sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

திமில் கொண்ட காளையோடு திமிர் கொண்ட தமிழன் பேசும் மொழியே ஜல்லிக்கட்டு

/

திமில் கொண்ட காளையோடு திமிர் கொண்ட தமிழன் பேசும் மொழியே ஜல்லிக்கட்டு

திமில் கொண்ட காளையோடு திமிர் கொண்ட தமிழன் பேசும் மொழியே ஜல்லிக்கட்டு

திமில் கொண்ட காளையோடு திமிர் கொண்ட தமிழன் பேசும் மொழியே ஜல்லிக்கட்டு


PUBLISHED ON : ஜன 14, 2025

Google News

PUBLISHED ON : ஜன 14, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'திமில் கொண்ட காளையோடு திமிர் கொண்ட தமிழன் பேசும் மொழியே ஜல்லிக்கட்டு', என்று தமிழரின் பாரம்பரிய பொங்கல் திருவிழா பற்றி விவரிக்கிறார் திருநெல்வேலியை சேர்ந்த தன்னம்பிக்கை பேச்சாளர், ஆராய்ச்சியாளர் எம்.கார்த்திகா ராஜா.

'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு'

என்பது பாரதிதாசன் வாக்கு. விழாக்கள் பண்பாட்டின் முதன்மையான உட்கூறு. அதுவே மானுட அழகியலின் உன்னதம். ஜாதிமத பேதமின்றி தமிழர் என்ற குடையின் கீழ் சமதர்ம சமுதாயம் இணைந்து கொண்டாடும் திருநாள். புத்தாடை அணிந்து, வாசலில் எழில் கோலமிட்டு, புதுப்பானை உலையேற்றி, புத்துருக்கு நெய்ஊற்றி புத்தரிசி தீட்டி கொண்டாடும் நன்னாள். இஞ்சியும், மஞ்சளும், செந்நெல்லும் கொட்டி குவித்து உலகுக்கு அச்சாணியாக திகழும் உழவுக்கும், உழவனுக்கும் நன்றி சொல்லும் திருநாள்.

தை முதல் நாள் தொட்டு இன்று வரையிலும் பூமிப்பந்தின் எல்லா கண்டங்களிலும் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற தளராத நம்பிக்கையோடு பொங்கலை கொண்டாடுகிறோம். 'பொங்கலோ பொங்கல்' என்ற முழக்கம் எதிரொலிக்க தை மகளை வரவேற்கிறோம்.

'திங்களை போற்றுதும்

திங்களை போற்றுதும்

ஞாயிறு போற்றுதும்

ஞாயிறு போற்றுதும்

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்'.

என்று வணங்கி சிலப்பதிகாரத்தை

தொடங்குகின்றார் இளங்கோவடிகள். இந்த உலகத்தில் ஜீவராசிகள் வாழ இறைவனின் கொடை இயற்கை. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளானது தைப்பொங்கல். உழவர்களின் உழைப்பால் விளைந்த பொருட்களான மஞ்சள், இஞ்சி, கரும்பு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்தை சூரியனுக்கு படைத்து புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிடுகின்றனர்.

பயிர்கள் விளைய சக்தி தரும் விவசாயி

பொங்கல் என்பதற்கு பொங்கி வழிதல் என்பது பொருள். பயிர்கள் வளர, உயிர்கள் செழிக்க, மழை பொழிய, ஒளி கிடைக்க உதவுவது சூரியன். உலகம் நிலை பெற சூரியனின் சக்தியை தவிர்க்க முடியாது. தமிழர்கள் எத்தனை வகை விழாவை கொண்டாடினாலும், அவற்றுள் முதன்மை பெற்றது தமிழர் திருநாள். பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் கிடைக்கும்.

''உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்'' என்றார் பாரதி. மருதநிலமும் உழவுத் தொழிலும் பெருமைக்குரியதே.

'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்' என்றார் வள்ளுவர். உழவு இல்லையேல் உணவு இல்லை. உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை. இந்த உழவு தான் மனிதர்களை நாகரிக வாழ்வை நோக்கி நகர்த்தியுள்ளது.

நம் ஆதிமூதாதையர்கள் ஆற்றின் கரையோரம் குடில் அமைத்து வாழ்வதற்கு ஆதாரமாய் இருந்தது வேளாண்மை. மழைக்கும், மண்ணுக்கும் உழுது விதைத்து உணவை கொடுக்கும் உழவனுக்கும் நன்றி சொல்லும் திருநாளாக தமிழர் திருநாளை கொண்டாடுகிறோம்.

போகியின் உன்னத நோக்கம்

'பொன்னு விளையிற பூமியடா, விவசாயத்தை பொறுப்பா கவனிச்சி செய்தோமடா, உண்மையா உழைக்கிற நமக்கு, எல்லா நன்மைகளும் நாடி வந்து கூடுதடா' என்றார் கவிஞர் மருதகாசி. பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி கொண்டாடுகிறோம். மடமையை எரிக்க, கடமையை மதிக்க, சூழலை போற்ற, புகையில்லா போகியை கொண்டாட வேண்டும். வெறுப்பை தீயிலிட்டு பகைமையை களைந்து அன்பை பேணி பகைவனையும் நண்பனாக்குவதே' போகி பண்டிகையின் உன்னத நோக்கம்.

''பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையினானே''

என்கிறது நன்னுால்.

வீட்டையும், நாட்டையும் சுத்தம் செய்வதுபோல் மனிதனின் மனங்களையும் சுத்தம் செய்வோம். பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாள் ஏர் இழுக்கும் மாடுகளுக்கும், பால்தரும் பசுக்களுக்கும் பொங்கல் இட்டு மகிழ்வதுடன், விவசாயத்திற்கு உதவிய கால்நடைக்கு நன்றி செலுத்தும் நாளே மாட்டுப் பொங்கல்.

