
பூஞ்சோலை கிராமத்தில் முதியவர் முனியன் வசித்துவந்தார். அவருக்கு குழந்தை இல்லை; மனைவியும் இறந்து விட்டார். வயது முதிர்வடைந்தாலும் உழைத்து வாழும் நோக்கில் செயல்பட்டார்.
பட்டணத்தில் பலுான்களை வாங்கி, காற்று நிரப்பி விற்பார். வண்ண பலுான்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார் முதியவர். அவையும் அவருடன் உரையாடும்.
அன்று பிங்க் வண்ண பலுான் சிரித்தபடியே, 'நன்றாக காற்று நிரம்பியிருக்கிறது...' என்றது.
இதை கேட்டவுடன் சிரித்தார் முனியன்.
பச்சை வண்ண பலுான், 'ஆமாம்... எனக்கு இவ்வளவு காற்று போதும்...' என்றது. அதை கேட்டு ரசித்தார் முனியன்.
அன்று மாலை பள்ளி அருகே பலுான்களுக்கு காற்று நிரப்பி கட்டி வைத்திருந்தார்.
வெள்ளை நிற பலுான், 'தாத்தா...' என அழைத்தது.
'என்ன வேண்டும்...'
மெதுவாக கேட்டார் முனியன்.
'மற்றவற்றை விட, எனக்கு கொஞ்சம் அதிகம் காற்று நிரப்புங்க. அப்போது தான் குழந்தைகள் ஆசையுடன் வாங்குவர்...' என்றது வெள்ளை நிற பலுான்.
'அதிகமாக காற்று நிரப்பினால் நீ உடைந்துவிடுவாயே...'
'இல்லை தாத்தா... நான் வலுவாக உள்ளேன். அதிகமாக காற்று நிரப்பி பெரிதாக்கி வையுங்கள்...'
கெஞ்சி கேட்டதால் முனியன் மேலும் காற்றை நிரப்பினார். மற்ற பலுான்களை விட அது மிகப்பெரிதாக தெரிந்தது.
வகுப்பு முடிந்து வந்த சிறுவர், சிறுமியர் காசு கொடுத்து பலுான்கள் வாங்கினர்.
சிறுவன் ஒருவன், 'எனக்கு அந்த பெரிய பலுான் வேண்டும்...' என்று தந்தையிடம் கேட்டான்.
'வேண்டாம்... சிறியதாக வாங்கிக் கொள்...'
ஆனால் பிடிவாதமாக பெரிய பலுானை வாங்கினான் சிறுவன்.
உடனே, 'எல்லாருக்கும் என்னை தான் பிடித்திருக்கிறது...' என, தற்பெருமை பேசியது வெள்ளை பலுான்.
வாங்கிய பலுானுடன் வீடு செல்ல தந்தையின் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்தான் சிறுவன். கையில் இருந்த நுால் பிரிந்து பலுான் பறந்து மின் கம்பத்தில் சிக்கியது. சிறுவன் அதை அண்ணாந்து பார்த்தான். அதை மீட்க முயன்றால் ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என அறிவுறுத்தினார் அப்பா.
மின்கம்பியில் சிக்கியிருந்த பலுான் அழுதது.
'தற்பெருமை கொண்டதால் தான் தண்டனை கிடைத்திருக்கிறது...'
தாத்தாவிடம் மன்னிப்பு கேட்டது வெள்ளை பலுான்.
பட்டூஸ்... தற்பெருமை பேசினால் இன்னல் தான் வரும்.
உஷா முத்துராமன்!