PUBLISHED ON : ஜூலை 22, 2026

இளம் பட்டுப்புழுக்களை வாங்கி வளர்த்து பட்டுக்கூடு உருவாக்கி விற்பனை செய்தேன். தற்போது நேரடியாக முட்டைகளை வாங்கி புழுக்களை உற்பத்தி செய்யும் அடுத்தகட்ட தொழில்நுட்பத்திற்கு மாறி லாபம் ஈட்டுகிறேன் என்கிறார் தேனி அல்லிநகரம் விவசாயி சீனிவாசன்.
பட்டுப்புழுக்கள் வளர்ப்பு குறித்து அவர் கூறியதாவது:
முதலில் 7 நாட்கள் வயதுடைய இளம்புழுக்களை வளர்த்து கூடு உற்பத்தி செய்தேன். இதற்காக 5 ஏக்கரில் மல்பெரி தோட்டம் அமைத்துள்ளேன். அதன் பின் விதைக்கூடு தயாரிக்க ஆரம்பித்தேன். இதற்கு தரமான, நிரந்தர விலை கிடைக்கிறது.
கிருஷ்ணகிரி, ஒசூர், மைசூர், கோவையில் உள்ள மத்திய பட்டு வாரியம், தமிழக அரசு விற்பனை நிலையத்தில் இருந்து பட்டுப்புழு முட்டையை வாங்குகிறேன். அங்கு குளிர்பதன நிலையத்தில் வைத்து முட்டைகளை பராமரிப்பர். பட்டுப்புழு முட்டையை வாங்கினால் அதிகபட்சமாக 15 நாட்களில் முட்டை பொரிந்து புழு விற்பனைக்கு வரும்.
நான்கு நாட்களில் பொரிந்து வெளியே வரும் நிலையில் முட்டைகளை வாங்கி வருகிறேன். அவற்றுக்கான ஈரப்பதம், தட்பவெப்பநிலையை பராமரிக்காவிட்டால் புழுக்கள் பொரிந்து வெளியே வராது. நஷ்டம் ஏற்படும்.
நிறம் மாறும் கூடு
முட்டையின் நிறம் மாறத்துவங்கினால் பொரியத் தொடங்கும் என்று அர்த்தம். அப்போது இன்குபேஷன் எனப்படும் இருட்டறையில் வைப்போம். அதிகபட்சமாக இரண்டு மணி நேரத்திற்குள் எல்லா முட்டையில் இருந்தும் பொரிந்து புழுக்கள் வெளியே வரும். மல்பெரி கொழுந்து இலையை வெட்டும் போது அதில் ஜூஸ் போல வரும்.
அதை புழுக்கள் உறிஞ்சி வளரும். 12 மணி நேர இடைவெளியில் இலையை சுரண்ட ஆரம்பிக்கும். மூன்றரை நாட்களுக்கு 12 மணி நேர இடைவெளியில் தீவனம் வழங்குகிறேன். நான்காவது நாளில் முதல் தோல் உரிப்பு நடக்கும். மீண்டும் தீவனம் வழங்கிய பின் 7 வது நாளில் 2வது முறையாக தோல் உரித்து சாப்பிடாமல் இருக்கும்.
விற்பனைக்குத் தயார்
இந்நிலையில் ஒரு வார வயதுடைய இளம்புழுக்களை இரவு நேரத்தில் விவசாயிகளுக்கு விற்பனை செய்வோம். பகலில் கொண்டு சென்றால் அதிக வெப்பத்தால் புழுக்களுக்கு பாதிப்பு ஏற்படும். அடுத்ததாக 3வது தோலுரிப்பு, 4வது தோலுரிப்பு என தொடரும்.
5வது பருவத்தில் தொடர்ந்து ஏழுநாட்கள் அதிகமான மல்பெரி இலைகளை சாப்பிடும். ஒரு முட்டையில் 500 புழுக்கள் இருக்கும். 100 முட்டையில் 50ஆயிரம் புழுக்கள் இருக்கும்.
இவையனைத்தும் 5வது பருவத்திற்குள் 4 டன் எடையுள்ள மல்பெரி இலை, தண்டுகளை சாப்பிடும். முட்டையிலிருந்து வெளிவந்த 22 வது நாளில் கூடு கட்ட ஆரம்பித்து 4 நாட்களில் கூடு முடிவடையும். அதன்பின் 2 நாட்கள் தொந்தரவு செய்யாமல் விட வேண்டும். ஆறாவது நாளில் அதை விற்பனைக்கு கொண்டு வரலாம்.
பட்டுப்புழுக்களின் ஆரம்பகட்ட ஏழுநாள் வளர்ப்பு தான் அவற்றின் தரமான கூட்டை நிர்ணயிக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 30 டிகிரி சென்டிகிரேடு இருக்க வேண்டும். ஈரப்பதம் 70 முதல் 80 இருக்க வேண்டும்.
இதற்காக தானியங்கி கருவி மூலம் காற்றின் ஈரப்பதம், வெப்பநிலையை கட்டுப்படுத்தி புழுக்கள் வளர்ப்புக்கு இதமான சூழ்நிலையை உருவாக்குகிறேன். 5 ஏக்கரில் உள்ள மல்பெரி செடிகளில் 50 நாட்களுக்கு ஒருமுறை இலையை வெட்டி புழுக்களுக்கு உணவளிக்கிறேன். புழுக்களுக்கு போக மீதமுள்ள இலை, தண்டுகளை விவசாயிகளுக்கு வழங்குகிறேன்.
விவசாயிகள் ஆர்டர் கொடுத்து விட்டு திடீரென வேண்டாம் என விட்டுவிடுவர். எனவே புழு உற்பத்தித் தொழிலை தொடர்ந்து மேலாண்மை செய்தால் தான் வெற்றி பெற முடியும் என்றார்.
இவரிடம் பேச: 99766 72061.
-எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை
