தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/தீபாவளி மலர்/தித்திக்கும் இன்பத் தீபாவளி

தித்திக்கும் இன்பத் தீபாவளி

தித்திக்கும் இன்பத் தீபாவளி


PUBLISHED ON : நவ 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காட்டுக்குள்ளே திருவிழா

தீபாவளிக்கு சொல்லப்படும் புராணக் கதைகளில் இதுவும் ஒன்று. காட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்தவர் தீர்க்கதமஸ். இருட்டு, விலங்குகள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களால் துன்பத்திற்கு ஆளானார்.

ஒருமுறை அப்பகுதிக்கு வந்த முனிவர் சனாதனரிடம், 'துன்பம் என்ற இருளில் சிக்கித் தவிக்கிறேன். அதில் இருந்து விடுபட விரதம் இருக்கிறேன். விரதம், தவத்தில் ஈடுபட்டு மேலும் துன்பத்திற்கு ஆளாகி விட்டேன். மகிழ்ச்சியுடன் வாழ வழியே இல்லையா?'' எனக் கேட்டார்.

அதற்கு சனாதனர், 'கங்கையில் நீராடி, புத்தாடை உடுத்தி, இனிப்புகளைச் சாப்பிட்டு, ஏழைகளுக்கு தானம் அளித்து, வீடெங்கும் விளக்கேற்றி திருவிழா போல கொண்டாடுங்கள். துன்பம் தீரும்'' என்றார்.

எப்போது கொண்டாடலாம் எனக் கேட்டதற்கு ஐப்பசி மாதம் தேய்பிறை திரயோதசி அன்று தீபம் ஏற்றி எமதர்மனை வழிபடுங்கள். அகால மரணம் ஏற்படாது. மறுநாள் நரக சதுர்த்தசியன்று நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், அங்கு துன்பப்படும் நம் முன்னோர்கள் விடுபடவும் பிரார்த்தனை செய்யுங்கள். எண்ணெய், சிகைக்காய், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புகள் வைத்து பூஜை செய்யுங்கள்.

அந்த புனித நாளில் எண்ணெய்யில் மகாலட்சுமியும், சிகைக்காயில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் பார்வதியும், நீரில் கங்கையும், புத்தாடையில் மகாவிஷ்ணுவும், தீபத்தில் பரம்பொருளான கடவுளும் தங்கி உள்ளனர். இவர்கள் மனம் குளிர்ந்து ஒளியின் பாதையில் உங்களை வழிநடத்துவர்'' என்றார்.

அதன்படி காட்டில் வாழ்ந்த தீர்க்கதமஸ் கொண்டாடிய விழாவே தீபாவளி. பின்னாளில் அவர் தெய்வீகம் மிக்க முனிவராகவும் மாறினார்.

புராணத்தில் தீபாவளி

பிரம்மாவிடம் இருந்து வேதங்களைத் திருடிய அசுரன் ஹிரண்யாட்சன், பாதாள உலகத்தில் ஒளிந்தான். அதை மீட்பதற்காக பெருமாள் பன்றி வடிவில் (வராகப்பெருமாள்) பாதாள உலகிற்குச் சென்றார். அப்போது வராகப் பெருமாளுக்கும், பூமி தேவிக்கும் ஏற்பட்ட நெருக்கத்தால் 'பவுமன்' என்ற அசுரன் பிறந்தான். பொறுமை மிக்க பூமிதேவிக்கு பிறந்த அவன் கெட்ட குணங்கள் மிக்கவனாக இருந்தான். இவன் 'நரகாசுரன்' எனப் பெயர் பெற்றான். தேவர்களையும், மக்களையும் கொடுமை செய்தான். பெரிய இடத்துப் பிள்ளை என்பதால் அவனை யாரும் தட்டிக் கேட்க வில்லை. இருப்பினும் அவனது அட்டூழியம் பொறுக்காமல் பெருமாளிடம் புகார் செய்தார் பிரம்மா.

ஆனால் நரகாசுரனோ தன் தாயைத் தவிர வேறு யாராலும் அழிவு நேரக் கூடாது என வரம் பெற்றிருந்தான். அப்போது சத்தியபாமாவாக வாழ்ந்தாள் பூமிதேவி. அவள் பகவான் கிருஷ்ணரைத் திருமணம் செய்திருந்தாள். கிருஷ்ணர் அவளை அழைத்துக் கொண்டு நரகாசுரனுடன் போருக்குச் சென்றார். ஒரு கட்டத்தில் நரகாசுரனால் தாக்கப்பட்டு மயக்கம் அடைந்தவர் போல நடித்தார். பதறிய சத்யபாமா கணவரைக் காப்பாற்ற, மகனான நரகாசுரன் மீதே அம்பு தொடுக்க அவன் இறந்தான். இறந்தவன் அசுரன் என்றாலும் மகன் என்பதால் பெற்ற தாயின் மனம் துடித்தது. அதே நேரம் அவனுடைய இறப்பைக் கொண்டாடும் விதத்தில் மக்கள் எண்ணெய் தேய்த்து நீராடி புத்தாடை உடுத்த வேண்டும் என வரம் கேட்டாள். அதுவே தித்திக்கும் தீபாவளி.

பிரகாசமான நகரம்

பூமாதேவியை கடலுக்குள் ஒளித்து வைத்தான் ஹிரண்யாட்சன். பன்றி உருவெடுத்த மகாவிஷ்ணு (வராகமூர்த்தி) அசுரனைக் கொன்றார். தன்னுடைய தெற்று பல்லால் பூமியைத் தாங்கி நின்றார். அப்போது வராக மூர்த்தியின் தீண்டலால் பூமாதேவிக்கு அசுரக்குழந்தை பிறந்தது. அவனே நரகாசுரன்.

