக்கான இ.சி. 0.5 டிஎஸ்/எம் என்ற அளவுக்கு குறைவாக இருந்தால் அனைத்து பயிர்களுக்கும் ஏற்றது. 1.5 இ.சி., அளவுக்கு அதிகமான நீரை தொடர்ந்து பயன்படுத்தினால் மண்ணில் உவர்ப்புத்தன்மை அதிகரிக்கும். பயிரிடுதல், நிலப் பயன்பாடு, பாசன நீரின் தரம், அதிக உரம், கலப்பு உரப் பயன்பாட்டால் மண்ணின் மின் கடத்துத்திறன் பாதிக்கப்படுகிறது.

மண்ணின் உப்புத்தன்மை பயிர்களின் இயல்பான வளர்ச்சியைப் பாதிக்கிறது. நீர் மற்றும் உரத்தை அறிவியல் பூர்வமாகவும் முறையாகவும் பயன்படுத்தினால் மண்ணின் இ.சி., அளவை மேம்படுத்தலாம்.



அரிபுத்திரன் வேளாண்மை அலுவலர் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர் அலைபேசி: 82480 80922

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us