PUBLISHED ON : அக் 24, 2026

மயிலாடுதுறை, ரோட்டரி கிளப் மேல்நிலை பள்ளியில், 2011ல், 11ம் வகுப்பு படித்தேன். வேதியியல் ஆசிரியராக இருந்த எம்.மோகன்ராஜ் மிகவும் கண்டிப்பானவர். தெளிவாக பாடங்களை கற்பித்து மனதில் பதிய வைப்பார்.
அன்றைய வகுப்பில், 'ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் அறிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அ றைகுறையாக படிக்கக் கூடாது. இரண்டு பாடங்கள் என்றாலும், அவற்றில் உள்ள கேள்விகளுக்கு முழுமையான மதிப்பெண் பெறும் வகையில் ஆழ்ந்து படியுங்கள்...' என, அறிவுரைத்தார்.
இது, வாழ்வுக்கு பயன்படும் பாடமாக இருக்கும் என்ற எண்ணம் அப்போது ஏற்படவில்லை. பணியில் சேர்ந்த பின், பெரிதும் உதவி வருகிறது.
எனக்கு, இப்போது 31 வயதாகிறது. பன்னாட்டு நிறுவனத்தில் குழு தலைவராக பணியாற்றுகிறேன். ஒரு நாளில் பல வேலைகள் இருந்தாலும், அவற்றை அறைகுறையாக செய்வதை தவிர்த்து, ஒன்றிரண்டை குறையின்றி, முழுமையாக முடிப்பதை பின்பற்றுகிறேன். என் குழுவினருக்கும் அதையே எடுத்துக் கூறுகிறேன்.
பள்ளியில் வேதியியல் ஆசிரியர் எம்.மோகன்ராஜிடம் பல ஆண்டுகளுக்கு முன் பெற்ற அறிவுரை, இன்று பலரையும் சென்றடைவது மகிழ்ச்சி தருகிறது.
- ரா.சோமசுந்தரம், சென்னை.
தொடர்புக்கு: 86087 14913
