தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உனக்காகவே நான்! (25)

உனக்காகவே நான்! (25)

உனக்காகவே நான்! (25)

2


PUBLISHED ON : அக் 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2026

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம்: நித்யா, ராஜாமணி மற்றும் அத்தை-மாமாவை, கோவிலுக்கு சென்றுவர கூறிவிட்டு, 'ப்ளையிங் கிளப்'க்கு சென்றான், சித்தார்த்.

ஹெலிகாப்டரில் பறக்க வேண்டும் என்று தோன்றவே, அதில் ஏறி, ஓட்ட ஆரம்பித்தான். திடீரென, பாட்டியின் குரல், சித்தார்த்தை இன்னும் உயரமாக செல்ல கூறியது. எதைப்பற்றியும் சிந்திக்காமல், உயர, உயர பறக்க ஆரம்பித்தவன், ஒரு கட்டத்தில், கரும் மேகத்தினுள் சென்று, காணாமலும் போனான், சித்தார்த்.

கோவிலுக்கு சென்று திரும்பி, வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த, ராஜாமணிக்கு போன் செய்து, வீட்டுக்கு அழைத்து, சித்தார்த் காணாமல் போன தகவலை தெரிவித்தார், கிரிக்கெட் போர்டு தலைவர் ஸ்ரீனிவாசன்.

ஸ்ரீனிவாசன், ராஜாமணி ஆகிய இருவரும், 'ப்ளையிங் கிளப்' சென்று விசாரிக்க, அதே பதிலை கூறினர். விமான நிலைய காட்டுப்பாட்டு அறை அதிகாரியிடம் இதுபற்றி கேட்க, எதன் மீதாவது மோதி இருந்தால், 'ராடார்' காட்டியிருக்கும். ஆனால், என்று அவர் இழுக்க, நிலைக்குலைந்து போயினர், ராஜாமணியும், ஸ்ரீனிவாசனும்.

சித்தார்த் ஓட்டி சென்ற, 'ஹெலிகாப்டர்' எப்படி காணாமல் போயிருக்கும் என்று, விமானநிலைய அதிகாரியிடம் கேட்டான், ராஜாமணி.

'ஒரே ஒரு சாத்தியம் தான் இருக்கிறது. 'சிக்னலை' மீறி வேறு எங்காவது போய் தரையிறங்கியிருக்கலாம் அல்லது கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம்.'

'சார், சார்...' என்று பதறினர், ஸ்ரீனிவாசனும், ராஜாமணியும்.

“அப்படி சொல்லாதீர்கள், சார்,' என்று கெஞ்சினர்.

'அப்படி சொல்ல எனக்கு மட்டும் துணிகிறதா என்ன? ஆனால், வேறு வழியில்லை, சார். நானும், சித்தார்த் கவுதமி ரசிகன் தான்,” என்றார்.

'வேறு செய்தி ஏதும் கிடைத்தால் தெரிவிக்கிறீர்களா?' என்று கேட்ட, ராஜாமணியின் முகத்தைப் பரிதாபமாக பார்த்தார், அந்த அதிகாரி. பேசிய அவரது குரல், 'தழுதழுத்தது.

“அப்படி எந்த செய்தியும் கிடைக்க வாய்ப்பில்லை.”

“அப்படியானால்?' “காணாமல் போன, போனது தான்.'

'ப்ளீஸ்... ப்ளீஸ், 'ஸ்டாப் இட்' சார்,' என்று கண்கலங்கினான், ராஜாமணி.

'உங்கள் நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன். அது, பொய்யாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன், மிஸ்டர் ராஜாமணி.”

அந்த அதிகாரிக்கு நன்றி சொல்லி, வெளியில் வந்தனர், ஸ்ரீனிவாசனும், ராஜாமணியும். காரில் ஏறி அமர்ந்த, ராஜாமணி கண்ணீர் விட்டுக் கதறினான்.

“கல்யாணமாகி நாலே மாசம் தான் ஆகிறது. அதில், மூன்று மாதம் கர்ப்பிணி வேறு... இதை எப்படி சார் வீட்டில் போய் சொல்வேன். என்னாலேயே தாங்க முடியவில்லை. நித்யா எப்படி சார்

தாங்குவாள்.'.

