sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தீபாராதனா! (17)

/

தீபாராதனா! (17)

தீபாராதனா! (17)

தீபாராதனா! (17)


PUBLISHED ON : ஜன 25, 2026

Google News

PUBLISHED ON : ஜன 25, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: ஆராதனா, முன்பு வேலை செய்த கம்பெனி முதலாளி, கீர்த்திலாலை சந்தித்து, தன் ராஜினாமா கடிதத்தை கொடுத்தாள். அவர், அதை ஏற்காமல், 'எவ்வளவு மாதம் தேவை என்றாலும், விடுமுறை எடுத்துக் கொண்டு, பிறகு வேலைக்கு வரலாம்...' என்று ஆராதனாவிடம் கூறினார். தீபாவின் காதலன் திலகனுக்கு, மும்பையிலுள்ள கம்பெனி ஒன்றில் பயிற்சியாளராக சேர கடிதம் வர, தீபாவிடம் தகவல் கூறி, மும்பைக்கு சென்றான், திலகன். 'தீபா ஷிப்பிங் கம்பெனி'யின் பொது மேலாளராக பதவியேற்றாள், ஆராதனா. அவளை ஊழியர்களிடம், அறிமுகம் செய்து வைத்தார், கம்பெனியின் முந்தைய பொதுமேலாளரான முத்துராமன். பின், அவள் அறைக்கு அழைத்து சென்று, 'உன்கிட்ட ஒரு, 'பர்சனல்' கேள்வி' என்றபடி... 'ஏம்மா அவ்வளவு பெரிய பொய்யை தீபாவிடம் சொன்னாய்?' என்று, கேட்டார். மு ந்தைய அலுவலகம் தொடர்பாகவோ, அவள் அனுபவம் பற்றியோ, முத்துராமன் கேள்வி கேட்டிருந்தால், ஆராதனா அதைச் சுலபமாகக் கையாண்டிருப்பாள். அவர் திடீரென்று, 'பர்சனல்' கேள்வி ஒன்றை வீசுவார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

ஆனால், எந்தத் திகைப்பையும் தன் முகத்தில் காட்டிக்கொள்ளமல், ''தீபாகிட்ட நான் பொய் சொன்னேனா. என்ன சார் சொல்றீங்க?'' என்றாள்.

''உங்கம்மா முகத்தில, இந்தக் கம்பெனியை சேர்ந்த யாரோ ஆசிட் அடிச்சதா சொன்னியாமே. அவ என்னிடம் அது யாருன்னு கேள்வி கேட்டா. எனக்குத் தெரியாம அப்படி ஒண்ணு நடக்க வாய்ப்பே இல்லை. அதைத்தான் சொன்னேன். ஆனா, அவ என்னை நம்பல.''

விஷயம் எப்படி போகிறது என்று புரிந்து கொண்டவுடன், வெகு எளிதாக தன்னை சுதாரித்துக் கொண்டாள், ஆராதனா.

''அது முழுக்க பொய்யில்லை, சார். அதுல பாதி உண்மையும் இருக்கு.''

''உன் பதில் குழப்புது, ஆராதனா. அந்தப் பாதி உண்மை என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?''

தன் வசீகரமான சிரிப்பை உதடுகளில் தவழவிட்டாள், ஆராதனா.

''சார், இந்தக் கேள்விக்கு பதில் தெரிஞ்சுக்கறதுக்காகத்தான் என்னை ஜி.எம்.,மா, 'செலக்ட்' பண்ணீங்களா?''

முத்துராமன் புன்னகை விலகியது.

''சார், ஞானசேகரன் அங்கிள் உங்களைப் பத்தி நெறைய சொல்லியிருக்காரு. நான் உங்க மேல பெரிய மரியாதை வெச்சிருக்கேன். ஆனா, பர்சனலான கேள்விக்கு வெளிப்படையா பதில் சொல்ற அளவுக்கு உங்களை நெருக்கமா நான் இன்னும் நெனைக்கல. தெரிஞ்சுக்க உரிமை இருக்கற, தீபாகிட்டயே முழு உண்மையும் சொல்லல. உங்ககிட்ட சொல்வேன்னு எப்படி சார் எதிர்பார்க்கலாம்?''

''சாரிம்மா. தெரியாம கேட்டுட்டேன்,'' என்று, தன்னை நிதானத்துக்குக் கொண்டு வந்து புன்னகைத்தார், முத்துராமன்.

''சார், இந்த விஷயத்தை இதோட விட்டுருவோம். தயவு செஞ்சு என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க,'' என்றாள், ஆராதனா.

''நிச்சயமா எனக்கு உன்மேல வருத்தம் எதுவுமில்ல. தீபா மாதிரி அவசரப்பட்டு 'படபட'ன்னு வார்த்தைய விடாம, இப்படி உறுதியா இருக்கற உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு.''

