PUBLISHED ON : மார் 22, 2026

முன்கதைச் சுருக்கம்: 'ராகிங்' பற்றிய கட்டுரை எழுத,
கல்லுாரிக்கு சென்ற தீபாவை,'ராகிங்' செய்ய முயன்றனர் மாணவர்கள். அப்போது,
அங்கு வந்த மாணவர் தலைவனான, வருண் அவர்களிடமிருந்து, தீபாவை காப்பாற்றி,
கல்லுாரி பிரின்சிபாலிடமும் தெரிவித்து, 'ராகிங்' பற்றிய தேவையான தகவலை
கொடுத்து அனுப்பினான்.
துப்பறியும் நிறுவனம் நடத்தும், யுவராஜை சந்திக்க,
கோவாவுக்கு சென்ற ஆராதனா, தொழிலதிபர் ஞானசேகரனை சிக்கலில் மாட்டிவிட்ட,
அஷ்வத் என்பவன் பற்றிய விபரங்களை, யுவராஜிடமிருந்து தெரிந்து கொண்டாள்.
கோவாவில், அஷ்வத் நடத்தும், 'கேசினோ' எனப்படும் சூதாட்டம் நடக்குமிடத்தில்,
ஏதாவது தகவல் கிடைக்குமா என, அறிந்து கொள்ள ஆராதனாவும், யுவராஜும்
சென்றனர். அப்போது...
கேசினோவில், விளையாடி கொண்டிருக்கும் ஒரு பெண்ணின்
காலடியில் கிடந்த பர்ஸை, அவளிடம் எடுத்துக் கொடுத்த, ஆராதனாவை கோபமாக
திட்டினாள், அப்பெண்மணி.
ஆராதனாவையும், அந்தப் பெண்மணியையும் பலர் திரும்பிப் பார்த்தனர்.
''என்ன தப்பு நடந்து விட்டது என்று இப்படிக் கத்துகிறீர்கள்? கீழே கிடந்த
பர்ஸைத் தானே எடுத்துக் கொடுத்தேன்?'' என்று, திகைப்பு நீங்காமல்,
ஆங்கிலத்தில் கேட்டாள், ஆராதனா.
அந்தப் பெண்மணியோ எரிச்சலாக, 'டோன்ட் டச்!' என்று விரல் ஆட்டி எச்சரித்தாள்.
ஆராதனா உதவிக்காக, யுவராஜைத் திரும்பிப் பார்க்க, அவன் அவளைச் சற்றும்
சட்டை செய்யாமல் அங்கிருந்த இயந்திரம் ஒன்றின் எதிரே அமர்ந்து விளையாட
ஆரம்பித்தான்.
'ஏய்!' என்று அவன் தோளை, ஆராதனா தொட, அவனும் விருட்டென்று எழுந்தான்.
''ஒரு தடவை சொன்னா உனக்கு புத்தி வராதா? எதுக்கு ஒவ்வொருத்தரையா தொட்டுத்
தொந்தரவு பண்றே?'' என்று, யுவராஜ் கத்தியதும், மிரண்டு பின் வாங்கினாள்,
ஆராதனா.
அவன் மீண்டும் இயந்திரத்தில் கவனம் செலுத்த, மேலாளர் போல் இருந்த ஒருவர் விடுவிடுவென்று விரைந்து வந்தார்.
''சாரி, மேடம். முதல் முறையா இங்க வர்றீங்களா?''
தலையசைத்தாள், ஆராதனா.
''இங்க வர்றவங்களுக்கு சில, 'சென்டிமென்ட்ஸ்' உண்டு. வெளி ஆட்கள் யாராவது
தன்னை தொட்டா, அவங்களோட துரதிர்ஷ்டம் இவங்களுக்கு வந்து ஒட்டிக்கும்ன்னு
நெனைப்பாங்க. பர்ஸ் கிடந்தாலும், கண்டுக்காமப் போயிட்டே இருங்க. யாரையும்
தொடாதீங்க,'' என்றார், அந்நபர்.
