
பணி ஓய்வுக்கு பின்...
எ ன்னுடையது நடுத்தர குடும்பம். உயர் பதவியில் இருந்த என் மாமனார், சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றவர்களுக்கு ஏற்படும் பொதுவான எண்ணமான, 'வீட்டு வேலைகளில் எடுபிடியாக்கி விடுவரோ...' என்ற தாழ்வு மனப்பான்மை, அவரிடமும் இருப்பதை கண்டேன்.
அவரின் மனதை மாற்ற, பல முக்கிய பொறுப்புகளை அவரிடம் ஒப்படைக்க முடிவெடுத்தேன். என் கணவரின் வருமானத்தில் ஒரு பகுதியை அவரிடம் கொடுத்து, தேவையான போது கேட்டு வாங்கிக் கொண்டேன். அவரும் வரவு, செலவு கணக்குகளை சரியாக பார்த்துக் கொள்வதுடன், தன்னிடம் பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாக நினைத்து மகிழ்கிறார்.
விழா காலங்களில், தம்பதி சகிதமாக மாமனாரிடம் ஆசி பெறுவதும், அவருக்கு பிடித்த உணவு வகைகளை வாரம் ஒரு முறை செய்து தருவதும், அவரோடு இணைந்து கோவில் மற்றும் வெளியூர் செல்வதும், அவருக்கு சந்தோஷமாக இருக்கிறது. வீட்டில் அவருடைய முக்கியத்துவம் குறையாமல் பார்த்துக் கொள்கிறோம்.
குடும்பம் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி அவருடன் கலந்து பேசி, அவருடைய யோசனைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறேன். அனுபவமும், பக்குவமும் இருப்பதால் அவரது யோசனைகள் நன்றாகவே உள்ளன.
இப்போதெல்லாம், 'பால் கார்டு, ரேஷன் கார்டை குடும்மா, நான் போய் வாங்கிட்டு வரேன்...' எனக் கூறுவதோடு, என்னையும் புகழ்ந்து தள்ளுகிறார்.
என்ன வாசகர்களே... உங்கள் வீட்டிலும் மூத்த குடிமக்கள் இருந்தால், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பிரச்னை இல்லாமல் நிம்மதியாக இருங்களேன்.
— ஜெயமாலினி சுந்தரேசன், சிவகங்கை.
'லிப்ட்' கேட்டு அட்டகாசம்... கவனம்!
அ ரசு அலுவலகத்தில் வேலை செய்யும் என் நண்பன், மதிய உணவு இடைவேளையில் சாப்பிட வீட்டிற்கு, இரு சக்கர வாகனத்தில் சென்றான். அப்போது, வழி மறித்து, 'லிப்ட்' கேட்டு உள்ளார், ஒரு ஆசாமி.
'அவசரமாக ஊருக்கு போகணும். மருத்துவமனையில் உள்ள அம்மாவை பார்க்கணும். பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டுவிடுங்கள்...' என, கெஞ்சி கேட்டு உள்ளார், அந்த நபர். உண்மை என, நினைத்து, தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, பஸ் ஸ்டாண்டு அருகே நிறுத்தியுள்ளான், நண்பன்.
இறங்கிய பின் அந்த ஆசாமி, வண்டியின் பின் பக்கத்தை பிடித்து கொண்டு, 'இது என் வண்டி இறங்குங்கள்; என்னிடம் வாங்கிய, 1,000 ரூபாயை உடனே தரணும்...' என, பிரச்னை செய்துள்ளான்.
கூட்டம் கூடியிருக்கிறது. பலரும் பலவிதமாக பேச, தன் வண்டியில் வைத்திருந்த, 'இன்சூரன்ஸ், ஆர்.சி. புக், ஐ.டி., கார்டு, டிரைவிங் லைசென்ஸ்' மற்றும் ஆதார் அட்டை போன்ற அனைத்து ஆவணங்களையும் எடுத்து காட்டியுள்ளான், நண்பன்.
கூட்டத்தினர், அந்த ஆசாமியை நைய புடைக்க, கையில் வைத்திருந்த பையை கீழே போட்டு விட்டு ஓடினான். அந்த பையிலிருந்து ஒரு சரக்கு பாட்டில் தரையில் உருண்டு ஓடியது.
அனைத்து ஆதாரங்களும் உடன் இருந்ததால், பிரச்னைக்கு இலகுவாக தீர்வு காண முடிந்தது.
நண்பர்களே... மதுபிரியர்கள், 'லிப்ட்' கேட்டு, நுாதன முறையில் வசூல் செய்வதில் இறங்கியுள்ளனர். கவனமாக இருக்க வேண்டும்.
—டாக்டர் பொன்னு சேதுராஜ், காரைக்குடி.
குடும்பத் தலைவியர் மன அழுத்தம் போக்க...
அ ண்மையில், நண்பர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றிருந்தேன். அங்கு நடந்த குடியிருப்பின் ஆண்டு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மனநல ஆலோசகர் ஒருவர், குடும்ப தலைவியரின் மன அழுத்தம் போக்கும், சில வழிமுறைகளை கூறினார்...
'குடும்பத் தலைவிகளுக்கு வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனித்தல் என, பல பொறுப்புகள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதை குறைக்க, அவர்கள் தங்கள், 'அப்பார்ட்மென்ட்'டில் வசிப்பவர்களுடன் இணைந்து சில செயல்பாடுகளை செய்யலாம்.
'மாதத்தில் ஒருநாள், 'அப்பார்ட்மென்ட்' வளாகத்தில், குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடி, கைவினைப் பொருட்கள் செய்தல் மற்றும் கதைகள் கூறலாம். மேலும், தங்கள் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைத்து, அலங்காரப் பொருட்கள் தயாரித்தல், மணிகள் கோர்த்தல், மெஹந்தி போடுதல் போன்ற, பல்வேறு கைத்தொழில்களை கற்றுக் கொள்ளலாம். இதற்காக திறமையான பயிற்சியாளரை அழைக்கலாம் அல்லது குழுவினரே மாறி மாறி கற்பிக்கலாம்.
'இந்தப் பயிலரங்கத்திற்கு பின், ஒரு மணி நேரம், ஒவ்வொரு பெண்ணும், தங்கள் வாழ்க்கை அனுபவங்கள், பயண நினைவுகளை பகிரலாம். இது, உணர்வுப்பூர்வமாக அனைவரையும் இணைக்கும்.
'சிறந்த கைவினைப் பொருள் தயாரித்தவருக்கும், சிறப்பான அனுபவத்தை பகிர்ந்தவருக்கும், சிறு பரிசு வழங்கி உற்சாகப்படுத்தலாம். நிகழ்ச்சியின் இறுதியில், அவரவர் வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவுகளை பகிர்ந்து, லேசான இசையுடன் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கி, புத்துணர்வு பெறலாம்.
'இது மன அழுத்தத்தை குறைத்து, புதிய திறமைகளை வளர்க்கும். இதில், குழந்தைகளையும் ஈடுபடுத்தி, அவர்களுக்கான அத்தியாவசிய விழிப்புணர்வுகளையும் வழங்கலாம். 'அப்பார்ட்மென்ட் அசோசியேஷன்' ஆதரவுடன், இதை விரிவாக்கலாம்.
'இத்தகைய முயற்சிகள், குடும்பத் தலைவியரின் மனதை லேசாக்கி, அவர்களுக்குள் நட்பையும், மகிழ்ச்சியையும் பரிசளிக்கும்...' என்றார்.
—வடிவேல் முருகன், நெல்லை.