அவனது இயற்பெயர் 'பவுமன்'. அதாவது 'பூமாதேவியின் மகன்'. இந்தியாவின் வடகிழக்கிலுள்ள தற்போதைய அசாம் பகுதியை அவன் ஆட்சி செய்து வந்தான். 'ப்ராக் ஜோதிஷபுரம்' என தலைநகருக்கு பெயரிட்டான். 'பிரகாசமான நகரம்' என பொருள். பேரில் மட்டும் ஒளியை வைத்துக் கொண்டு அசுரன் பவுமனின் செயல்கள் இருளை உண்டாக்கும் விதத்தில் அட்டூழியமாக இருந்தன.

பணம் பெருக...

தீபாவளி அன்று ஸ்லோகம் சொல்லி குபேரனை வழிபடுவது சிறப்பு. அவரைப் போல பணக்காரனாக வேண்டும் என ஆசைப்பட்டால் போதாது. அதற்கான உழைப்பும் அவசியம். தலையில் பொன் கிரீடம் தாங்கி முத்துக்குடையின் கீழ் அவர் அமர்ந்திருப்பார். இவரின் பிரதிநிதிகள் சங்கநிதி, பதுமநிதி. இவர்களில் சங்கநிதியின் கையில் உள்ள சங்கு செல்வத்தின் அடையாளம். பதுமநிதியின் கையில் உள்ள தாமரை அறிவின் அடையாளம்.



பணம் பெருக குபேர ஸ்லோகம்

ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநே

நமோ வயம் வைஸ் ரவணாய குர்மஹே

ஸ மே காமாந் காமகாமாய மஹ்யம்

காமேஸ்வரோ வைஸ்ரவணோ ததாது

குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நமஹ:

இதை தினமும் 11 முறை சொல்லி வழிபட்டால் பணம் பெருகும்.

நல்லெண்ணெய்யில் மகாலட்சுமி

* ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி நாளே தீபாவளி.

* வட இந்தியாவில் சோடா தீபாவளி, படா தீபாவளி, கோவர்த்தன பூஜை என மூன்று நாள் கொண்டாடுகின்றனர்.

* தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பாவம் விலகி புண்ணியம் சேரும். இந்நாளில் எண்ணெய்க் குளியல் செய்பவருக்குக் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

* நல்லெண்ணெய்யில் மகாலட்சுமியும், வெந்நீரில் கங்காதேவியும் தீபாவளியன்று இருப்பதை 'தைலே லட்சுமி; ஜலே கங்கே' என்கிறது துலாபுராணம்.

* ஆணவம் என்னும் இருளின் அடையாளம் நரகாசுரன். அந்த இருளைப் போக்க ஞானம் என்னும் தீபங்களை வீட்டில் ஏற்றுகிறோம்.

பண்டிகையின் ராஜா

தியாகத்தாய் சத்தியபாமா மகனை இழந்த போதும் பகவானிடம் அந்நாளை மக்கள் கொண்டாட வரம் கேட்டாள். இதனால் 'பண்டிகையின் ராஜா தீபாவளி' என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.

தத்துவம் பல இருந்தாலும் அதற்கெல்லாம் சிகரமாக இருப்பது பகவத்கீதை. தீபாவளி போல இதுவும் தியாகத்தின் பின்னணியில் உருவானது. சாதாரணமாக தத்துவ உபதேசம் என்பது சீடர்களுக்கு குருநாதர் செய்வது வழக்கம். ஆனால் கீதையோ நெருக்கடியான சூழலில் போர்க்களத்தில் பிறந்தது. எஜமானராக இருக்கும் அர்ஜுனன், வண்டிக்காரனாக தேரோட்டும் பார்த்தசாரதியிடம் கேட்ட உபதேசம் இது.

“கிருஷ்ணா... உன்னிடம் சீடனாக சரணடைந்த எனக்கு உபதேசம் செய்வாயாக” என அர்ஜுனன் கேட்ட போது பகவத்கீதை பிறந்தது. இதனால் 'தீபாவளியின் தம்பி' என்ற அந்தஸ்து பகவத் கீதைக்கு உண்டு. பண்டிகையின் ராஜா தீபாவளி போல தத்துவங்களில் கீதையே சிறந்தது. தீபாவளி, கீதை இரண்டுக்கும் காரணமாக இருப்பவர் பகவான் கிருஷ்ணர் ஒருவரே.

காவிரியில் நீராடுங்க...

தீபாவளி குளியலை கங்கா ஸ்நானம் என்கிறோம். ஆனால் இதை உருவாக்கிய கிருஷ்ணரோ தன்னுடைய பாவம் தீர காவிரி கரைக்கு வந்தார். வீரனான நரகாசுரனைக் கொன்றதால் அவருக்கு தோஷம் உண்டானது. அவருடைய நீலநிற மேனியின் வனப்பு குறைந்தது. அதை போக்க சிவபெருமானிடம் தீர்வு கேட்டார்.

“கிருஷ்ணா! துலா மாதமான ஐப்பசி மாதத்தில் சூரிய உதயத்தில் இருந்து ஆறு நாழிகை (2 மணி 24 நிமிடம்) நேரத்திற்குள் நீராடு. தோஷம் தீரும்” என்றார். கிருஷ்ணர் தீபாவளியன்று காவிரியில் நீராடி தோஷத்தை போக்கினார். கங்கையைப் போல காவிரியும் புனிதமானது என்பதால் ஐப்பசியில் இங்கு நீராடுவது சிறப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us