PUBLISHED ON : டிச 14, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பயத்தை கண்களிலும்
தயக்கத்தை செயலிலும்
காட்டும் மனிதனுக்கு
வெற்றி கானல் நீராகும்!
ஏற்றத்தில் பணிவும்
இறக்கத்தில் துணிவும்
இல்லாத மனிதனுக்கு
வாழ்வு நீர்த்துப் போகும்!
உழைப்பில் ஆர்வமும்
நம்பிக்கையில் உறுதியும்
இல்லாத மனிதனுக்கு
நிம்மதி அற்றுப் போகும்!
செயலில் தெளிவும்
இலக்கில் வேட்கையும்
இல்லாத மனிதனுக்கு
சாதனை தடைபடும்!
நாவடக்கத் தன்மையும்
பேச்சில் உண்மையும்
இல்லாத மனிதனுக்கு
வாய்மை பொய்த்திடும்!
நடத்தையில் ஒழுக்கமும்
பணியில் நேர்மையும்
இல்லாத மனிதனுக்கு
உயர்வு வீழ்ந்து போகும்!
எண்ணத்தில் துாய்மையும்
இறை நம்பிக்கையும்
இல்லாத மனிதனுக்கு
மனிதம் மறந்து போகும்!
தாழும் நிலை வேரறுத்து
புறம் தள்ளுவோம்
வாழும் நெறி சூளுரைத்து
வாழ்ந்து காட்டுவோம்!
- வி.சுவாமிநாதன், சென்னை. தொடர்புக்கு : 93603 83220.