''என்ன இப்படி உடைந்து போறீங்க, ராஜாமணி?'

“சித்தார்த் இனிமே வரமாட்டார், சார். அவருடைய குழந்தைத்தனம், விளையாட்டுத்தனம் எல்லாம் சேர்ந்து அவரைக் கொன்று விட்டது, சார். பாட்டி, அவர் மீது வைத்திருந்த அபரிமிதமான அன்பும், பாசமும் அவரை அழைத்துக் கொண்டுவிட்டது. பாட்டியிடமே போய் சேர்ந்து விட்டார். இது தான் பாட்டி, செத்தும், கெடுத்தாள் என்பது. பாட்டி, நித்யாவை நினைக்கவில்லை. தன் பேரனுக்கு ஒரு பேரனோ, பேத்தியோ பிறக்கப்போவதை நினைக்கவில்லை. எத்தனை சுயநலம், சார் அந்தப் பாட்டிக்கும். தனக்கு வேண்டும் என்று தன் பேரனைக் கூட்டிக்கொண்டு போய் விட்டாரே, சார்.'

'இந்த விஞ்ஞான காலத்தில் இதெல்லாம் சாத்தியமா?'

“இந்தியா முழுவதற்கும் சொந்தமானவன், பிரபலமானவன். அவனைத் தனக்கு மட்டும் சொந்தமானவன் என்று நினைத்து கூட்டிக்கொண்டு போனது எவ்வளவு சுயநலம். எப்படிப்பட்ட அயோக்கியத்தனம்? இதை நான், நித்யாவிடம் எப்படி சார் சொல்வேன்?' என்று வாய்விட்டுக் கதறினான், ராஜாமணி.

ராஜாமணி சொல்வதை நம்ப முடியாமலும், நம்பாமல் இருக்க முடியாமலும் தவித்தார், ஸ்ரீனிவாசன்.

தொடர்ந்து, ஸ்ரீனிவாசனின் மொபைல் போன் அடித்துக் கொண்டே இருந்தது. விசாரித்த பெரும்பாலான பெரிய

மனிதர்களுக்கு, ஸ்ரீனிவாசன் மிகுந்த துக்கத்தோடு பதிலளித்தார். அதற்குள், மீடியாக்களில் செய்தி, 'பிளாஷ் நியூஸாக' சிவப்பு எழுத்தில் பிரதிபலித்தது.

செய்தியை பார்த்து அதிர்ந்து போன, நித்யா அப்படியே சிலை மாதிரி உட்கர்ந்திருந்தாள். கண்களிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை.

'இவர்களை இப்படியே விட்டுவிடக் கூடாது, ராஜாமணி. இவர், வாய்விட்டுக் கதற வேண்டும். உள்ளே அடைத்துக் கொண்டு நிற்கும் அழுகை வெளியில் வர வேண்டும். இல்லாவிட்டால், இவர்களுக்கு மட்டும் ஆபத்தில்லை. வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் கூடத்தான்,' என்றார், டாக்டர் துஷ்யந்த்.

'அதற்கு என்ன செய்யலாம், டாக்டர்?” என்று கேட்டான், ராஜாமணி.

'இவர்களின் கல்யாணம் மற்றும் 'ரிசப்ஷன்' நிகழ்ச்சிகள், 'பென் டிரை'வரில் இருக்கின்றன அல்லவா?'

'இருக்கு டாக்டர்!'

'அதைப் போட்டு இவர்களைப் பார்க்க வையுங்க. சித்தார்த் விளையாடிய 'மேட்சு'களைக் காட்டுங்க. அவர்களின், 'பர்சனல்' வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தெரிந்தால், ஞாபகப்படுத்துங்கள். இவை ஏதாவது ஒன்றில் உடைந்து கதறி அழுதால் தான் உண்டு. வேறு வழி எதுவும் இல்லை,' என்று சொல்லி போய்விட்டார், டாக்டர் துஷ்யந்த்.

