
முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு தீவில் குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து, ஆசிரியை ஜான்வி உதவியுடன் மீட்க திட்டமிட்டனர். சுரங்கம் அமைந்திருந்த பகுதிக்கு சென்று, பழங்குடியின குட்டி மனுஷங்களின் தலைவர்களிடம் பேசினர். சுரங்கக்காரர்களிடம் இருந்து அவர்களை விடுவிக்கும் திட்டங்களை, குட்டி மனுஷங்களில் ஒருவனான லியோவுடன் இணைந்து செயல்படுத்த துவங்கினர். இனி -
''மொபைல் போன்களையும் சுரங்கத்திற்குள் போட்டு விடலாம். சுரங்கத்தின் ஆழத்தில் சிக்னல் கிடைக்காது. இந்த போனை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியாது...'' என்றாள், ரீனா.
மொபைல் போன்கள் மூன்றையும், பழைய சுரங்கத்திற்குள் வீசினர். தங்கள் போன்களை, 'ஆன்' செய்து, 'ப்ளூடூத்' மாட்டிக்கொண்டனர்.
''வாக்கி டாக்கியுடன் தொடர்புடைய பிற கருவிகள் சுரங்கக்காரர்களிடம் இருக்கும். எனவே, நம்மிடம் வாக்கி டாக்கி இருந்தால், அவர்கள் பேசிக் கொள்வதை எல்லாம் இதில் கேட்க முடியும், அல்லவா...''
ஆர்வமாக கேட்டாள் ரீனா.
''ஆம். கேட்க முடியும்...''
''அப்படியானால், நாம் பேசுவதையும் அவர்கள் கேட்பார்கள் தானே...''
''இல்லை. பக்கவாட்டில் இருக்கும் பொத்தானை அழுத்திக் கொண்டு பேசினால்தான், நாம் பேசுவது மற்றவர்களுக்கு கேட்கும்; இல்லாவிட்டால், அவர்கள் பேசுவதை மட்டும் நாம் கேட்க முடியும்...''
மாலினி விளக்கினாள்.
இந்த வாக்கி டாக்கியின் ஒலி, தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை அவர்களுக்கு தெரிவித்து விடும் என்ற அச்ச உணர்வு, ரீனாவுக்கு ஏற்பட்டது.
''மாலினி, வாக்கி டாக்கியின் சத்தத்தை மிக குறைவாக வைத்து, உன் காதுக்கு மட்டும் கேட்கும்படி வைத்துக்கொள்...''
ரீனா எச்சரித்தாள்.
சட்டென 'வால்யூம்' குமிழியைத் திருகி, ஒலி அளவை குறைத்தாள் மாலினி.
''இப்போது இதன் சத்தம் வெளியில் கேட்காது. நான் என் காது அருகிலேயே வைத்து கவனித்து கொள்கிறேன். அடுத்து என்ன செய்வது...''
''நாம் அந்தச் சுரங்கக்காரர்களுடன் நேரடியான மோதலுக்கு வந்து விட்டோம். ஆப்பரேஷன் லியோ திட்டத்தின் இறுதிக் கட்டமாக கூட, இது இருக்கக்கூடும். இந்த சூழ்நிலையை ஜான்வி மிஸ்சுக்குத் தெரிவிக்க வேண்டாமா...'' என்றாள், மாலினி.
''நீ சொல்வது சரிதான். நல்ல சமயத்தில் நினைவு படுத்தினாய்...'' என்றபடி, தன் மொபைல் போனை எடுத்த ரீனா, அதிர்ந்தாள்.
''என்ன ஆச்சு ரீனா...''
''இதில் டவர் இல்லை. உன்னுடைய மொபைல் போனை பாரு...''
மாலினி தன்னுடைய மொபைல் போனை பார்க்க, அதிலும் சிக்னல் இல்லை.
''இங்கே எப்போதுமே நன்றாக டவர் கிடைக்குமே... ஏன் இரண்டு மொபைல் போனும் செயல் இழந்துவிட்டன...''
மாலினி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாக்கி டாக்கி உயிர்ப்படைந்தது. அதில் கரகரப்புடன் குரல் கேட்டது.
''செக், செக்... ஒன், டூ, த்ரீ... ஒன், டூ, த்ரீ...''
சுரங்கக்காரர்கள் வாக்கி டாக்கியை இயக்குகின்றனர் என்பது, அவர்களுக்கு தெரிந்தது.
''இது போன்ற கருவியை அவர்கள் கையில் வைத்திருந்தனரா...''
லியோவிடம் கேட்டாள் மாலினி.