புரிந்தது என்று தலையசைத்து விட்டு, நகர்ந்தாள், ஆராதனா. யுவராஜை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
கேசினோவில், வெவ்வேறு விதங்களில் சூதாடும் மற்ற சில பகுதிகளையும்
பார்வையால் நோட்டமிட்டவாறு ஒருமணி நேரம் அங்கே செலவு செய்து, பின், தான்
தங்கியிருந்த, 'ரிசார்ட்'க்கு திரும்பினாள், ஆராதனா.
இருபது நிமிடங்கள் கழித்து 'ரிசார்ட்'க்கு வந்து சேர்ந்து கொண்டான், யுவராஜ்.
''சாரி, ஆரூ. எதுக்கு அங்க சத்தம் போட்டேன்னு குழம்பிட்டியா?''
சிரித்தாள், ஆராதனா...
''எனக்கும் கொஞ்சம் மூளை வேலை செய்யும், யுவா. மொதல்ல, அதிர்ச்சியா தான்
இருந்தது. நிமிர்ந்து பார்த்தா அங்கங்க, 'சிசிடிவி கேமரா!' யார்
கவனத்தையும் கவராம நாம போயிருந்தா பிரச்னை இல்ல. எப்ப ஒருத்தி சத்தம்
போட்டு எல்லார் கவனத்தையும் என் பக்கம் திருப்பிட்டாளோ, அப்பவே நீ,
'அலர்ட்'டாயிட்டே. என் கூட சேர்த்து உன்னை யாரும் ஞாபகம் வெச்சுக்கக்
கூடாதுன்னு தெரியாதவன் மாதிரி காட்டிக்கிட்டே. கரெக்ட்டா?''
''எக்ஸாட்லி! ஆரூ.''
''சரி, கேசினோல எவ்ளோ ஜெயிச்சே, எவ்ளோ தோத்தே?''
''ஜெயிச்சது நுாறு. வீணாப்போனது ஐநுாறு. நீ?''
''நான் வெளையாடவே இல்ல. கேசினோல வேற ஒரு, 'இன்ட்ரஸ்டிங்'கான மேட்டர் பார்த்தேன்.''
'என்ன?' என்பது போல், அவள் முகத்தை ஆர்வமாகப் பார்த்தான், யுவராஜ்.
''பாப்கார்ன், கோலா விக்கற கவுன்ட்டர்ல செகப்பு தொப்பி போட்டுக்கிட்டு ஒரு
பையன் நின்னுட்டிருந்தானே... அவன் சில பேருக்கு மட்டும் ரகசியமா ஏதோ ஒரு
பொட்டலத்தை பாப்கார்ன்ல போட்டுக் கொடுக்கறதை கவனிச்சேன். போதை மருந்து
தானே?''
யுவாவின் கண்கள் ஆமோதித்து விரிந்தன.
''துப்பறியும் தேவதையே, எங்க கம்பெனில பார்ட்னரா சேர்ந்துடறியா?''
''நெக்ஸ்ட் பிளான் என்ன, யுவா?''
''அஷ்வத்தோட கேசினோல இன்னும் என்னென்ன தப்பு நடக்குதுன்னு பார்க்க எனக்கு
ரெண்டு, மூணு நாள் வேணும். சும்மா தெரிஞ்சுக்கிட்டா போறாது. ரகசிய கேமரா
வெச்சு, கொஞ்சம் ஆதாரமும் சேகரிக்கணும். நாம சேர்ந்து போக முடியாது, ஸோ,''
என்று, யுவராஜ் சொல்லும் போது...
''எனக்கும் வெளிநாட்டு
துறைமுகங்களுக்கு, என் எம்.டி., கல்யாண் மேத்தா கூட போகற வேலை வருது.
அதுக்கு முன், கீர்த்திலால் கம்பெனில முடிக்க வேண்டிய வேலையும் கொஞ்சம்
இருக்கு. மும்பை போயிட்டு ஊர் திரும்பறேன். நாளைக்கு காலைல ப்ளைட்,''
என்றாள், ஆராதனா.
''அதுவரைக்கும் நாம பிசினஸ் பேச வேணாம், ஆரூ.''
''பின்னே?''
''பேசாம செய்யறதுக்கு எவ்ளோ விஷயம் இருக்கு!''
