sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/ஞானானந்தம் - அரசரும், அடிமையும்!

ஞானானந்தம் - அரசரும், அடிமையும்!

ஞானானந்தம் - அரசரும், அடிமையும்!


PUBLISHED ON : ஏப் 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 26, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசரிடம், அடிமை ஒருவன் இருந்தான். அவன் விசுவாசத்துடனும், அன்புடனும், அறிவுடனும் அரசருக்கு சேவை புரிந்து வந்தான்.

அவனுடைய அறிவு திறமையை கண்டு, அரசர் தன் அரசவையில் அவனை மந்திரியாக்கி, படிப்படியாக பிரதம மந்திரியாக உயர்த்தினார். இதைக்கண்டு மற்ற மந்திரிகள் பொறாமை அடைந்தனர். அனைவரும் ஒன்றுகூடி, அரசரிடம் சென்று, பிரதம மந்திரி மீது பல குறைகளைக் கூறினர். அவர்கள் கூறியதை பொறுமையுடன் கேட்டார், அரசர்.

'நகரிலிருந்து சிறிது துாரத்தில் உள்ள, என் பண்ணை வீட்டிற்கு ஓய்வெடுக்கச் செல்கிறேன். அங்கு பிரதம மந்திரி உட்பட எல்லா மந்திரிகளும், இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு பின், சரியாக மாலை, 4:00 மணிக்கு என்னை வந்து சந்தியுங்கள், அப்போது, உங்கள் குறைகளுக்கு நல்ல தீர்வு சொல்வேன். ஆனால், அனைவரும் நடந்தேதான் வர வேண்டும்...' என்று கட்டளையிட்டார். பின், 'யார் முதலில் என்னை அன்றைய தினம் சந்திக்கிறாரோ, அவரே என் மேல் உண்மையான அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறார், என்று கருதுவேன்...' எனவும், கூறினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அரசர், பிரதம மந்திரியை அழைத்து, மந்திரிகள் அவரைச் சந்திக்கவிருக்கும் பண்ணை வீட்டிலுள்ள சாலையின் இரு புறங்களிலும் கூடாரங்கள் மற்றும் பந்தல்கள் அமைக்கும்படி கூறி, அந்தக் கூடாரங்களில் எல்லாவிதமான பொழுதுபோக்கு அம்சங்களுடன், வரிசையாகக் கடைகளும், உணவகங்களும், அமைக்க சொன்னார்.

அரசர் குறிப்பிட்ட நாள் வந்தது. பிரதம மந்திரியும், மற்ற மந்திரிகளும் அவரை காண புறப்பட்டனர். அனைவரும் பண்ணை வீட்டுக்குச் செல்லும் சாலையில் நடந்து சென்றனர். அப்போது, பிரதம மந்திரியை தவிர, மற்ற அனைவரும் சாலையில் இருந்த கூடாரங்களில் நடந்த பொழுதுபோக்குகளில் கலந்து கொள்ளவும், உணவு உட்கொள்ளவும் சென்று விட்டனர். ஆனால், பிரதம மந்திரி மட்டும் வலது புறமோ, இடது புறமோ திரும்பவில்லை. சந்திப்பு நிகழ இருந்த பண்ணை வீட்டை நோக்கி நேராக நடந்து, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, அங்கு சென்று விட்டார். மற்ற மந்திரிகள் வெகு நேரம் கழித்து தாமதமாகவே பண்ணை வீட்டை அடைந்தனர்.

அரசர் எல்லா மந்திரிகளையும் அழைத்தார். அடிமையை நோக்கிக் கை காட்டி, 'இவரை நான் ஏன் பிரதம மந்திரியாக ஆக்கினேன் என்ற காரணத்தை இப்பொழுது, அனைவரும் அறிந்திருப்பீர்கள். நீங்கள், பொழுதுபோக்கு அம்சங்களையும், உணவு கடைகளையும் பார்த்தவுடன், நான் கட்டளையிட்ட நேரத்தை மறந்து, அங்கு சென்றுவிட்டீர்கள். ஆனால், இவரோ, என் கட்டளையை மீறாமல், குறித்த நேரத்துக்கு முன்பாகவே என்னிடத்துக்கு வந்தார். பிரதம மந்திரி பதவிக்கு தகுந்த, குணம் இதுவே. முதலில் உங்கள் குறைகளை சரி செய்யுங்கள். பிறகு, அடுத்தவரை குறை சொல்லுங்கள்...' என்று அவர்களிடம் கூறினார். வெட்கித் தலை குனிந்தனர், மற்ற மந்திரிகள்.

அரசர் கட்டளையை மீறாமல் நடந்த பிரதம மந்திரியைப் போல், இறைவனிடம் மட்டுமே நாம் உண்மையான அன்பும், பக்தியும் கொண்டிருக்க வேண்டும். இறைவனைத் தவிர உலகத்திலுள்ள இன்பங்கள் தரும் எவ்விதமான கவர்ச்சிகளாலும், துாண்டுதல்களாலும் ஈர்க்கப்படாமல், எதைப்பற்றியும் சிந்திக்காமல், இறைவனை நோக்கியே மனம் செல்ல வேண்டும்.

அருண் ராமதாசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us