sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம்: விநாடி நேர விரதம்!

விசேஷம் இது வித்தியாசம்: விநாடி நேர விரதம்!

விசேஷம் இது வித்தியாசம்: விநாடி நேர விரதம்!


PUBLISHED ON : பிப் 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 15, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிப்., 15 - சிவராத்திரி

சி வராத்திரியன்று பக்தர்கள் இரவு முழுக்க விழித்திருப்பது, பட்டினி கிடப்பது என, கடும் அனுஷ்டானங்களை மேற்கொள்கின்றனர். 'இதெல்லாம் செய்ய உடம்பில் வலுவில்லை, பிழைப்புக்கே நேரம் போதவில்லை...' என்ற காரணங்கள் பலருக்கு இருக்கும். ஆனாலும், இவர்கள் சிவராத்திரி விரதத்தை கடைபிடிக்க முடியும். 24 மணி நேரத்தில் ஒரு விநாடி கூடவா இறை வழிபாட்டுக்கு ஒதுக்க முடியாது. இதோ ஒரு தொழிலாளியின் கதை!

கந்தன் என்ற நெசவுத்தொழிலாளி பரம ஏழை. காலை, 6:00 மணிக்கு தறியில் அமர்வான். மனைவி கொடுக்கும் கூழைக் கூட, தறியில் இருந்தபடியே குடிப்பான். அப்படி பாடுபட்டும் குறைந்த வருமானமே கிடைத்தது. இதில், அவனுக்கு மூக்குப்பொடி போடும் பழக்கம் வேறு.

பக்கத்துக் கடைக்காரர் வேலனும், கந்தனும் நண்பர்கள். வேலன் சிறந்த சிவ பக்தன். நெற்றி நிறைய திருநீறு பூசி, நமசிவாய நாமத்தை மனதுக்குள் உச்சரித்தபடியே வியாபாரம் செய்வான். தினமும், கந்தனிடம் வந்து ஜன்னல் வழியாக பொடி கேட்பான், வேலன். கந்தனும் கொடுப்பான்.

ஒருநாள் கந்தனின் மனைவி, 'சிவராத்திரி வருது. ஒருநாள் மட்டும் உள்ளூரில் இருக்கும், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவோமே...' என்றாள்.

மறுத்து விட்டான், கந்தன்.

அன்று ஒரு துறவி வந்தார். 'கந்தா! நீ விரதம் இருக்க தேவையில்லை. ஐந்து நிமிடம் பூஜை செய்யக் கூடவா முடியவில்லை...' என்றதும், 'அந்த நேரத்திற்குள் நான் சிறிதளவு நெய்து விடுவேன். என வே முடியாது...' என்றான், கந்தன்.

'சரி... நீ வேறொன்றும் செய்ய வேண்டாம். தினமும் நெற்றியில் திருநீறு பூசிய ஒருவரை பார். உனக்கு, சிவன் அருள் கிடைக்கும். இதற்காவது நேரம் கிடைக்குமா?' என்று கேட்டார், துறவி.

'ஆகா! நண்பன் வேலன் திருநீறு பூசும் வழக்கம் உள்ளவனாயிற்றே... அவன் பொடி வாங்க வரும் போது, பார்த்தால் போகிறது...' என, நினைத்த கந்தன், 'தினமும் அவ்வாறே செய்கிறேன்...' என்று சத்தியம் செய்தான்.

அதுபோல தினமும், வேலனின் நெற்றியைப் பார்த்து வந்தான். ஒருநாள், வேலன் வரவில்லை. அவனைத் தேடி சென்ற, கந்தன் ஒரு தோட்டத்தில் அவனை பார்த்தான். 'பார்த்து விட்டேன்... பார்த்து விட்டேன்...' என்றபடியே வீடு திரும்பினான்.

அந்த நேரத்தில், தோட்டத்தில் மண்வெட்டியால் கொத்திக் கொண்டிருந்தான், வேலன். உள்ளே இரண்டு குடங்களில் தங்கக்காசு புதையல் கிடைத்தது. இதைத்தான், 'பார்த்து விட்டேன்...' என, கந்தன் சொன்னானோ என நினைத்தபடியே, குடங்களுடன் கந்தனின் வீட்டுக்கு வந்தான்.

ஒரு குடத்தை அவனிடம் கொடுத்து, 'இதைத்தானே 'பார்த்து விட்டேன், பார்த்து விட்டேன்!' என்றாய். இதில், தங்கக்காசுகள் உள்ளன. வெளியே சொல்லாதே. தெரிந்தால், அரண்மனை அதிகாரிகள் இதைப் பறித்து சென்று விடுவர். ஒரு குடத்தை நீ வைத்துக் கொள்...' என, சொல்லி கிளம்பினான்.

உண்மையில், கந்தன் பார்த்தது அவனது நீறு பூசிய நெற்றியைத் தான். குடங்களை அவன் கவனிக்கக்கூட இல்லை.

பார்த்தீர்களா! திருநீறு பூசியவரை பார்த்தாலே இப்படி ஒரு அதிர்ஷ்டம் என்றால், இறைவனை முறைப்படி வணங்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என, சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

விரத காலங்களில் விநாடி நேரமாவது மனதார கடவுளைச் சிந்தியுங்கள். அடையப் போகும் பலனுக்கு அளவே இருக்காது.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us