
வங்கியில் பணம் செலுத்த போகிறீர்களா?
அண்மையில், பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்றிருந்தேன். அங்கு, முதியவர் ஒருவர் அழுது கொண்டு இருந்தார். அவரை சுற்றி கூட்டமாக இருந்தது. 'என்ன நடந்தது?' என்று அங்கிருந்தவரிடம் கேட்டேன்.
அதற்கு அவர், 'அந்த முதியவர், சில மாதங்களுக்கு முன் இரண்டு லட்ச ரூபாய் பணத்தை அவர் கணக்கில் கட்டுவதற்கு வங்கிக்கு வந்துள்ளார். கை நடுங்கவே, அங்கிருந்த இளைஞன் ஒருவனிடம், வங்கி கணக்கு புத்தகத்தை கொடுத்து, பணம் செலுத்தும் படிவத்தை நிரப்பி தரும்படி கேட்டுள்ளார்.
'இளைஞனும் முதியவரிடம் பேசியபடியே, படிவத்தை நிரப்பி, அதில் கையெழுத்து போட்டு பணத்தை கட்ட சொல்லி, சென்று விட்டான். இவரும் படிவத்தை சரிபார்க்காமல், காசாளரிடம் பணத்தை கொடுத்து, இரண்டு லட்ச ரூபாய் கட்டிய ரசீதை வாங்கி சென்றுள்ளார்.
'இப்போது, பணம் எடுக்க வங்கிக்கு வந்தவருக்கு, அவரது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. எனவே, வங்கி ஊழியர், முதியவரிடம் இருந்த பணம் கட்டிய ரசீதை வைத்து விசாரணை செய்ததில், அன்றைய தினம் வேறொரு கணக்கில், இரண்டு லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
'முதியவருக்கு படிவம் எழுதி கொடுத்த, இளைஞன், அவனுடைய பெயர் மற்றும் வங்கி கணக்கு எண்ணை எழுதிக் கொடுத்துள்ளான், இவர் கட்டிய பணம் இளைஞன் கணக்கில் வரவு வர, அவன் அத்தனை பணத்தையும் எடுத்துக்கொண்டு, வங்கி கணக்கையும் முடித்து சென்றுள்ளான்.
'அவன் கணக்கில் உள்ள முகவரியை பார்த்ததில் அது, வடமாநிலத்தில் உள்ள முகவரி. வங்கி ஊழியர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல், முதியவரிடம், காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்...' என்றார்.
எப்படி எல்லாம் மனசாட்சி இல்லாமல் மோசடி செய்கின்றனர்.
- காவ்யா சங்கர், நாகர்கோவில்.
பள்ளி ஆண்டு விழாவில் சமூக சேவை!
தான் பணிபுரியும் கிராமத்துப் பள்ளியின் ஆண்டு விழாவுக்கு அழைப்பு விடுத்தார், தெரிந்த ஆசிரியர் ஒருவர். அவரின் அழைப்பை ஏற்று, நானும் சென்றிருந்தேன்.
அந்தப் பள்ளி விழாவில், நடனம், பாட்டு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என்று, எல்லாரையும் உற்சாகமூட்டிய வழக்கமான நிகழ்ச்சிகளோடு, என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு நிகழ்வும் நடந்தது.
அப்பள்ளியின் மைதானத்தில், ஷாமியானா பந்தல் அமைத்து, அதனுள்ளே நாற்காலிகள் மற்றும் மேஜைகள் வரிசையாக போடப்பட்டிருந்தன.
ஒவ்வொரு நாற்காலியிலும், அப்பள்ளியில் பயின்று, நன்கு படித்து வேலையிலிருக்கும் முன்னாள் மாணவர்கள் அமர்ந்து, அக்கிராமத்தினருக்கு தேவையான, 'ஆன்லைன்' சேவைகளை, இலவசமாக செய்து கொடுத்தபடி இருந்தனர்.
ஒருவர், ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க உதவிக் கொண்டிருக்க, அவருக்கு அருகிலிருந்த இன்னொருவர், விவசாயிகளுக்கு அரசு திட்டங்கள், மானியங்கள் குறித்த விளக்கம் மற்றும் விண்ணப்பம் நிரப்ப உதவிக் கொண்டிருந்தார்.
மற்றொருவர், மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் விபரங்கள் போன்றவற்றிற்கு உதவி செய்து கொண்டிருக்க, அவருக்குப் பக்கத்தில் இருந்தவர், பெண்களுக்கு தையல் இயந்திரம், ஆடு, மாடு வாங்க மானியம் பெறுதல் போன்றவற்றிற்கு உதவி செய்து கொண்டிருந்தார்.
இதுபற்றி முன்கூட்டியே பள்ளி சார்பில் அனைவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருந்ததால், விழாவுக்கு வந்த பலரும், தங்களுக்கு தேவையான உதவியைப் பெற்று, மகிழ்ச்சியுடன் திரும்பினர்.
வெறும் கொண்டாட்டமாக இல்லாமல், பள்ளி ஆண்டு விழாவை, சமூக சேவைக்கான வாய்ப்பாக மாற்றிய பள்ளி நிர்வாகத்தினரை, மனதார பாராட்டினேன்.
- வடிவேல் முருகன், நெல்லை.
முறையற்ற நிகழ்ச்சிகளை தவிருங்கள்!
என் உறவினர் குழந்தையின் காதணி விழாவிற்குச் சென்றிருந்தேன். விழாவை, நவீனமாக நடத்துவதாகப் பெருமைப்பட்டார், உறவினர்.
விழாவில் பாரம்பரிய மங்கல இசையை தவிர்த்து, நவீன இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார். மேலும், இளைஞர்களை ஈர்க்க, 'ட்ரெண்டி'யான நிகழ்ச்சி என்று, சமூக ஊடக பிரபலங்களை, காமெடி செய்வதற்கு அழைத்திருந்தார்.
நிகழ்ச்சி தொடங்கியதும், அந்த பிரபலங்கள், நகைச்சுவை எனும் பெயரில், ஆபாசமான இரட்டை அர்த்த ஜோக்குகளையும், கேலிக்குரிய பேச்சுகளையும் வெளிப்படுத்தினர்.
குடும்பத்தோடு வந்திருந்தவர்கள், குறிப்பாக பெற்றோர்கள், இதை கேட்டு முகம் சுளித்தனர்.
சிலர், 'இது காதணி விழாவா, இல்லை கடுப்பேற்றும் விழாவா?' என்று கூறியபடி கோபத்துடன் வெளியேறினர்.
நவீனம் என்ற பெயரில், நம் மரபுகளை இழிவுபடுத்துவது தவறு. விழாக்கள், மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் பகிர வேண்டுமே தவிர, எரிச்சலையும், மன உளைச்சலையும் அளிக்க கூடாது.
வாசகர்களே... வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில், முறையற்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதைத் தவிர்ப்பதே நல்லது!
வி. முருகன், காஞ்சிபுரம்