''என்னைத் துரத்தும் போது அவர்கள் கையில் இது இல்லை. வழக்கமாக இதை கன்டெய்னருக்குள் தான் வைத்திருப்பர். படகில் வரும் நபர்களுடன்தான், இதை பயன்படுத்தி பேசுவர்...''
விளக்கினான் லியோ.
''அப்படியானால், அவர்கள் மீண்டும் கூடாரத்துக்கு வந்து விட்டனர் என்று நினைக்கிறேன்...''
உஷாரடைந்தாள் ரீனா.
''நாங்கள் சென்றபோது, கூடாரத்தில் உங்கள் ஆட்கள் யாரும் இல்லையே.... எங்கே போயினர் லியோ...'' என்றாள், ரீனா.
''கூடாரப் பகுதி அசுத்தமாகிவிடக்கூடாது என்பதற்காக, சற்றுத் தள்ளி ஒரு இடத்தில் சாப்பிடச் செல்வர்...''
தகவல் சொன்னான் லியோ.
மாலினி, தன் காதுகளுக்கு அருகில் அந்த வாக்கி டாக்கி கருவியை வைத்துக் கொண்டு உரையாடலைக் கேட்க முயன்றாள்.
''இரண்டு வாக்கி டாக்கி தான் இருக்கின்றன. ஒரு ஹேண்ட்செட், அந்த குரங்குப் பையன் துாக்கிட்டு போயிருக்கிறான்...''
வாக்கி டாக்கி கரகரத்தது. பின், சிறிது நேரம் நிசப்தம் நிலவியது.
மீண்டும் வாக்கி டாக்கி உயிர்த்தது.
''மொபைல் ஜாமரை, 'ஆக்டிவேட்' பண்ணியாச்சு ஆண்டனி... அந்த பிள்ளைகள் மொபைல் போன் வைத்திருந்தால், இனி அது இயங்காது... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அவர்களை பிடிக்க வேண்டும்...'' என்றான், சுரங்கக்காரர்களில் ஒருவனான அன்பரசன்.
''நாங்கள் அவர்களை தேடத் துவங்கி விட்டோம் அன்பு...''
பதில் கூறினான், ஆண்டனி.
''இனி தகவல் தொடர்பு வாக்கி டாக்கி மூலம் தான்... நீயும், எரிக்சனும் சேர்ந்தே இருங்கள்...''
''சரி, சரி...''
அத்துடன் அந்த உரையாடல் முடிந்தது.
டவர் இழந்த மொபைல் போன்கள், மீண்டும் உயிர் பெற வாய்ப்பில்லை என்பதை ரீனாவும், மாலினியும் உணர்ந்தனர்.
''நாம இப்ப என்ன பண்றது ரீனா...''
''இதற்கு மேல் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை. நாம் விரைந்து செயல்பட வேண்டும்...'' என்றாள், ரீனா.
ரீனாவும், மாலினியும் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்த லியோவும், பரபரப்புக்கு உள்ளானான். அவனுக்குள் ஒரு வித பயமும், குற்ற உணர்வும் வந்தது.
''நான் தப்புப் பண்ணிவிட்டேனோ... அந்த போனை எடுத்திருக்கக் கூடாதோ...'' என்றான், லியோ.
''இனி அதைப் பற்றி யோசித்து பயனில்லை...''
லியோவை ஆசுவாசப்படுத்த முயன்றாள், மாலினி.
''ஐயையோ... தப்பு பண்ணி விட்டேன். ஒரே நேரத்தில் மூன்று போன் கிடைத்ததும், நான் ஆர்வக்கோளாறில் எடுத்து விட்டேன்...''
புலம்ப துவங்கினான், லியோ.
''பரவாயில்லை... இன்று இல்லாவிட்டாலும், நாளை இது போன்ற சூழ்நிலை ஏற்படத்தான் செய்யும். அதை நாம் சமாளித்துத் தான் ஆக வேண்டும்...''
சமாதானம் கூறினாள், மாலினி.
''ஏன் தான் ஆண்டவன் எங்களை இப்படிப் படைத்தானோ...''
வருத்தத்துடன் சொன்னான் லியோ.
''ஏன்...'' என்றாள், மாலினி.
''நாங்கள் 30 பேர் இருக்கிறோம். அவர்களோ, மூன்றே பேர் தான். ஆனால், எங்கள் உருவ அமைப்பு காரணமாக, எங்களால் அவர்களை எதிர்க்கவோ, மடக்கிப் பிடிக்கவோ முடியவில்லை, பாருங்கள்...'' என்று, அங்கலாய்த்தான் லியோ.
- தொடரும்...
நரேஷ் அருண்குமார்

