
அன்புள்ள அம்மா...
எனக்கு 15 வயதாகிறது. தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. என்னுடன், 5ம் வகுப்பு வரை படித்த நண்பன் தற்போது பெற்றோருடன் லட்சத்தீவுகளில் வசிப்பதாக அறிந்தேன். லட்சத்தீவுகள் என்பது தனியாக உள்ள ஒரு நாடு தானே...
கடல் சூழ்ந்துள்ள லட்சத்தீவுகளில், மின்சாரத்திற்கும், குடிநீருக்கும் மக்கள் எங்கே போவர். லட்சத்தீவுகள் பற்றி வினோத கற்பனை எல்லாம் வருகிறது. அந்த தீவுகள் பற்றி எனக்கு விளக்கி சந்தேகங்களை தீர்த்து வையுங்கள்.
இப்படிக்கு,
ஆர்.பி.எம்.மங்களா கணேஷ்.
அன்பு செல்லத்துக்கு...
அரபிக் கடல் பகுதியில் உள்ளது லட்சம் தீவுகள். அதில், 1 லட்சம் தீவுகள் அடங்கியது என்ற பொருள் தரும் வகையில் லட்சத்தீவுகள் என அழைக்கப்படுகிறது. அது தனியான நாடு அல்ல. நம் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக உள்ளது. புதுச்சேரி மாநிலம் போன்றது.
லட்சத்தீவுகளில் இருந்து லோக்சபாவுக்கு ஒரு உறுப்பினர் உண்டு. அரபிக் கடலில், 32 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது.
இது 36 தீவுகளின் கூட்டணி. இங்கு, 70 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மொத்த ஜனத்தொகையில், 96 சதவீதம் பேர் இஸ்லாம் மதத்தை பின் பற்றுகின்றனர்.
லட்சத்தீவுகளின் அலுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளது. மலையாளம் கலந்த ஜெசரி, மகி மற்றும் டிவெகி மொழிகள் பேசுவோரும் அங்கு வசிக்கின்றனர்.
இங்கு மின்சாரம் கிடைக்கும் வழிமுறைகள் பற்றி சொல்கிறேன் கேள்...
* டீசல் இயந்திரம் பயன்படுத்தி மின் உற்பத்தி நடக்கிறது
* சூரிய சக்தியும் பயன்படுகிறது
* காற்றாலை மின்சாரம்
* நுண்ணுயிர் கரிமபொருள் வழியாக எரிசக்தி
* அனல் மின்நிலையம் வழியாக 65 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
லட்சத்தீவுகளில் மக்கள், நிலத்தடி நீரைத்தான் குடிநீராக பயன்படுத்துகின்றனர்.
தீவுகள் முழுக்க, 2,143 ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன.
லட்சத்தீவுகள் நம் நாட்டின் ஒரு பகுதி என்பதால் அங்கு செல்ல இந்தியருக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. அரசின் அனுமதி பெற்ற ஒப்புகை சீட்டு போதுமானது.
லட்சத்தீவுகளில் மீன் பிடிப்பு, கயிறு திரித்தல், தேங்காய் உற்பத்தி, பவளபாறை சுற்றுலா வாயிலாக வருமானம் கிடைக்கிறது.
இங்கு சராசரியாக 28 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் நிலவுகிறது.
கேரள மாநிலம், கொச்சியில் இருந்து, 440 கி.மீ., துாரத்தில் லட்சத்தீவுகள் உள்ளன. பயணியர் கப்பல்கள், சுற்றுலாப் பயணியரை லட்சத்தீவுக்கு அழைத்து செல்கின்றன. பயணம், 18 மணி நேரம் வரை இருக்கும்.
கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்கு விமான போக்குவரத்து உள்ளது. அங்குள்ள அகாட்டி விமானநிலையத்துக்கு, 90 நிமிடங்களில் சென்றுவிடலாம்.
இங்கு, செயற்கைகோள் வழியாக இன்டர்நெட் வசதி செய்யப்பட்டிருந்தது. தற்போது கண்ணாடி ஒளியிழை வழியாக இந்த வசதி கிடைக்கிறது.
லட்சத்தீவுகளில் வசிக்கும் நண்பனின் முகவரியை கேட்டறிந்து, குடும்பத்துடன் சுற்றுலா சென்று வரவும். நல்ல படிப்பினை கிடைக்கும்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.