PUBLISHED ON : டிச 21, 2025

* மூழ்கி விட்டாய் என்று
மற்றவர்கள் காழ்ப்புணர்வில்
கைதட்டி சிரித்திடும் போது முத்துக்களை அள்ளிக்கொண்டு
மேலேறி வந்து மார்தட்டுங்கள்!
* சறுக்கி விட்டாய் என்று
மற்றவர்கள் வெறுப்புணர்வில்
ஏளனம் செய்திடும் போது
தவறுகளை திருத்திக்கொண்டு
முன்னேறிச் சென்று வென்றிடுங்கள்!
* வீழ்ந்து விட்டாய் என்று
மற்றவர்கள் பகையுணர்வில்
ஏளனம் பேசிடும் போது
குதிரையென துள்ளியெழுந்து
இலக்கை விரைந்து எட்டுங்கள்!
* பயந்து விட்டாய் என்று
மற்றவர்கள் ஆணவ உணர்வில்
எகத்தாளம் கொள்ளும் போது
எதிர்பாராத அதிர்ச்சி தந்து
புத்திக்கூர்மையை நிரூபித்திடுங்கள்!
* அடங்கி விட்டாய் என்று
மற்றவர்கள் மமதை உணர்வில்
கொண்டாட்டம் நடத்திடும் போது
தீப்பந்தமென வெகுண்டெழுந்து
அநீதிகளை சுட்டுப் பொசுக்குங்கள்!
* முடங்கி விட்டாய் என்று
மற்றவர்கள் பகையுணர்வில்
பரிகசித்து அவமதித்திடும் போது
வீறுகொண்ட புயலாய் புறப்பட்டு
உங்கள் பலத்தை காட்டிடுங்கள்!
- விஜயன் செல்வராஜ், கள்ளக்குறிச்சி.தொடர்புக்கு: 8248553326