''இன்னொரு கோரிக்கை, சார். தீபாவையும், என்னையும் ஒப்பிட்டுப் பேசவும் வேண்டாம்.''

முத்துராமன் வாய்விட்டுச் சிரித்தார்.

''ஐ லைக் யூ!'' என்றார். அவளுடன் கைகுலுக்கி விட்டு வெளியேறினார். அவரை நெருக்கமாக தன் எல்லைக்குள் அனுமதிக்க முடியாது. அதே சமயம் மிகவும் விலக்கி, தொலைவிலும் வைத்து விடக்கூடாது என்று யோசித்தபடியே, கணினியில் அந்த நிறுவனத்தின் விபரங்களை ஆராயத் தொடங்கினாள், ஆராதனா.

மும்பை விமான நிலையம்.

அடேயப்பா, எத்தனை விமானங்கள் புறப்பட தயாராகவும், தரையிறங்க தயாராகவும் இருக்கின்றன! உண்மையிலேயே இந்தியாவின் வணிகத் தலைநகரம் இதுதான் என்று பிரமித்தபடி, தன் பெட்டியை உருட்டிக்கொண்டு, வெளியே வந்தான், திலகன்.

'வெல்கம், திலகன், சென்னை' என்ற அறிவிப்பு பலகையுடன், வெள்ளையுடை அணிந்த ஒருவர் அங்கு நிற்பார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. மிக நல்ல சகுனமாக அது தோன்றியது. அவனைப் பார்த்ததும், முகம் மலர்ந்து அவர் கையாட்டி வரவேற்றார். கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டியதும், அருகில் வந்து அவன் பெட்டியை உரிமையுடன் வாங்கிக் கொண்டார்.

பயிற்சியாளனாக சேர வந்தவனுக்கு வாகனம் அனுப்பி வரவேற்கும் அளவு கம்பெனி முதலாளிக்கு தன்னைப் பிடித்து போய்விட்டதா? சற்றே பெருமையுடன் மும்பையின் காற்றை ஆழமாக உள்ளிழுத்தபடி, அவர் பின்னால் சென்றான், திலகன்.

பார்க்கிங் பகுதிக்கு கூட்டிச்சென்று, அங்கிருந்த காரில் பெட்டியை வைத்து அவர் அவனுக்காக கதவைத் திறந்து பிடித்தார்.

வயது, 40 இருக்கலாம். வெளிர்கருமை நிற சருமம். பெரிய கண்கள். சற்றுப் பின்வாங்கிய தலைமுடி. நரைக்கத் தொடங்கியிருந்த சிக்கனமான மீசை. பிசிறில்லாத பல்வரிசை. துாய்மையான உடைகள்.

''சார், என் பேரு சண்முகம்,'' என்றார்.

''தமிழா?'' என்று கேட்டான், திலகன்.

''ஆமா, சார். நம்ம கம்பெனி எம்.டி., ஐயா இருக்காங்களே, அவங்க மனைவி தமிழ். அதனால, நம்ம கம்பெனில தமிழ் தெரிஞ்சவங்க நெறைய பேர் இருக்காங்க.''

கார் மும்பையின் அடர்த்தியான போக்குவரத்தில் கலந்து, 40 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு கட்டடத்தின் வாசலில் நின்றது.

'விட்டல்ராஜ் டயர்ஸ்' என்றது, சிறிய அறிவிப்புப் பலகை.

''இது கம்பெனி, 'கெஸ்ட் ஹவுஸ்!' இங்க உங்களுக்கு ஒரு ரூம் ஒதுக்கியிருக்காங்க, சார். இன்னிக்கு, 'ரெஸ்ட்' எடுங்க. அதோ, தெரியுதே, சாம்பல் கலர் பில்டிங். அதுதான் நம்ம கம்பெனியோட நிர்வாக பிரிவு உள்ள இடம். நாளைக்கு காலைல, 10:30 மணிக்கு, அங்க எட்டாவது மாடிக்கு வந்திருங்க. எம்.டி., ஐயா உங்களை சந்திப்பார். வேற ஏதாவது வேணும்ன்னா, இங்க செக்யூரிட்டிகிட்ட சொன்னீங்கன்னா, வாங்கித் தருவாங்க,'' என்று கூறி, திலகனை பாதுகாவலர்களுக்கு அறிமுகம் செய்து, அறை வரை பெட்டியை கொண்டுவந்து கொடுத்தார், சண்முகம்.

குளிரூட்டப்பட்ட அந்த அறை சிறியதாக இருந்தாலும், நவீனமாக இருந்தது. தேவையான எல்லா வசதிகளும் கொண்டிருந்தது.

கட்டிலில் அமர்ந்து, தீபாவுக்கு வீடியோ கால் செய்தான், திலகன்.

