sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கேப்டன் விஜயகாந்த்! (28)

கேப்டன் விஜயகாந்த்! (28)

கேப்டன் விஜயகாந்த்! (28)


PUBLISHED ON : மார் 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 01, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜயகாந்த், தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த மேலும் சில திட்டங்கள்...

மாவட்டந்தோறும், முதியோர் இல்லம் அமைத்தல், வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பிறப்பு - இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் போன்றவை வீடு தேடி வந்து கொடுக்கப்படும்.

கடந்த, 2006ல், தே.மு.தி.க.,வின் தேர்தல் அறிக்கையில் காணப்பட்ட அநேக அம்சங்கள், அடுத்தடுத்து, இரு கழகங்களும் ஆட்சி அமைத்தபோது அரசின் நலத்திட்டங்கள் ஆயின.

கடந்த, 2006 சட்டமன்ற தேர்தலில், தென்னகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த ஒரே தொகுதி, விருத்தாச்சலம். விஜயகாந்த் மீது கற்கள் எறியப்பட்டன, செருப்புகள் வந்து விழுந்தன. அவரை அரசியலில் இருந்து தீர்த்துக்கட்ட, அனைத்து கட்சிகளுமே அயராது பாடுபட்டன.

சக்கர வியூகத்தில் சிக்கிக்கொண்ட, அபிமன்யு போல், விருத்தாச்சலத்தில் விரோதிகளுக்கு விளையாட்டு காட்டினார், விஜயகாந்த்.

விருத்தாச்சலத்தில், தன் அன்பு நெஞ்சத்தால் வாகை சூடினார், விஜயகாந்த்.

அவரை எதிர்த்து, பா.ம.க., சார்பில் போட்டியிட்டவர், மருத்துவர் கோவிந்தசாமி. அ.தி.மு.க., சார்பில் நின்றவர், காசிநாதன். தங்கள் சொந்த ஊரிலேயே, அவர்களை தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்த பெருமை, விஜயகாந்துக்கு கிடைத்தது. அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களை தோற்கடித்து பெற்ற மொத்த வாக்குகள், 61,337. அதாவது, 4.42 விழுக்காடு.

முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக உற்சாகமாக பணியாற்றினார், விஜயகாந்த். தன்னை நம்பி வாக்களித்த, விருத்தாச்சலம் மக்களின் நலனுக்காக மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் குரல் கொடுத்தார்...

'தி.மு.க., அ.தி.மு.க., தவிர்த்த ஒரு மாற்றத்தை விரும்புபவர்களுக்கு, தே.மு.தி.க., ஒரு மாறுதலைத் தரும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது. நான் அதை நிச்சயம் காப்பாற்றுவேன். அனைத்து துறைகளிலும் ஊடுருவியிருக்கும் லஞ்சம், ஊழலை முதலில் அகற்ற வேண்டும்...' என்று, எம்.எல்.ஏ., ஆனதும் முழங்கினார், விஜயகாந்த்.

கருணாநிதியும், ஜெயலலிதாவும் தொடர்ந்து சேற்றை வாரி இறைத்தாலும், விஜயகாந்தின் அசுர வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியவில்லை. 'பிரிக்க முடியாதது என்னவோ?' என்ற கேள்விக்கு, 'கேப்டனும், மக்கள் கூட்டமும்' என்றே விடை அளித்தது, தமிழ்நாடு. விஜயகாந்தால் மட்டுமே, இனி தமிழர்களுக்கு லஞ்சம், ஊழலிலிருந்து விடுதலை என்ற நம்பிக்கையை விதைக்க பாடுபட்டார்...

'தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகள் மீதும், மக்களுக்கு சலிப்பு வந்துடுச்சி. மக்களுக்கு மட்டுமில்லை, அந்த கட்சிக்காரங்களுக்கே சலிப்பு வந்துடுச்சி. இந்த ரெண்டும் புடிக்காம தான் நான் வந்துருக்கேன். தே.மு.தி.க., தான் நடந்த தேர்தல்களில் முதலிடம். ஏனென்றால், நாங்கள் மட்டும் தனி ஆள். மீதி எல்லாம் கூட்டணி பலம். என் சொத்து அழிஞ்சாலும் அரசியலில் நீடிப்பேன். மக்களுக்கு உழைக்க ஒரு வேலைக்காரனா நான் எப்பவும் தயாரா இருக்கேன்...' என்று பேசினார், விஜயகாந்த்.

