
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சிங்கனுார் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், 1997ல், 7ம் வகுப்பு படித்த போது, சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்.
திருடும் கதாபாத்திரம் ஏற்று பதுங்கி இருந்த எங்களை, போலீஸ் கதாபாத்திரம் ஏற்றிருந்த மாணவன் ஜெயசீலன் துரத்தி வந்தான். இதை கவனித்த ஓவிய ஆசிரியர் கருணாநிதி அருகில் அழைத்தார்.
போலீசாக நடித்தவனிடம், 'உன் லட்சியம் என்ன...' என்று கேட்டார். அதற்கு, 'என் தந்தை, சென்னை போலீசில் பணியாற்றுகிறார். அவரைப் போல் வர ஆசைப்படுகிறேன்...' என்றான்.
நம்பிக்கையூட்டும் வகையில், 'நன்றாக படித்து, உன் கனவை நனவாக்கு...' என தட்டிக் கொடுத்து வாழ்த்தினார். எங்களிடம், 'இந்த விளையாட்டில், நல்ல பாடங்கள் கற்று, ஒழுக்கத்துடன் திகழ வேண்டும்...' என அறிவுரைத்தார்.
அதன் படி நடந்து, சிறப்பாக படித்து, வெற்றிகளை குவித்தோம். போலீசாக நடித்த வகுப்பு நண்பர் சென்னை காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
என் வயது, 37; நியூ இந்தியா காப்பீடு நிறுவனத்தில், முகவராக பணியாற்றுகிறேன். அந்த ஆசிரியர் அறிவுரைத்தபடி ஒழுக்கத்தை இன்றும் கடைபிடித்து வருகிறேன்.
- ஆர்.ராஜ்மோகன், விழுப்புரம்.
தொடர்புக்கு: 85249 06220

