PUBLISHED ON : செப் 05, 2026

பழந்தண்டலம் என்ற ஊரில், செல்வந்தர் வீரபாண்டியன் வசித்து வந்தார். பெயருக்கு ஏற்ற வீரமும், திரண்ட செல்வமும் அவரிடம் இருந்தது. இரக்க சுபாவமும், பிறருக்கு உதவி செய்யும் மனமும் அறவே இல்லை. மாறாக, அவரை புகழ்பவருக்கு எதையாவது கொடுத்து மகிழ்வார்.
செல்வந்தர் எதை சொன்னாலும், செய்தாலும், 'நீங்கள் தான் உயர்ந்தவர். உங்களை மிஞ்ச ஆளில்லை...' என, புகழ வேண்டும். அப்போது அவர் மனம் குளிர்ச்சி அடையும்.
குடும்பத்தில் மனைவி, குழந்தைகள் மட்டுமின்றி, ஊரில் யாருக்கும் அவரை பார்த்தால் பயம். அவரது சொத்து மதிப்பு, வருமானம் மற்றும் செயல்களை குறைவாக மதிப்பிட்டால், கோபத்தில் சீறி விழுவார். தன்னை குறைத்து மதிப்பிடுவோர் மற்றும் பேசுவோரை ஊரை விட்டே ஒதுக்கி வைப்பார். ஊரில் யாரிடமும் தன்னை விட, அதிக பணமோ, நகையோ இருக்கக் கூடாது என எண்ணுவார்; பொறாமை, பேராசை பிடித்தவர்.
அவரது செயலைக் கண்டு, ஊர் மக்கள் மிகுந்த கவலை அடைந்தனர். ஆணவம் அவரிடம் உச்சத்தில் தாண்டவமாடி கொண்டிருந்தது.
ஒருநாள், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. செய்தி கேட்டு கவலையடைந்தனர் ஊர் மக்கள். செல்வந்தரை பரிசோதித்த மருத்துவர், ''பயப்படும்படி பெரிய நோய் எதுவுமில்லை...'' என, அவரது மனைவியிடம் கூறினார்.
அதை கேட்டதும், ''என் கணவருக்கு பெரிய நோய் இல்லை என கூறினால், உங்களை சும்மா விட மாட்டார். அவருக்கு எதுவும் பெரிது என புகழ்ந்தால் தான் சந்தோஷப்படுவார்...'' என்றார் செல்வந்தரின் மனைவி.
நிலைமையை புரிந்து, ''உங்களுக்கு வந்திருக்கும் நோய் மாதிரி யாருக்கும் இதுவரை வந்ததில்லை. அவ்வளவு கடுமையானது...'' என்றார் மருத்துவர்.
நொந்து போன செல்வந்தர், ''நோய் குணமாக என்ன செய்யணும் டாக்டர்...'' என, உருக்கமாக கேட்டார்.
''பொறாமை, ஆணவத்தை ஒழித்து அன்பாக பழகுங்கள். நோய் எளிதில் குணமாகிவிடும்...'' என்றார், மருத்துவர்.
மனம் மாறி, நல்ல குணத்துடன் திகழத் துவங்கினார் வீரபாண்டியன்!
குழந்தைகளே... பொறாமை, பேராசை, ஆணவத்தை ஒழித்தால், நிம்மதியாக வாழலாம்.
எல்.மூர்த்தி
