PUBLISHED ON : செப் 27, 2026

செப்., 29 - பவும அஸ்வினி
'பவும அஸ்வினி' என்ற முக்கியமான வழிபாட்டு நாள், நம்மிடமிருந்து வெகுவாக மறைந்து விட்டது. பவுமன் என்றால், செவ்வாய். பூமியின் பிள்ளை என்றும் சொல்வர். செவ்வாயை, பூமிகாரகன் என்று சொல்கிறது, ஜோதிடம்.
ஒரு ஆண்டில், செவ்வாய்க்கிழமையும், அஸ்வினி நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் ஒன்றிரண்டு தான் இருக்கும்.
இது, மிகவும் அபூர்வமான நாள். இந்த நாளில், 'தேவி அதர்வசீர்ஷா' என்ற மந்திரத்தை வேதியர்கள் ஓதுவர். இதை, தேவி உபநிஷதம் என்றும் சொல்வர்.
தேவி என்பது, துர்க்கையைக் குறிக்கும். துர்காதேவியை வழிபட உகந்த மந்திரம் இது. பவும அஸ்வினி என்று பிரித்தும், பவுமாஸ்வினி என்று சேர்த்தும் சொல்லப்படும். இந்த நாளில், தீராத நோய்கள் தீர மருந்து சாப்பிட ஆரம்பிக்கலாம். அஸ்வினி தேவர்களை, தேவலோக மருத்துவர்கள் என்பர்.
சிலர் எவ்வளவு சம்பாதித்தாலும், செலவாகிக் கொண்டே இருக்கும். இவர்கள் கடன் தொல்லையில் இருந்து மீள இந்த நாளில், அதர்வசீர்ஷா மந்திரத்தை கேட்கலாம். இடம், வீடு வாங்க இந்நாளில் திட்டமிடலாம். செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை, தொழில், வேலையில் தடை என, சிரமப்படுவோரும் இந்த மந்திரத்தைக் கேட்டால், நற்பலன் கிடைக்கும்.
இந்நாளில் , செவ்வாயின் பிறப்பு பற்றி கேட்பது நல்லது. கந்த புராணத்தில் செவ்வாயின் பிறப்பு வரலாறு உள்ளது. அந்தகாசுரன் என்பவன், சிவனை எண்ணி தவமிருந்து, தன்னை யாரேனும் தாக்கினால் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும், ஒரு அரக்கன் பிறக்க வேண்டும் என, வரம் கேட்டான். சிவனும் வரம் தந்து விட்டார்.
இதைப் பயன்படுத்தி தன்னை யாராலும் அழிக்க முடியாது என்ற கர்வத்தில், முனிவர்கள், தேவர்களுக்கு துன்பம் செய்தான், அந்தகாசுரன்.
இதையறிந்த சிவன், அவனை அழிக்க மாற்று வடிவில் வந்தார். இருவருக்கும் போர் நடந்தது. அந்தகாசுரனின் உடலில் இருந்து வெளிப்பட்ட ரத்தத் துளிகளிலிருந்து ஏராளமான அரக்கர்கள் தோன்றி சிவனைத் தாக்கினர். அப்போது, சிவனின் நெற்றியில் இருந்து சிந்திய மூன்று துளி வியர்வைத் துளியில் இருந்து பிறந்தார், செவ்வாய்.
சிவனின் உத்தரவுபடி, அந்தகாசுரனின் உடலில் இருந்து சிந்திய ரத்தம் பூமியில் விழாமல் உள் வாங்கிக் கொண்டார், செவ்வாய். அந்தகாசுரன் கொல்லப்பட்டான். அவனது ரத்தத்தை உள்வாங்கியதால், செவ்வாயின் உடல் சிவப்பானது. இதனால், அவருக்கு, அங்காரகன் என்ற பெயர் வந்தது.
அங்காரகன் என்றால், நெருப்பு. நெருப்புத் தணல் போல் சிவப்பாக இருந்ததால், செவ்வாய்க்கு அங்காரகன் என்ற பெயர் ஏற்பட்டது. பூமியைப் பாதுகாத்த அவரை நவக்கிரகங்களில் ஒருவராக்கிய சிவன், பூமிகாரகன் என்ற அந்தஸ்தையும் தந்தார்.
பவும அஸ்வினி நாளில், துர்க்கைக்கும், நவக்கிரக மண்டபத்தில் உள்ள செவ்வாய்க்கும் அர்ச்சனை செய்து, எல்லா நலன்களும் பெறலாம்.
- தி. செல்லப்பா
