
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் உயர்நிலைப் பள்ளியில்,- 1976ல், 11ம் வகுப்பு படித்தபோது, தனிப்பயிற்சி நிலையத்தில் சுருக்கெழுத்து பயிற்சி பெற்றேன். சராசரியாக புரியும் திறனுடையவன் நான். மொழியில் நிபுணத்துவம் இன்மையால் திணறியபடி வகுப்பில் அமர்ந்திருப்பேன்.
சுருக்கெழுத்து பயிற்றுனர் த.மணி கண்டிப்பு மிக்கவர். ஒழுக்கம், பணிவு, நேரம் தவறாமையை கடைபிடிப்பார். அன்றைய வகுப்பில், 'ஆங்கில எழுத்துக்களை குறிப்பதல்ல சுருக்கெழுத்து... உச்சரிப்பை புரிந்து உள்வாங்கி குறியிடக் கற்றுக்கொள்வது...' என்ற அடிப்படையை கற்பித்தார் பயிற்றுனர். ஆணி அடித்தது போல் மனதில் அடித்தளம் போட்டு அது அமர்ந்து விட்டது.
ஓசை நயத்தால் சொற்களை புரிந்து கற்றுக் கொண்டேன். உச்சரிப்பின் சிறப்பையும் உணர்ந்தேன். தமிழ், ஆங்கில மொழியில் சுருக்கெழுத்து உயர்நிலையில் தேறி சான்றிதழ் பெற்றேன்.
என் வயது, 64; தமிழக வேளாண்மை துறையில் கண்காணிப்பாளராக பணி உயர்ந்து ஓய்வு பெற்றேன். சுருக்கெழுத்தின் அடிப்படையை கற்றுத் தந்து வாழ்வின் உயர்வுக்கு அடித்தளம் அமைத்த பயிற்றுனர் த.மணிக்கு, 78 வயதாகிறது. அவரிடம் பெற்ற வித்தையால் என் போன்றோர், நல்லச்சோறு சாப்பிடுகிறோம் என கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
- கோ.சங்கரநாராயணன், சென்னை.
தொடர்புக்கு: 97869 86456