''ஐயாவை, 'பிக்-அப்' பண்ண கார் வந்துச்சு, தெரியுமா? அவங்க, 'கெஸ்ட் ஹவுஸ்'லயே, ரூமும் குடுத்துட்டாங்க. செம வரவேற்பு,'' என்று பெருமிதம் பொங்க சொன்னான்.

''நல்ல பேரு வாங்குடா. கம்பெனில பெரிய பதவிக்கு வா. உன்கிட்ட, 'பிசினஸ்' கேட்டு அந்த, ஆராதனா வந்து நிக்கணும்.''

''அய்ய, எப்பப் பார்த்தாலும், அவ ஞாபகம் தானா உனக்கு?''

''பாதி நேரம் அவ ஞாபகம். மீதி நேரம் உன் ஞாபகம்.''

''ஆனா, எனக்கு முழு நேரமும் உன் ஞாபகம் தான், தீபூ. என் ரூம் எப்படியிருக்குன்னு பாக்கறியா?''

அவனுக்கான அறையை, தீபாவுக்குக் காட்டும் சாக்கில் அவனும் ரசித்துப் பார்த்தான்.

''உனக்கென்ன குறை, போ!''

''ஒரு குறை இருக்கு, தீபு. கட்டில்ல தனியாப் படுத்து துாங்கணும். நீயும் பக்கத்துல இருந்தா, எவ்ளோ சூப்பரா இருக்கும்?''

''ஒதை படுவே. ஏன்டா, சென்னைல தனியாத்தான படுத்துக் கெடந்தே? மும்பை போனதும் துணை தேடுதோ! அந்தக் கட்டில்ல உன்கூட வேற யாராச்சும் உக்காந்தாக்கூட எனக்குத் தகவல் வந்துரும். கவனமா இருந்துக்க.''

''நீ மிரட்டும்போது உன் அழகு கூடிப்போகுது, தீபூ,'' என்று காற்றில் முத்தம் பறக்க விட்டான்.

''எனக்கு வேற ஒரு கால் வருது. அப்புறம் பேசறேன்,'' என்று சட்டென்று தொடர்பைத் துண்டித்து விட்டாள், தீபா.

ஷூக்களைக் கழற்றி, அப்படியே கட்டிலில் சாய்ந்து படுத்து ஓய்வெடுக்க ஆரம்பித்தான், திலகன்.

உ ணவு இடைவேளையின் போது, தனியார் துப்பறியும் நிறுவனர், யுவராஜுக்கு போன் செய்தாள், ஆராதனா.

''நாசிக்ல தான் இருக்கியா, யுவா?''

''ஆமா. இங்கேர்ந்து, தீபா ஷிப்பிங் கம்பெனி மூலமா கோதுமை, பருப்புலாம் ஏற்றுமதி செய்த அஷ்வத் விவசாயி இல்ல; இடைத்தரகன். என்னென்னவோ, 'பிசினஸ்' பண்ணிட்டிருக்கான். அரசியல் தொடர்புலாம் இருக்கு. அவனைப் பத்தி தகவல்லாம் சேகரிச்சிக்கிட்டிருக்கேன்.''

''அவனுக்கு அரசியல் தொடர்புலாம் இருக்குன்றே. கவனமா இரு, யுவா.''

''ரிஸ்க் எடுக்காம என், 'பிசினஸ்' இல்ல, ஆரூ. உதவி செய்ய என்கூட, ராகேஷ் இருக்கான். அஷ்வத்தோட பின்னணியை முழுசா தெரிஞ்சுக்க கொஞ்சம் டயம் எடுக்கும். ஆனா, முழு விபரமும் சேகரிச்சிருவோம். உன் வேலை எப்படி போயிட்டிருக்கு?''

''சுவாரசியமாத்தான் இருக்கு. கீர்த்திலால் வேற என்னோட ராஜினாமாவை ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரா... லீவு நாள்ல அவங்க கம்பெனிக்கும் கொஞ்சம், 'ஹெல்ப்' பண்ண வேண்டியிருக்கு. எப்படியும் அடுத்த வாரம் ஞாயித்துக்கிழமை மும்பை வருவேன். நீயும் அங்க வா. 'மீட்' பண்ணலாம்.''

மஞ்சுளா முக்கோல் ஊன்றி மெல்ல ஹாலுக்கு நடந்து வந்தாள். அவளுக்கு மிக நெருக்கமாக செவிலியும் உடன் வந்தாள்.

''டிவி போடு,'' என்று சற்று மழலையுடன் சொன்னாள், மஞ்சுளா. ஏற்கனவே, அவள் மூளையில் பதிவாகியிருந்த பல சொற்கள் ஒவ்வொன்றாக அவளுக்கு மீண்டும் பயிற்றுவிக்கப்பட்டு அவள் வசமாகி கொண்டிருந்தன.