''லைக் வாட்?'' ஆராதனாவின் குரலில் குறும்பு கொப்பளித்தது.
''டின்னர் சாப்புடறது, நட்சத்திரம் பாக்கறதுன்னு இன்னும் என்னென்னவோ,'' என்று கூறி புன்னகைத்தான், யுவராஜ்.
''ஏய், என் மேல கோபமா?'' என்று, கையிலிருந்த சாக்லேட் பாரை நிமிஷாவிடம் நீட்டினான், திலகன்.
''கோபமா, எனக்கா? உன் மேலயா, எதுக்கு?''
நிமிஷா அந்த சாக்லேட்டை வாங்கிப்பிரித்து, ஒரு கடிகடித்து, கண்களைச்
சுருக்கி, தலையைச் சற்றே சாய்த்து ஒயிலாகக் கேட்டபோது, அப்படியே அந்த
முகத்தைப் பிடித்து...
ஆசையை அடக்கிக் கொண்டு பதில் சொன்னான், திலகன்...
''நேத்து உன்னை விட்டுட்டு, சாதனா கூட, பீர் சாப்பிடப் போனதுக்கு கோபமில்லியே?''
''ஏய், யார் கூட பீர் சாப்புடணும்ன்னு முடிவு செய்யறதெல்லாம் உன் உரிமை.
அதுல கோபப்பட என்ன இருக்கு. நான் கூப்பிட்டாலும் வருவே இல்ல... திலக்.''
''நிச்சயமா!''
திலகனுக்கு நிம்மதியாக இருந்தது. எவ்வளவு எளிதாக எடுத்துக் கொண்டு விட்டாள்!
நிமிஷாவின் ஒவ்வொரு அசைவுக்கும், அவள் காதில் அணிந்திருந்த மாட்டல்கள் நாட்டியமாடுவதை பார்க்கவே ரசனையாக இருந்தது.
''நேத்து என் ரூமுக்குத் தேடிப்போனதா சொன்னியே, ஏதாவது முக்கியமான விஷயமா, நிமிஷா?''
''புதுப்படம் ஒன்றின், ப்ரீமியர் ஷோவுக்கு ரெண்டு டிக்கெட் இருந்தது.
துணைக்கு உன்னை கூட்டிட்டுப் போலாமேன்னு பார்த்தேன். நீ இல்ல. அம்மாவை
இழுத்திட்டுப் போனேன்,'' என்றாள்.
'ஐயோ, ஒரு நல்ல வாய்ப்பை இழந்து விட்டேனே...' என்று வருந்தினான், திலகன்.
''உனக்கு வேற கேர்ள் பிரண்டு யாராவது இருக்காளா? திலக்.''
சாதனா கேட்ட அதே கேள்வி.
''பிரேக்-அப் ஆயிருச்சு,'' என்று, சாதனாவிடம் சொன்ன அதே பொய்யை, நிமிஷாவிடமும் அவசரமாக சொன்னான், திலகன்.
''அப்ப உனக்கு ஒரு, 'சர்ப்ரைஸ்' இருக்கு,'' என்று குறுகுறுப்பாக அவனைப் பார்த்தபடி சொன்னாள், நிமிஷா.
இன்டர்காம் ஒலித்து, பொதுமேலாளர், ராஜீவ் அவனைத் தன் அறைக்கு அழைக்க, உரையாடல் பாதியில் அறுந்தது.
தீ பா எழுதிய, கல்லுாரி, 'ராகிங்' பற்றிய கட்டுரையைப் படித்து முடித்து,
நிமிர்ந்தார், எடிட்டர். கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.
''அசத்திட்டீங்க, தீபா.''
தீபாவின் முகம் மலர்ந்தது.
''தேங்க்ஸ், சார்.''
''மாணவர்கள் இவ்ளோ ஒத்துழைப்பாங்கன்னு நான் நெனைக்கவேயில்ல. உதவி செய்த
அந்தப் பையனுக்கு, 'தேங்க்ஸ்' சொன்னீங்களா?'' என்றார், எடிட்டர்.