ராஜாமணி, தன் பெற்றோர் உதவியோடு, நித்யாவை, 24 மணி நேரமும் பாதுகாத்தான். நித்யாவை அழைத்து போய், குளித்து உடை மாற்றச் செய்தாள், ராஜம். தலைசீவி தளரப் பின்னி விட்டாள். பின்னர் சாதம் பிசைந்து ஊட்டி விட்டாள். ஒரு குழந்தைக்குச் செய்கிற மாதிரி பார்த்துப் பார்த்து செய்தான், ராஜாமணி. 'டிவி'யில் கல்யாண காட்சிகளையும், வரவேற்பு வைபவங்களையும் யாரோ, மூன்றாவது மனுஷி போல் பார்த்துக் கொண்டிருந்தாள், நித்யா.

இவற்றையெல்லாம், டாக்டர் துஷ்யந்திடம் தெரிவித்தான்.

“ஒன்று செய்யுங்கள், ராஜாமணி. இடமாற்றம், மாற்றத்தை ஏற்படுத்தலாம். அவர்களை சென்னைக்கு கூட்டிப் போங்கள். முக்கியமாக பிறந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். பிறகு பார்க்கலாம்.'

துஷ்யந்த் சொன்ன மாதிரி, நித்யா மற்றும் பெற்றோருடன் சென்னைக்கு கிளம்பினான், ராஜாமணி.

நேராக, நித்யாவின் வீட்டில் வண்டியை நிறுத்தி உள்ளே போன போது, நாற்காலியில் உட்கார்ந்திருந்த, அப்பா அவளைப் பார்த்து, 'கடுகடு'த்தார்...

“வீட்டை விட்டுப் போன ஓடுகாலி நாய் இப்போ ஏன் திரும்பி வந்திருக்கு?” என்று கர்ஜித்தார்.

அதைக்கேட்டு, முகம் சிவந்து உக்கிரமானான், ராஜாமணி...

'மாமா... நீங்க மனுஷனா இல்ல மிருகமா? உங்களை மிருகம்ன்னு சொன்னா, மிருகங்களுக்கு அவமானம்...” என்றதும், அவனை ஒருமுறை முறைத்து விட்டு, எழுந்து சட்டையை உதறிப் போட்டுக்கொண்டு வெளியில் போய் விட்டார்.

அதற்குள் உள்ளேயிருந்து, ஓடிவந்த, சுசீலாவும், அம்மாவும், நித்யாவைக் கட்டிக் கொண்டு அழுதனர்.

“அம்மா... இன்னைக்கு என்ன கிழமை?' என்று கேட்டாள், நித்யா.

ஏன் இப்படி சம்பந்தமில்லாத ஒரு கேள்வியைக் கேட்கிறாள் என்று நினைத்த அம்மா, மெல்லிய குரலில், 'புதன்கிழமை!' என்றாள்.

'அம்மா... நீ சொன்ன மாதிரி, போன அன்னிக்குப் போய், புதன்கிழமை திரும்பி வந்துட்டேம்மா.'

'நித்...யா...' என்று திடுக்கிட்டாள், அம்மா.

சடாரென்று அம்மாவின் கால்களில் விழுந்து பாதங்களைப் பற்றிக் கொண்ட, நித்யா தன் கண்ணீரால் அப்பாதங்களை கழுவினாள்.

'அம்மா என்னை மன்னிச்சுடுமா. நான் அறியாத வயதில்

தெரியாமல் செய்த தப்பும்மா. ஒரு சமயம் என் காதைப் பிடித்துத் திருகினபோது, 'ஐயோ... வலிக்குதும்மா விட்டுடும்மான்னு கத்தினேன். அப்போ நீ கேட்டியே, 'நீ செஞ்சது எனக்கு வலிக்காதாடீ'ன்னு, வலிக்குதும்மா. அந்த வலி எனக்கு இப்ப புரியுதும்மா... உன் இழப்பு எனக்குத் தெரியுதும்மா. தெரியாமல் செய்தாலும் பாவம் பாவம் தானேம்மா. அந்தப் பாவத்துக்கு தான் எனக்கு தண்டனை கிடைச்சுருக்கும்மா.