அவளை சோபாவில் அமர்த்திவிட்டு, தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள், செவிலி. மஞ்சுளா வழக்கமாகப் பார்க்கும் சேனலைத் தேர்வு செய்தாள். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் பங்கு கொள்ளும் இசை நிகழ்ச்சி அது.

''தீபாவும் சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல பாடி பரிசு வாங்கியிருக்கா, தெரியுமா?'' என்றாள், மஞ்சுளா.

சில வார்த்தைகள் புரிபடாதபோதும், புன்னகைத்துத் தலையசைத்தாள், செவிலி.

அழைப்புமணி ஒலித்தது. செவிலி சென்று கதவைத் திறந்தாள்.

''யாரு?''

''என் பேரு, ஆராதனா. தீபா இருக்காங்களா?''

''அவங்க வெளிய போயிருக்காங்க,'' என்று செவிலி பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மஞ்சுளாவிடமிருந்து குரல் வந்தது.

'அவளை உள்ளே கூப்பிடு' என்பதுபோல், மஞ்சுளா சைகை செய்ய, ''உள்ள வாங்க,'' என்றாள், செவிலி. உள்ளே வந்து, மஞ்சுளாவின் பாதங்களருகே குனிந்து தொட்டுவிட்டு, சோபாவில் அமர்ந்தாள், ஆராதனா.

''எப்படி இருக்கீங்கம்மா?''

தொலைக்காட்சியை அணைக்கச் சொல்லி, ''வண்டி ஓடுது,'' என்றாள், மஞ்சுளா.

உடல் ஒத்துழைக்க மறுத்தபின், எதுவும் நிரந்தரமில்லை என்பது புரிந்து, மஞ்சுளாவின் மனம் சற்று தளர்ந்திருந்தது. யாரையும் எதிரியாகப் பார்க்க மறுத்தது. ஆராதனாவை அவள் பார்த்த பார்வையில் இப்போது மாற்றமிருந்தது. அதுவும், ஆராதனாவின் தாயைச் சந்தித்தது பற்றி, தீபா சொன்னதிலிருந்து, அவர்கள் மீதிருந்த கோபம் வெகுவாகக் குறைந்திருந்தது. சொந்தக் கணவனே பல விஷயங்களை மறைத்து விட்டபோது, யாரோ ஒரு பெண் அநாவசியமாக பொய் சொல்ல மாட்டாள் என்பது அவள் கணிப்பு. ஆராதனாவின் கனிவான புன்னகையும், விசாரிப்பும் அவளுக்குப் பெரும் ஆறுதலைக் கொடுத்தன.

''நம்ம கம்பெனிக்கு வந்துட்டியாமே?'' என்றாள், மஞ்சுளா. உணர்ச்சிகளற்ற குரலில்.

''நானே எதிர்பார்க்கல. அப்படியொரு நல்ல வாய்ப்பு வந்தது. எல்லாம் அவரோட ஆசீர்வாதம்,'' என்றபடி ஹாலில் மாட்டியிருந்த, ஞானசேகரனின் புகைப்படத்தைக் காட்டினாள், ஆராதனா.

''ம்ம்.''

''தீபா வர, 'லேட்'டாகுமா?'' என்று கேட்டாள், ஆராதனா.

''பக்கத்துல தான் போயிருக்காங்க. இப்ப வந்துருவாங்க,'' என, செவிலி சொல்லிக் கொண்டிருக்கும்போது, வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது.

மஞ்சுளாவுக்கு சில மருந்துகள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய, தீபா, கேட்டுக்கு வெளியே நின்றிருந்த காரைப் பார்த்துத் திகைத்தாள்.

அவள் விற்றுவிட்ட கார் இங்கே ஏன் வந்தது? காரில் ஏதாவது பிரச்னை என்று வாங்கியவர்கள் திருப்பிக் கொடுக்க வந்திருக்கின்றனரா?

அப்படியிருந்தால், அவர்களை எப்படி சமாளிப்பது என்று யோசித்தபடியே பரபரப்பாக வீட்டிற்குள் நுழைந்தாள், தீபா.

வீட்டுக்குள் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

ஹாலில், மஞ்சுளாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது, ஆராதனா.

''நீ... நீயா...?'' என்றாள், தீபா திடுக்கிட்டு.

மஞ்சுளாவுக்கு நெருக்கமாக நின்றிருந்த, செவிலியை, 'உள்ளே போ' என்று சைகை செய்தாள்.

''வாங்க, தீபா,'' சோபாவில் உட்கார்ந்திருந்த, ஆராதனா எழுந்தாள்.

''வாசல்ல நிக்கற கார்?''

''அது இப்ப என் பேருக்கு மாத்தியாச்சு,'' என்றாள், ஆராதனா.



- தொடரும்.சுபா






      Dinamalar
      Follow us