''வருணுக்கா? பசங்க யாரையும் போட்டோ எடுக்கக்கூடாதுன்னு தடுத்துட்டானே, சார்,'' என்றாள், தீபா.
''நியாயம் தானேம்மா? அவங்க எதிர்காலத்தைப் பத்தியும் யோசிச்சிருக்கான்,
அவன். நம்ம ஓவியரை விட்டு 'ராகிங்' பற்றி படமா வரைஞ்சிக்கலாம். இன்னொரு
விஷயம்... விபரம் கொடுத்தவங்க யாரோட உண்மையான பெயரையும் பயன்படுத்தாதீங்க.
கடந்த, பத்துப் பதினஞ்சு வருஷத்துல, 'ராகிங்' தொடர்பா வந்த செய்திகளைச்
சேகரிச்சு, முக்கியமா என்ன மாறியிருக்கு, என்ன மாறலைன்னு ரெண்டு மூணு பாரா
சேர்த்துருங்க,'' என்றார், எடிட்டர்.
''சரி, சார்,'' என்று அவரிடம் தலையாட்டி விட்டு வந்தாலும், 10 ஆண்டுக்கான செய்திக்கு எங்கே போவது என்று குழம்பினாள், தீபா.
''பெரும்பாலும் இணையத்துல கெடைக்கும் அல்லது பொது நுாலகத்துக்குப் போங்க.
நம்ம நாளிதழ் தவிர இன்னும் பல நாளிதழ்களோட தொகுப்பு வெச்சிருப்பாங்க. இப்ப
எல்லாமே டிஜிட்டலா வேற கெடைக்குது,'' என்று வழி சொன்னார், உதவி ஆசிரியர்,
நாதப்ரியன்.
இ ரவு தன் அறையில், இணையத்தில், 'ராகிங்' தொடர்பாக
முந்தைய ஆவணத் தொகுப்புகளை மேய்ந்து, குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்த
போது, திடீரென்று தான், தீபாவுக்கு அந்த யோசனை வந்தது...
'ஆறு
ஆண்டுகளுக்கு முன் தன் முகத்தில் அமிலம் அடிக்கப்பட்டது பற்றி நாளிதழ்களில்
படித்திருக்கலாம் என்று, ஆராதனா சொன்னாளே, அப்படியென்றால், அந்தச்
செய்தியும் இணையத்திலோ, நுாலகத்திலோ கிடைக்குமே!
'ஆசிட் அடித்தது
யார் என்று, ஆராதனாவும் சொல்ல மறுக்கிறாள், முத்துராமனும் பிடி கொடுக்க
மறுக்கிறார். ஆராதனா சொல்வது உண்மை தானா, எந்த விதத்தில் என் அப்பாவுக்கு
அதில் தொடர்பு இருந்தது என்று கண்டுபிடிக்க முடியாதா என்ன?
'மண்டையில் நச்சரித்துக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு விடை தேட ஒரு வழி
பிறந்து விட்டது...' என்று நினைத்து, சுறுசுறுப்பானாள், தீபா.
'தீ பா ஷிப்பிங்' அலுவலகத்தின் முந்தைய ஒப்பந்தங்கள் எல்லாவற்றையும் கவனமாகப் படித்துப் பார்த்தாள், ஆராதனா.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் தான், அஷ்வத்துடன் ஒப்பந்தம் ஆகியிருந்தது. மற்ற
ஒப்பந்ததாரர்களுக்கு கொடுத்ததை விட, அஷ்வத்துக்கு அதிக கமிஷன்
கொடுக்கப்பட்டிருப்பதை அவள் கவனித்தாள். ஞானசேகரன் மரணத்துக்கு பின் அந்த
ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்பதையும் கவனித்தாள். இவை தவிர,
அஷ்வத் தொடர்பான எல்லா குறிப்புகளையும் பதிவு செய்து கொண்டாள்.
திட்டமிடாமல், அவளுக்கு அந்த யோசனை வந்தது. உடனே, அஷ்வத்தின் அலுவலக எண்ணை தன் மொபைல் போனிலிருந்து அழைத்தாள்.
''மிஸ்டர் அஷ்வத்துடன் பேச முடியுமா?''