ஜல்லிக்கட்டு

திமில் கொண்ட காளையுடன் திமிர் கொண்ட தமிழன் பேசும் மொழியே ஜல்லிக்கட்டு. மல்லுக்கட்ட துணிந்தவனுக்கு ஜல்லிக்கட்டாக அஞ்சா நெஞ்சனுக்கு மஞ்சு விரட்டாக வீறு நடைபோடும் தமிழர்களுக்கு ஏறுதழுவுதலாக மாட்டுப் பொங்கலன்று நம் தமிழர்களின் வீர விளையாட்டு உள்ளது. மங்கலம் பொங்க, மனக்கவலைகள் தீர, செங்கரும்பு சுவை போன்று உழவர்கள் மகிழ்வதே தமிழர் திருநாள். உற்றார் உறவினர்களை கண்டு மகிழ்ந்து பெரியோர்களிடம் ஆசி பெற்று மகிழும் நன்னாள் தான் காணும் பொங்கல். இயற்கையை நேசிக்கும் திருநாள் சங்க இலக்கியத்தில் தை பொங்கலை 'தைஇத் திங்கள் தண்கயம் படியும்' என்று நற்றிணையும், 'தைஇத் திங்கள் தண்ணிய தரினும்' என்று குறுந்தொகையும், 'தைஇத் திங்கள் தண்கயம் போல்' என்று புறநானுாறும், 'தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ' என்று கலித்தொகையும் போற்றி புகழ்கின்றது.

பழமையை பக்குவமாய் வழியனுப்பிவிட்டு, புதுவரவுகளுக்கு வரவேற்பு அளித்திடும் வண்ணத்திருநாள், திருவள்ளுவர் ஆண்டு துவங்கும் நாளாகும். வியர்வையை நிலத்தில் சிந்தி உலகிற்கே உணவளிக்கும் தெய்வதொழில் புரியும் உழவரின் திருநாளாக சிறப்பு பெறுகிறது தமிழர் திருநாள்.

''ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை''. இயற்கையை நேசித்தல், உயிர்கள் மீது அன்பு செலுத்துதல், தன்னுயிர் போல மண்ணையும் பாதுகாத்தல், உலகிற்கே அறத்தை போதித்தல், மனிதத்துடன் செயல்படுதல் போன்ற தமிழர்களின் பெருமையை சந்ததியினரிடம் விதைப்போம். தமிழர்களின் அறத்தினை நிலை நிறுத்துவோம் என்றார்.

மகர சங்கர மணப்பொங்கல்

ராமநாதபுரம் வரலாற்று ஆய்வாளர் உ. விஜயராமு கூறியதாவது: சங்க காலத்திலும், இலக்கியங்களிலும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை வெவ்வேறு பெயர்களால் அழைத்து வந்தனர். பொதுவாக அறுவடை திருவிழா என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.

இந்திர விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடியதாக மணிமேகலை தெரிவிக்கிறது. இதே போன்று அறுவடை நாளை பல பெயர்களில் கொண்டாடியது பற்றி சங்ககால நுால்கள் தெரிவிக்கிறது. உத்ராயன சங்கராந்தி நாளை தை முதல் நாளாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் 'புதியீடு விழா' (முதல் அறுவடை விழா) என அவரது கல்வெட்டு தெரிவிக்கிறது. கங்கைகொண்ட ராஜேந்திர சோழன் காலத்தில் 'மகர சங்கர மணப்பொங்கல்' என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழன் தைப்பொங்கல் அன்று காவிரியில் தனது சேனைகளுடன் நீராடினான் என்ற குறிப்பு உள்ளது. செம்பியன் மாதேவியின் (கண்டராதித்த சோழன் மனைவி) கல்வெட்டில் 'உத்ராயன சங்கராந்தி' என்றும், பொங்கல் சோறு என்றும் வரிகள் உள்ளன.

சோழர் காலத்தில் சங்கராந்தி பொங்கல் விழாவை கோயில்களிலும் பொங்கலிட்டு கொண்டாடியதற்கான ஆதாரங்கள் உள்ளன. தஞ்சை மராட்டியர்கள் காலத்தில் 'மகர சங்கராந்தி' என்று அழைக்கப்பட்டது.

அறுவடை திருவிழாவை அப்போதைய தமிழ்நாட்டின் உள்ளடக்கிய பகுதியாக இருந்த ஆந்திரா, கேரளா, கர்நாடகா மக்கள் சங்கராந்தி பண்டிகையாக கொண்டாடுகின்றனர். 11ம் நுாற்றாண்டில் ஜே. ஏ. துப்வா என்ற போர்த்துக்கீசிய பேராசிரியர் இப்பகுதிக்கு வந்து அப்போதைய மக்களின் பழக்க வழக்கங்களையும் அவர்களது வாழ்வு முறையையும் அறிந்து தனது நுாலில் எழுதியுள்ளார். அதில் பொங்கல் விழாவை அறுவடை திருவிழாவாகவும், சங்கராந்தி பண்டிகையாகவும் இப்பகுதி மக்கள் கொண்டாடியதை எழுதியுள்ளார்.

மன்னர்கள் பொங்கல் விழா வரவிருப்பதை முரசு கொட்டி முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிப்பார்கள். தை முதல் தேதிமுதல் அந்த மாதம் முழுவதும் பொங்கல் விழா கொண்டாடுவார்கள் என்று மணிமேகலை தெரிவிக்கிறது என்றார்.

- என். வெங்கடேசன், சி.முருகன்






      Dinamalar
      Follow us