'அப்பா உன்னை விட்டு, சகுந்தலாவோடு பிரிஞ்சுப் போனார். இவர் உயிரை விட்டு பிரிஞ்சுப் போயிட்டாரும்மா,'' என்று, நித்யா கதறின கதறல் வீடெங்கும் எதிரொலித்தது. மற்ற அனைவரும் முகத்தை மூடிக்கொண்டு அழ, ராஜாமணி மட்டும் ஆழமான பெருமூச்சு விட்டான். டாக்டர் துஷ்யந்த் சொன்ன பனிப்பாறை உடைந்து சிதறி, ஓடியதைப் பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தான்.

'அது, ஏதோ கோபத்தில் சொன்ன வார்த்தைடீ. சத்தியமா நான் நெஞ்சார சொல்லலடீ. நீ தான்டி என்னை மன்னிக்கணும். மன்னிச்சுடுடீ...' என்று யாருமே எதிர்பார்க்காத வகையில், நித்யாவின் கால்களில் விழுந்தாள், அம்மா. நித்யா திடுக்கிட்டு பதறி விலக, ஓடி வந்தான், ராஜாமணி.

“என்னத்தை இது? எழுந்திருங்க. நித்யா இப்போது இருக்கிற நிலைமையில், அவளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமே தவிர, இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தக் கூடாது.'

“கஷ்டப்படுத்தணும்ன்னு நான் செய்யல. ஆனா, அவ பழசையெல்லாம் மறக்கவே இல்லையே, ராஜாமணி?'

“நித்யா மட்டுமில்ல. பழசை மறக்க யாராலும் முடியாதுங்க, அத்தை. சந்தோஷம்னாலும் மறந்து போயிடும். ஆனால், பட்ட கஷ்டங்களும், துக்கமும் மறக்கவே மறக்காதுன்னு உங்களுக்கு தெரியாதா அத்தை?'

தலைகுனிந்து நின்றாள், நித்யாவின் அம்மா.

'கொஞ்ச நாள் எல்லாரும் அமைதியா இருப்போம், அத்தை. பேசாமல் இருப்போம். நித்யாவுக்கு எது தேவையோ, அதை மட்டும் கவனிப்போம். மனசு தேறி தானாக அவ வெளிய வர்ற வரைக்கும் நாமாக எதுவும் பேச வேண்டாம். எதுவும் செய்ய வேண்டாம்.'

“சரி, ராஜாமணி, ' என்று தலையாட்டினாள், நித்யாவின் அம்மா.

சட்டென்று, ராஜாமணியை ஏறிட்ட, நித்யா, “கிளம்பலாமா?' என்று கேட்டாள்.

அந்தக் கேள்வி, நித்யாவின் அம்மாவைத் துணுக்குறச் செய்தது.

“எங்கடீ போகப் போற?' 'அத்தை வீட்டுக்கும்மா.' “ஏன்டீ, நம்ம வீடு இருக்குறப்ப அங்க...' ராஜாமணி இடையில்

குறுக்கிட்டு பேசினான்.

'அத்தை ப்ளீஸ். நான் இப்போதானே சொன்னேன். நித்யாவுக்கு எதிராக எதுவும் பேச வேண்டாம்; செய்ய வேண்டாம்ன்னு.'

'மறந்து வாய் தவறி பேசிட்டேன்... மனசு கேக்கல.'

“அம்மா,” என்று தாயின் தோள் மீது ஆதரவாக கை வைத்தாள், நித்யா.

“தப்பாக நினைக்காதேம்மா. மனசு வருத்தப்படாத. என்ன தான் நீ நம்ம வீடுன்னு சொன்னாலும், இது நம்ம வீடு இல்ல; அப்பா வீடு. நான், ராஜாமணியின் உதவியோடு சில காரியங்கள் செய்யணும். இப்ப செய்யற நிலமையில் நான் இருக்கேம்மா. சித்தார்த் என்னை அந்த உயரத்துல துாக்கி உட்கார வச்சிட்டுப் போயிருக்காரு.

“ஏராளமான பணம், சொத்து எல்லாம் இருக்கு. அதையெல்லாம் முறைப்படுத்தணும். எப்படி செய்யலாம், என்னென்ன செய்யலாம்ன்னு யோசிக்கணும். அவருடைய லாயரையும், ஆடிட்டரையும் சென்னைக்கு வரவழைச்சுப் பேசணும்.