''நீங்கள்?'' என்று பணிவுடன் ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
''கீர்த்திலால் பிரதர்ஸ் கம்பெனியில் முக்கியப் பதவியில் இருக்கிறேன். சில ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பாக பேச வேண்டும்.''
''நா ன் அஷ்வத்ஜியின் பி.ஏ., பேசுகிறேன். லைனில் இருங்கள். எங்கள் மேலாளருக்கு இணைப்பை கொடுக்கிறேன்,'' என்றாள், அப்பெண்.
''இல்லையில்லை. வேறு யாருடனும் பேசுவதில் அர்த்தமில்லை. அஷ்வத்துடன் தான் பேச விரும்புகிறேன். நேரில் சந்திக்கவும் தயார்.''
எதிர்முனை சற்றே தயங்கியது.
''உங்கள் எண்ணைக் கொடுங்கள். அஷ்வத்ஜியிடம், 'அப்பாயின்ட்மென்ட்' வாங்கிய பின், தொடர்பு கொள்கிறேன்.''
தன் மொபைல்போன் எண்ணைக் கொடுத்தாள், ஆராதனா. 'சந்திப்புக்காகக்
காத்திருக்கிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள்...' என்று கூறி, தொடர்பை,
'கட்' செய்தாள், ஆராதனா.
அ ந்தப் பொது நுாலகத்தில், தினசரிகள் பிரிவில் உட்கார்ந்திருந்தாள், தீபா.
''கடைசி, 10 வருஷத்துச் செய்திகள் இந்த, 'போல்டர்'ல இருக்கு. மூவாயிரத்து
அறுநுாறு நாள் செய்தியும் விரிவா பார்த்து, நீங்க தேடற செய்தியைக்
கண்டுபிடிக்க முயற்சி பண்ணினா, பைத்தியம் பிடிச்சுரும். இன்னொரு,
'போல்டர்'ல ஒவ்வொரு செய்தியோட தலைப்பும் இருக்கு. அதைப் பார்த்து தேவையான
தலைப்பை, 'க்ளிக்' பண்ணுங்க,'' என்று வழி சொன்னார், நுாலகர்.
'எனக்குப் பத்து வருஷ செய்தியும் தேவையில்லை. ஆறேழு வருஷத்துக்கு முந்தைய
செய்திகள் தான் முக்கியம்...' என்று அவரிடம் சொல்லாமல், 'அமிலவீச்சு'
செய்திகளாகத் தேட ஆரம்பித்தாள், தீபா.
இந்தியாவில் மட்டுமல்ல,
உலகெங்கிலும் அமிலத் தாக்குதல் தொடர்பான பல வன்முறைகள் அரங்கேறியிருந்தன.
பெண்கள் மட்டுமன்றி சில ஆண்களும் அமில வீச்சுக்கு உள்ளாகியிருந்தது
அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. அமிலத் தாக்குதலின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில்
திடுக்கிடும் விதத்தில் இருந்தது.
'காதலிக்க மறுத்த பெண்
முகத்தில் அமிலவீச்சு' என்ற தலைப்புகளில் வந்த செய்திகளைத் தேர்வு செய்து
படித்தாள். ஒவ்வொன்றாகக் கடந்து வந்தபோது, ஆங்கில தினசரி ஒன்றில், ஆறு
ஆண்டுகளுக்கு முந்தைய ஒருதலைப்புச் செய்தி, அவள் கவனத்தை ஈர்த்துப்
பிடித்தது.
'மகள் முகத்தில் வீசப்பட்ட அமிலம், தாயைத் தாக்கியது!'
இது தான்! இந்தச் செய்தி தான், ஆராதனா தொடர்பான செய்தியாக இருக்க வேண்டும். தீபாவின் இதயத் துடிப்பு வேகம் பிடித்தது.
அமிலம் வீசிய குற்றவாளி யார் என்று அறிந்து கொள்ளும் படபடப்புடன், அந்தத்
தலைப்பை, 'க்ளிக்' செய்து, முழுச் செய்தி வெளியான பக்கத்தைத் திறந்தாள்,
தீபா.
- தொடரும்.
சுபா
