PUBLISHED ON : செப் 26, 2026

அன்புள்ள ஆன்ட்டி,
நான், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன். அழுது கொண்டே, இதை எழுதுகிறேன். பிறந்ததில் இருந்து, தாத்தாவின் அன்பில் வளர்ந்தவன். அப்பா -- அம்மா எனக்கு சொல்லாத ராமாயணம், மகாபாரதம், துருவன், பிரகலாதன், லவ - குசா, அரிச்சந்திரன், நளன் கதைகளை, தாத்தா சொல்லி தான் அறிவேன்.
அப்பா - அம்மா, சித்தி - சித்தப்பா என, எங்களுடையது கூட்டுக் குடும்பம். பாட்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன், மறைந்தார்.
அடுத்த ஆண்டில், தாத்தாவுக்கு பக்கவாதம் வந்து, படுத்த படுக்கையாகி விட்டார். நன்றாக இருந்த போது, வீட்டுக்கு தேவையான வேலைகளை செய்வார் தாத்தா.
குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால், பிளம்பரை அழைத்து வருவது; 'கீசர்' பழுது என்றால், எலக்ட்ரீஷியனை அழைத்து வருவது; கரன்ட் பில் கட்டுவது; ரேஷன் மற்றும் காய்கறி வாங்கி வருவது என, அனைத்து வேலைகளுக்கும் தாத்தாவை பயன்படுத்திக் கொண்டனர்.
இப்போது, அப்பா - அம்மா, சித்தி - சித்தப்பா என, அனைவரும், தாத்தாவை வெறுத்து ஒதுக்குகின்றனர்.
திட்டு வாங்கும் போது, 'நான் என்ன செய்வேன்...' என, அழுகிறார், தாத்தா.
ஒருவேளை கூட சாப்பாடு அன்பாக கொடுப்பதில்லை.
'இந்த நிலையில் கூட கொட்டிக்கிறியே... வெட்கம், மானம், சூடு, சொரணை கிடையாதா...' என, முகத்தில் இடிக்கின்றனர்.
'வேளா வேளைக்கு இத்தனை மாத்திரை முழுங்கறியே... எல்லாத்தையும் மொத்தமா முழுங்கி போய் சேர வேண்டியது தானே...' என்கின்றனர்.
இதையெல்லாம் கேட்க அழுகை வருகிறது. தாத்தாவுக்கு எப்படி இருக்கும். இந்த துன்பங்களில் இருந்து விடுபட்டு, அவர் அமைதியாக வாழ, வழி இருக்கிறதா ஆன்ட்டி.
இப்படிக்கு,
தியானேஸ்வரன்.
அன்பு தியானேஸ்வரா,
உன் கடிதத்தை படிக்கும் போதே என் கண்கள் கலங்குகின்றன.
பிள்ளைகள், பெற்றவர்களை பாரமாக, வேண்டாத பழைய பொருளாக, நினைக்கிற உலகம் இது.
நீ பார்த்து வளர்ந்து, வீட்டுக்கு அவ்வளவு உபயோகமாக இருந்த தாத்தா, இப்போது தனக்கு தானே உபயோகமற்று போன நிலையில், 'டிஷ்யூ' காகிதமாக கருதுகிற உன் அப்பா, சித்தப்பா, அம்மா, சித்தியை என்ன சொல்வது?
உன் அம்மாவும், சித்தியும் வெளியில் இருந்து அப்பாவையும், சித்தப்பாவையும் கல்யாணம் செய்து வாழ வந்த மருமகள்கள். ஆனால், உன் அப்பாவும், சித்தப்பாவும் தாத்தா பெற்ற பிள்ளைகள். உன்னிடமே தாத்தா அவ்வளவு அன்பாக இருந்தார் என்றால், பெற்ற பிள்ளைகளிடம் எப்படி இருந்திருப்பார்?
பாராட்டி, சீராட்டி, மார்பின் மீதும், தோளின் மீதும் போட்டு எப்படி வளர்த்திருப்பார்.
அவர்களை படிக்க வைத்து ஆளாக்கி, கல்யாணம் செய்து வைக்க, எவ்வளவு உழைத்திருப்பார்.
இவற்றையெல்லாம் மறந்து, படுக்கையில் கிடப்பவரை, திட்டுகின்றனர் என்றால், எப்படிப்பட்ட கிராதகர்கள்.
இவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றனர். தங்களுக்கும் வயதாகும்... இதே நிலைமை வந்தாலும் வரும். விபரமறிந்த மகன் பார்த்துக் கொண்டிருக்கிறான். இதையே கேட்க மாட்டான் என்பது, என்ன நிச்சயம் என, உணராமல் இருக்கின்றனர்.
வினை விதைத்தவன் வினை அறுத்தே ஆக வேண்டும்.
இவையெல்லாம் பின்னால் நடக்க போகின்றவை.
ஆனால், இப்போதைய நிலையில், தாத்தாவின் கஷ்டம் தீர என்ன வழி என்பது தான் கேள்வி.
யாராவது நல்ல புத்தி சொல்லி, உன் அப்பா, அம்மாவையோ, சித்தி, சித்தப்பாவையோ திருத்த முடியாது.
சிறிதேனும் மனசாட்சி உள்ளவர்களைத் தான் திருத்த முடியும். திருந்துவதற்கான சாத்தியம் உண்டு.
சில யோசனைகள் கூறிகிறேன் கேள்...
* இப்போது எனக்கு எழுதிய மாதிரி, தாத்தா படும் கஷ்டத்தை எழுதி, தமிழக முதல்வரின் பார்வைக்கு அனுப்பலாம்
* காவல்துறையின் உதவியை நாடலாம்
* நீ இருக்குமிட காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு புகார் கடிதம் கொடுக்கலாம்; நேரில் சென்றும் புகார் அளிக்கலாம்
* கடைசி தீர்வு, முதியோர் இல்லம். ஆனால், உன் தாத்தா இருக்கும் நிலையில் சேர்த்து கொள்வரா என, தெரியவில்லை. அந்த கட்டணத்திற்கு பயந்தே உன் அப்பாவும், சித்தப்பாவும் தாத்தாவை முதியோர் இல்லத்தில் விடவில்லை என்று நினைக்கிறேன்.
* ஆதரவற்றோருக்கு முதியோர் இல்லங்கள் உள்ளன
* ஆனால், எல்லாவற்றையும் விட, சட்டம் பெரிது. இப்போது, முதியோரை கொடுமைப்படுத்தும் பிள்ளைகளை, கடுமையாக தண்டிக்கிறது. உடனடி தீர்ப்பு வழங்குகிறது. உன் பள்ளி ஆசிரியரிடமோ, தலைமை ஆசிரியரிடமோ தாத்தாவின் நிலையை எடுத்துக் கூறி, தைரியமாக நிவாரணம் தேடித்தர முடியும்.
தைரியம் இருக்கிறதா உன்னிடம்? உன்னிடம் அன்பு காட்டிய தாத்தாவுக்கு கருணையோடு உதவுவாயா?
அழுதால் மட்டும் போதாது, தம்பி. தாத்தாவுக்கு பிரதி உபகாரம் செய்ய வேண்டும். செய்வாயா...
இப்படிக்கு, இந்துமதி.