“இனி நான் பெங்களூரு போகப் போவதில்லை. போக என்னால் முடியாது,” என்றவளின் கண்கள், 'கரகர'வென்று கண்ணீர் சிந்தின. அதைப் பார்த்து அனைவரும் கண்கலங்கினரே தவிர, வாய் திறக்கவில்லை.

“பெங்களூருல தான் நான் வாழ்க்கை ஆரம்பித்த இடம். இந்த நாலு மாச வாழ்க்கைக்கா என் மேல ஆசைப்பட்டார். என்னைத் துரத்தித் துரத்தி காதலிச்சார். இந்த நாலு மாசமும் என்னைப் பூவை தாங்குற மாதிரி தாங்கினாரே! வானத்துல பறக்க வச்சவர், வானத்தோட போயிட்டாரே?' என்று கதறிக் கதறி, குமுறி அழுதாள். தாங்க முடியாத துக்கத்தில் அப்படியே சுருண்டு தரையில் உட்கார்ந்தாள்.

அவளைத் தாங்க ஓடிப்போன, நித்யாவின் அம்மாவை சைகை காட்டி தடுத்து நிறுத்தினான், ராஜாமணி.

'வேண்டாம், அத்தை, ' என்று மிகவும் மெதுவாகச் சொன்னான்.

'அவள் அழட்டும், அத்தை. அவளை அழ விடுங்கள். இப்படி அவளை அழ வைக்க வேண்டும் என்று சொல்லித்தான், டாக்டர் அவளை சென்னைக்கு அனுப்பினார். தன் துக்கம் முழுவதையும் கொட்டித் தீர்க்கட்டும். உள்ளுக்குள் அடைத்து வைப்பது அவளுக்கு மட்டுமல்ல, குழந்தைக்கும் ஆபத்து என்று டாக்டர் எச்சரித்திருக்கிறார்.”

நித்யாவின் அம்மா, 'சரி...' என்று தலையாட்டினாள்.

கால்மணி நேரத்திற்கு மேல் அழுது தீர்த்த, நித்யா பின் மெல்ல சுதாரித்து நிமிர்ந்து, சுசீலாவைப் பார்த்தாள்.

'குடிக்க கொஞ்சம் தண்ணி கொடேன், சுசீலா, என்றாள்.

ஒரு செம்பு நிறைய குளிர்ந்த நீரும், டம்ளரும் கொண்டு வந்து தந்தாள், சுசீலா. டம்ளரை ஒதுக்கிய, நித்யா செம்பைத் தூக்கி, 'மடமட'வென்று நீர் முழுவதையும் குடித்து முடித்தாள். துக்கம் மொத்தமும் அடித்துக் கொண்டு போய், மனசு காலியான மாதிரி இருந்தது.

மெல்ல தலையை உயர்த்தி, அம்மாவைப் பார்த்தாள். பின் அத்தையை, மாமாவை பார்த்தாள். கடைசியாக, ராஜாமணியை ஏறிட்டுச் சொன்னாள்...

“நான் அவர் கூட, நாலே மாசம் தான் வாழ்ந்தேன், ராஜாமணி. ஆனால், நான்கு யுகம் வாழ்ந்த திருப்தியும், சந்தோஷமும் ஏற்பட்டு விட்டது. இதுபோதும் எனக்கு. நான், வாழ்ந்து முடித்து விட்டேன். இனி எனக்காக யாரும் அழக்கூடாது. ஒரு சொட்டு கண்ணீர் கூட விடக்கூடாது சரியா?”

அனைவரும் சரி என்று தலையாட்டினர்.

“போகலாமா?” என்று கேட்டவாறு எழுந்து நின்றாள்.

“போவதற்கு முன் கடைசியாக ஒரு விஷயம் சொல்லணும். பையன் பிறந்தால் அவர் என்ன பேர் வைக்கணும்ன்னு சொன்னார் தெரியுமா?”

எல்லாரும், அவள் முகத்தை ஒரு எதிர்பார்ப்புடன் ஏறிட, அழுத்தமான குரலில் சொன்னாள்.

“ராஜாமணி!”

வாய் திறக்காமல், சத்தம் எழாமல் உள்ளுக்குள் குமுறினான், ராஜாமணி.



-தொடரும்

- இ. ரங்கநாயகி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us