கடந்த, 2009 நாடாளுமன்ற தேர்தல். அதிலும், தனித்து போட்டி என்ற, விஜயகாந்தின் அறிவிப்பு தமிழகத்தை பரபரப்பாக்கியது. கட்சி துவங்கி ஏறக்குறைய, நான்கு ஆண்டுகள் முடிவதற்குள், நாடாளுமன்ற தேர்தல் வந்து விட்டது. புதுச்சேரி உட்பட, 40 இடங்களிலும் களம் இறங்கியது, தே.மு.தி.க.,

'விஜயகாந்த், தேசிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க கூடும்...' என்ற அடிவயிறு அச்சம், அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் சற்றே தணிந்தது. விஜயகாந்துக்கு வாலிப வாக்காளர்களின் ஆதரவு பெருகி கொண்டே போவது எல்லாருக்கும் கடுப்பை அளித்தது. கழகங்கள், விஜயகாந்தை கோமாளியாகவும், குடிகாரராகவும் சித்தரித்தது. எத்தனை விமர்சனங்கள் எழுந்தாலும், அவரது செல்வாக்கு நாட்டுப்புறங்களில் நங்கூரம் போட்டு நின்றது.

அடித்தட்டு மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தார்.

விஜயகாந்தின் துணிச்சலுக்கு அவரது சினிமா கவர்ச்சியே முக்கிய காரணம் என, தி.மு.க., பழைய பல்லவியை பாடியது. தே.மு.தி.க.வையும், 'நடிகர் கட்சி' என்றே அழைத்தது.

'விஜயகாந்தின் அரசியல், இளைஞர்களை வசியப்படுத்துவதாக அமைந்துள்ளதே?' என, 'ஆனந்த விகடன்' மே, 13, 2009ல், மத்திய அமைச்சர், தயாநிதி மாறனிடம் வினா எழுப்பியது.

அதற்கு, 'விஜயகாந்த் வாய்ச்சொல் வீரர். வாய்க்கு வந்த வாக்குறுதியை எல்லாம் அள்ளி வீசுகிறார். தான் ஜெயிக்க மாட்டோம் என்று அவருக்கு தெரியும். அதனால் தான், நினைத்ததை எல்லாம் பேசுகிறார். வெற்றி பெறப்போகிறவர் தான் யோசித்து பேச வேண்டும். அவருக்கு அந்தக் கவலை இல்லை. நிலையான எண்ணம், கொள்கை, திட்டம் அவருக்கு இல்லை. அவருக்கு வாக்களிப்பது, குப்பையில் ஓட்டை துாக்கிப்போடுவதற்கு சமம் என்பதை அப்பாவிகள் உணர வேண்டும்...' என்று விளக்கமளித்தார், தயாநிதி.

விஜயகாந்தை வீழ்த்துவதில், தி.மு.க., எத்தனை கவனம் கொண்டிருந்தது என்பதற்கு, தயாநிதி மாறனின் இந்த பதிலே உதாரணம்.

தே.மு.தி.க., தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், திருமண மண்டப இடிப்பு மையக் கருத்தாக அமைந்தது.

'அறிவாலயத்தில் முன்பக்கம், தி.மு.க., அலுவலகம், பின்னால் திருமண மண்டபம் என, இருக்கிறது. அறிவாலயம் மாதிரி எனக்கு திருமண மண்டபமும், கட்சி அலுவலகமும் ஒன்றாக அமைந்தது. அது பொறுக்காமல் மண்டபத்தை இடித்தனர். ஒரு இடத்துல கூட, வெற்றி பெற முடியாதுன்னு இகழ்ந்தவர்கள், 8.39 சதவீதம் ஓட்டு வாங்கியதும் என்னை கூட்டணிக்குள் இழுக்க முயற்சித்தனர்.

'இடையில் ஒரு முறை, கருணாநிதியை பார்க்க போனேன். 'விஜயகாந்த் தடுமாறுகிறார்...' என்று அதுவே செய்தியானது. ஆனால், நான் போன விஷயம் வேறு. போன இடத்தில், 'திருமண மண்டபம் பற்றியும் பேச்சு வந்தது. அவ்வளவு தான். ஒருவேளை, நான் தி.மு.க.,வோடு கூட்டணி வைத்திருந்தால், மண்டபத்தை விட்டிருப்பர்...' என்றார், விஜயகாந்த்.

'சக்தி பெண்கள் சுயதொழில் உதவித் திட்டம் தந்த பெண்ணின பாதுகாவலர் கேப்டன் அவர்களின் முரசு சின்னத்தில் வாக்களிப்பீர். வெற்றி பெறச் செய்வீர்! திக்கெட்டும் முரசு கொட்டட்டும்! தில்லியில் நம் குரல் ஒலிக்கட்டும்!' என்று முழங்கியது, தே.மு.தி.க.,

யார் என்ன செய்தாலும், விஜயகாந்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்ற நிஜம் போகப் போக புரிந்தது.

அடுத்து, 2009ல், நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் என்ன நடந்தது?



- தொடரும்- பா. தீனதயாளன்

நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 7200050073

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us