sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

10


PUBLISHED ON : ஜன 25, 2026

Google News

PUBLISHED ON : ஜன 25, 2026

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள சகோதரிக்கு -

நான், 56 வயது பெண். அரசின் மருத்துவ துறையில் தலைமை மருந்தாளுனராக பணிப் புரிந்து வருகிறேன். என் கணவர் அதே மருத்துவ துறையில் பணி புரிந்து, ஓய்வு பெற்று விட்டார்.

எங்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் பெரியவள். அவள், எம்.பி.பி. எஸ்., படித்து, மேலும் கண் மருத்துவராக முதுகலை பட்டமும் பெற்று தற்போது, ஒரு தனியார் மருத்துவக் கல்லுாரியில் நல்ல சம்பளத்தில் பணியில் இருக்கிறாள்.

இந்நிலையில், மகளுக்கு வரன் பார்த்து வந்தோம். அப்போது, எங்கள் மகள், ஏதோ ஒரு, 'டேட்டிங் ஆப்' மூலம் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டு, ஆறு மாதங்களாக பேசி வந்திருக்கிறாள்.

இதுபற்றி அறிந்து விசாரிக்கையில், 'திருமணம் செய்தால், இவரைத்தான் செய்து கொள்வேன். நான் தானே வாழப் போகிறேன்...' என, பிடிவாதம் பிடித்தாள்.

ஆனால், அந்த பையன் எந்த வகையிலும் அவளுக்கு சிறிதும் பொருந்தாததால், மறுப்பு தெரிவித்தோம். மகளின் காதலன் பி.எஸ்.சி., விஸ்காம் படித்துள்ளான். நிரந்தர வேலை எதுவுமில்லை. வேற்று ஜாதியை சேர்ந்தவன். குடும்ப சூழ்நிலை, 'பர்சனாலிட்டி' என, எதுவும் சரியில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வந்தது. நாங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, யார் ஆலோசனை கூறியும், மகளின் மனம் மாறவில்லை. இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, முதல் முறையாக இரு குடும்பமும் நேரிடை வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்.

இறுதியில், 'அவன் வேண்டுமெனில் அவர்களுடன் சென்று விடு...' என, நாங்கள் கூறிய பின், மகள் சற்றும் யோசிக்காமல் அவர்களுடன் சென்று விட்டாள்.

நாங்கள் எவ்வளவோ தடுத்தும், அழுதும் அவளை தடுக்க முடியவில்லை. பையனின் வீட்டினரும் இது தவறு என, எண்ணாமல், எங்கள் மகளை அழைத்து சென்று விட்டனர்.

ஓரிரு நாட்களில் எங்களிடம் சொல்லாமலும், அழைக்காமலும் அவர்களே திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தெரிந்து நாங்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

மற்ற உறவினர்களுக்கு தெரிந்தால் கேவலமாக பேசுவர். கடுமையான மன அழுத்தத்தில் உள்ளோம்.

இந்நிலையில் அடுத்து என்ன செய்வது? இதிலிருந்து மீள வழி சொல்லவும்.

- இப்படிக்கு, உங்கள் சகோதரி.

அ ன்பு சகோதரிக்கு -

நீயும், உன் கணவரும் மருத்துவத்துறை தம்பதிகள். உன் மகள், கண்ணியல் மருத்துவம் படித்து, நல்ல பணியில் இருப்பவள்.

உன் மகளுக்கு வயது 25 வயதிலிருந்து 27 வயதிற்குள் இருக்கும். இளங்கலை மருத்துவத்திற்கு தனியாக, 'நீட்' தேர்வு எழுதியும், முதுகலை மருத்துவத்திற்கு இன்னொரு, 'நீட்' தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற்றுள்ளாள். தினமும், ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கிறாள். பதின்ம வயதில் வரும் காதல் வெறும் இளம்கன்று காதல் என்பர். 17லிருந்து 22 வயதுக்குள் வரும் காதலில், 50 சதவீதம் இனக்கவர்ச்சி, 50 சதவீத மெய்யான காதல். 23 வயதிலிருந்து 28 வயதுவரை வரும் காதல்கள் பக்குவப்பட்டவை. இக்காதலில் உடல்ரீதியான ஈர்ப்பு போய், உளரீதியான ஈர்ப்பு வந்து விடும். உன் மகள் மூன்றாவது கேட்டகிரி.

நீ சொன்ன வரனைதான், உன் மகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அவளை, 'ப்ளஸ் டூ'வுக்கு மேல் படிக்க வைத்திருக்கக் கூடாது.

'இசட்' தலைமுறை ஆணும், பெண்ணும் திருமணங்களுக்கு ஒரு தயாரிப்பு தேதியும், ஒரு காலாவதி தேதியும் குறித்து வைத்துக் கொண்டு தான் களத்தில் குதிக்கின்றனர்.

அவர்களுக்கு நடப்பு நொடி சந்தோஷம் தான் முக்கியம்.

திருமண பந்தத்தில் அவர்களுக்கு ஆயுட்கால உத்திரவாதம் தேவையில்லை.

ஓர் ஆணை நம்பி திருமண பந்தத்தில் ஒரு பெண் இறங்குகிறாள். அந்த ஆண் சரியில்லை என பட்டால், 'இது என் தலைவிதி இவனுடனேயே போராடி மடிவோம்...' என்ற பழைமைவாத சித்தாந்தம் இல்லாமல் சட்டத்தின் துணை கொண்டு உறவை கத்தரிக்க தயாராய் உள்ளனர். விரும்பினால் ஒட்டிக்கோ, விரும்பா விட்டால் வெட்டிக்கோ பாலிசி தான்.

வேற்று ஜாதியை சேர்ந்தவனை மணந்தால் வரும் சாதக, பாதகங்கள் உன் மகளுக்கு நன்கு தெரியும். சம்பந்தி வீட்டாரின் குடும்ப சூழ்நிலையில் 'நெகட்டிவிட்டி' காண்பது மாயை. உன் மருமகனின், 'பெர்சனாலிட்டி' உன் மகளுக்கு பிடித்திருந்திருக்கிறது. உன் மருமகனுக்கு நிரந்தர வேலை இல்லை என்றால் என்ன? உன் மகளுக்கு கணவனை பிடித்திருக்கும் கடைசி நொடிவரை அவனை பராமரிப்பாள். விரும்பினால், அவனுக்கு ஒரு, 'ஆப்டிகல்ஸ்' கடை வைத்துக் கொடுப்பாள்.

உன் மகள், விரும்பினவனை தானே மணந்தாள். இதில் உறவினர் கேவலமாக பேச என்ன இருக்கிறது?

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை.

மகளின் திருமணத்தை முழுமையாக அங்கீகரி. சம்பந்தி வீட்டாருடன் சமாதானமாக பேசு. உங்கள் சார்பில் ஒரு திருமண வரவேற்பு நடத்தி, உறவுகளுக்கு விருந்திடு. மருமகனிடம் பதவிசாக பேசு. 'தானாக போய் திருமணம் செய்து கொண்டாயே...' என, மகளிடம் புகார் காண்டம் படிக்காதே.

அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழட்டும். நீ லாப, நஷ்ட கணக்கை பார்த்து புலம்பாதே. மகன் யாரையாவது காதலிக்கிறானா என, கேட்டறி. காதலிக்கிறான் என்றால், நீயே அவன் வழியில் சென்று திருமணத்தை செய்து முடி.

பணி ஓய்வு வாழ்க்கையை திட்டமிட்டு, நீயும், உன் கணவரும் சுகம் பெறுங்கள்.

- என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us