PUBLISHED ON : நவ 07, 2026

அன்புள்ள அம்மா...
நான் பிளஸ் 2 முடிக்கப் போகும் மாணவன். திருவண்ணாமலையை ஒட்டிய கிராமம் எங்களுடையது. அரசு பள்ளியில் தான் படிக்கிறேன். எனக்கு கோவில் அர்ச்சகராக வேண்டும் என்பதே ஆசை, குறிக்கோள் எல்லாம்... அதற்கு எங்கே என்ன படிப்பு படிக்க வேண்டும் என தயவுசெய்து கூறுங்களேன்.
- இப்படிக்கு,
குணசீலன்.
அப்பா குணசீலா...
பெயருக்கேற்றவனாகத்தான் இருப்பாய் போலிருக்கிறது. இல்லையென்றால், இப்படி ஒரு உன்னத நோக்கம் கொண்டவனாக நீ வர வேண்டும் என்றே உன் பெற்றோர் இந்த பெயரை உனக்கு வைத்திருக்கின்றனரா?
உன்னுடைய இந்த ஆசைக்காக, குறிக்கோளுக்காக தலைவணங்குகிறேன். இன்றைய இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட ஆசை ஏற்படுவது அரிதிலும் அரிது. குருக்கள் வீட்டு பையன்களும், ஓதுவார் வீட்டுப் பையன்களும் கூட இப்படிப்பிற்கு ஆசைப்படுவதில்லை என்ற நிலைமையில், உன் ஆசை, நீ ஆண்டவனின் குழந்தை என்பதை உணர்த்துகிறது.
உன் கேள்விக்கான பதிலுக்கு வருகிறேன்...
தமிழக அரசின் ஹிந்துசமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள், மேலும் பல்கலைக்கழக இணைப்பு மையங்களில் அர்ச்சகர்களுக்கான முறையான பயிற்சிக் கல்வி வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருச்செந்துார் சுப்ரமணியசுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், சென்னை பார்த்தசாரதி கோவில் போன்ற இடங்களில் பயிற்சி பள்ளிகள் உள்ளன.
எஸ்.ஆர்.எம்., போன்ற தனியார் நிறுவனங்களும் தமிழ் வழி அர்ச்சகர் படிப்பை பயிற்றுவிக்கின்றன.
சைவ அல்லது வைணவ ஆகம முறைகள், வேத மந்திரங்கள், செய்முறை பூஜைகள் போன்றவையே படிப்புக்கான பாடங்கள். படிப்புக்கான காலம் ஓராண்டு. படித்து பட்டம் பெறுவதைப் போல சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இவை தவிர, தனிப்பட்ட மடங்களிலும் வேதபாடசாலைகள் உள்ளன. இவற்றில் குருகுல முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது. 6 - 7 வயதிலேயே அங்கு மாணவர்களாக சேரலாம். காலை 4:00 மணிக்கு கிணற்று நீர் இறைத்து குளித்து, தவறாமல் சந்தியாவந்தனம், மாத்யானம் எல்லாம் செய்ய பழகி நல்லொழுக்கங்களும், ரிக், யஜுர், சாம வேதங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
ஹிந்து மட சன்னியாசிகளும், குருமார்களும் வேத பாடசாலைகளும் கடும் விதிகளுக்கு உட்பட்டு வந்தவை தான்...
நான் சிறுமியாக இருந்த போது, என் அப்பா எங்கள் வீட்டிலிருந்த பெரிய கூடத்தில் வேத பாடசாலை நடத்தினார்.
வேத மந்திரங்களை கேட்டு கேட்டே வளர்ந்தவள். முக்கால்வாசி மந்திரங்கள் எனக்கு அத்துப்படி.
குணசீலா, நீ மற்றொரு கசப்பான உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து ஜாதியினருமே அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்களில், 200க்கும் மேற்பட்டோர் தங்கள் படிப்பை முடித்து ஹிந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள கோவில்களில் பணிபுரிய காத்திருக்கின்றனர்.
இவர்கள் பூஜை செய்வதற்கான வழியை வழக்குகள் தடுத்து நிறுத்தியிருக்கின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில், 2023ம் ஆண்டு படிப்பை முடித்து, தீட்சையும் பெற்ற கோகுல் நாத் என்பவர், 2026ம் ஆண்டிலும் கோவில்களில் பணிபுரியும் வாய்ப்பு இன்றி காத்திருக்கிறார்.
எப்போதாவது புரோகிதத்திற்கு அழைப்பு வரும்போது போகிறாராம். மற்ற நேரங்களில் இவரது அப்பாவோடு கடையில் நகைகள் பாலிஷ் செய்கிறாராம்.
இத்தனைக்கும் திருப்பத்துாரைச் சேர்ந்த இவர், பர்வத மலை அடிவாரத்தில் இருந்த ஆதிசிவலிங்காச்சாரியார் குருஸ்வாமி பீடத்தில் மந்திரங்களை கற்றுக்கொண்டவர். ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டமுடையவர். இப்படிப்பட்டவரே புரோகிதத்திற்குப் போக வேண்டிய நிலைமை என்றால் என்ன சொல்வது?
கோகுல் நாத் இரண்டு ஆண்டுகளாக தான் காத்திருக்கிறார். ஆனால், ராசிபுரத்தை சேர்ந்த விஜயகுமார், 2008ம் ஆண்டில் இத்திட்டம் துவக்கப்பட்ட உடனே பயிற்சி வகுப்பில் சேர்ந்து அர்ச்சகர் படிப்பை முடித்தவர். இவருக்கும் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்கள் எதிலும் அர்ச்சகராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்காமல், ராசிபுரத்திலேயே சிறிய கோவில் ஒன்றில் அர்ச்சனை செய்கிறார்.
இப்படி, 200 பேருக்கு மேல் காத்திருக்கின்றனர். பலர் புரோகிதர் வேலைக்குப் போகின்றனர். ஆன்மிகவாதிகளான இவர்கள் கோவில் அர்ச்சகராகும் ஆசையில் இறை தொண்டிற்காகப் படித்து, கடைசியில் புரோகிதராகும் நிலைமையில் இருக்கின்றனர் என்றால், நீயும் சற்று யோசித்து முடிவு எடு.
காத்திருப்போர் பட்டியலில் தான் சேர முடியும். புரோகிதம் தான் செய்ய வேண்டும் என்றால், எதற்காக அர்ச்சகர் படிப்பு. யோசி குணசீலா...
- அன்புடன், இந்துமதி.
