PUBLISHED ON : அக் 25, 2026

அக்., 25 - ஐப்பசி பவுர்ணமி
ஐப்பசி மாத பவுர்ணமிக்கு மிகுந்த விசேஷம் உண்டு. சந்திரன், பூமிக்கு அருகில் வரும் நாட்களில் இதுவும் ஒன்று. இந்த நாளில், சிவாலயங்களில் அன்னாபிஷேகம் செய்யப்படும். இந்த அபிஷேகத்திற்கு, ஐப்பசி பவுர்ணமியை ஏன் தேர்ந்தெடுத்தனர் தெரியுமா?
அன்னம் என்றால், வெள்ளைச் சோறு. சோற்றுக்கும், சந்திரனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஜோதிடத்தில் சந்திரனை, 'அன்னகாரகன்' என, அழைப்பர். அதாவது, உணவின் அதிபதி. சந்திரனுக்குரிய தானியமும் நெல் தான். எனவே, சிறப்பாக ஒளி வீசும் ஐப்பசி பவுர்ணமியை அன்னாபிஷேகத்துக்கு தேர்ந்தெடுத்தனர்.
பவுர்ணமி நாட்களில், பலரும் திறந்த வெளியில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிடுவர். இதற்கு காரணம், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. சந்திரனின் ஒளிக்கற்றை உணவில் படும் போது உடல்நலனும், மனநலனும் சீராக இருக்கும். சந்திரனை, மனோகாரகன் என்பர். சந்திர ஒளி, மனதிற்கும் பலத்தைத் தரும். குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி தாய்மார்கள் உணவூட்டுவதன் ரகசியமும் இதுவே.
சந்திரனின் பலம் அதிகமாக இருக்கும் ஐப்பசி பவுர்ணமியன்று, சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வர். சிவனின் அருளும், சந்திரனின் ஒளியும் கலந்த உணவுக்கு சத்து அதிகம்.
சிவலிங்கத்தின் ஆவுடையாரின் அடிப்பகுதியில் இருந்து, பாணத்தை மறைக்குமளவு வெள்ளைச் சோறால் அபிஷேகம் செய்வர். பாணத்தை மறைத்த உணவுக்கு சக்தி மிக மிக அதிகம். இதை பக்தர்களுக்கு கொடுக்கும் வழக்கம் இல்லை. நீர்நிலைகளில் கரைத்து, மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களுக்கு கொடுத்து விடுவர். ஆவுடையார் பகுதியை மறைத்திருக்கும் உணவில் தயிர் சேர்த்து பக்தர்களுக்கு விநியோகிப்பர்.
அன்னாபிஷேகம் நடத்தப்படுவதற்கு ஒரு வரலாறும் உண்டு.
இந்த உலகில், உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என, பார்வதியிடம் சொன்னார், சிவன். அத்துடன் பஞ்சத்தையும் உண்டாக்கி விட்டார். உலக ஜீவன்கள் அனைத்தும் பசியால் வாடின.
'மற்ற விஷயங்கள் போகட்டும், உணவு எப்படி முக்கியத்துவம் இல்லாதது ஆகும்? உணவின்றி ஜீவன்களால் எப்படி வாழ முடியும்?' என, சிவனிடம் நியாயம் கேட்டாள், பார்வதி. அத்துடன், சிவனுக்கு தீராப் பசியை உண்டாக்கி விட்டாள். புண்ணிய நகரான காசியில், அன்னபூரணி என்ற பெயரில் அமர்ந்து, உயிர்களுக்கு தன் தங்கக்கரண்டியால் உணவளித்தாள், அம்பிகை. பசி தாளாத சிவன், அவளிடமே பிச்சை வாங்கி, பசி நீங்கப் பெற்றார்.
இதனால் தான் ஐப்பசியில், காசியில் அன்னக்கூட்டு திருவிழா நடக்கிறது. அன்று, அன்னபூரணி லட்டு சப்பரத்தில் பவனி வந்து, சிவனது பசியையும், உயிர்களின் பசியையும் தீர்க்கிறாள் என்பது, ஐதீகம். அங்கு நடக்கும் அன்னக்கூட்டு விழா தான், இங்கு அன்னாபிஷேகமாக நடக்கிறது.
தெய்வத்துக்கு சமமானது, உணவு. எனவே, அதை வீணாக்காமல், உயிர்களின் பசி போக்க முன்வர வேண்டும்.
தி. செல்லப்பா
